இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!
இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!
PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

'எஸ்.சி., எனப்படும், பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியது.
அத்துடன், 'உள்ஒதுக்கீடானது அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற, அரசியல் சட்ட விதிமுறைகளை மீறவில்லை; அனைத்து பிரிவினரும் சமநிலையை பெற உள்ஒதுக்கீடு அவசியமே' என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இதன்வாயிலாக, தமிழகத்தில் அருந்ததியினருக்கு, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின், 2009ம் ஆண்டு சட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
எஸ்.சி.,க்களுக்கான இடஒதுக்கீட்டில், அந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ள சில ஜாதியினருக்கு, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்கள் உள்ஒதுக்கீடு வழங்கினாலும், அவை சட்ட ரீதியான தடைகளை சந்தித்து வந்தன.
இந்நிலையில் தான், 'உள்ஒதுக்கீடு வழங்குவது என்பது எளிதானதல்ல; அது நியாயமான முறையில் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர், எஸ்.சி.,க்களுக்கான இடஒதுக்கீட்டால் போதிய அளவு பலன் அடையவில்லை என்பதை சரியான தரவுகள் வாயிலாக மாநில அரசுகள் நிரூபித்து, அதன் பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்துள்ள யோசனை சரியானதே.
ஏனெனில், பட்டியலின பிரிவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் உள்ளனர். அவர்களில் எந்தப் பிரிவினர் இடஒதுக்கீட்டின் பலனை அடையாமல் பின்தங்கியுள்ளனர் என்பதை, அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவீடுகள் வாயிலாக நிர்ணயித்து, அதன்வாயிலாக மட்டுமே வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது. இந்த உத்தரவை முறையாக பின்பற்றுவதன் வாயிலாக, பட்டியலினத்தில் உள்ள பல ஜாதிகளில், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே பலன் அடைந்து வருவது தவிர்க்கப்படும்.
மேலும், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஏழு நீதிபதிகளில் ஒருவரான பி.ஆர்.கவாய், எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,க்களில் முன்னேறிய பிரிவினரை அடையாளம் கண்டு, அவர்களை இடஒதுக்கீடு வரம்பில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து சரியானது தான் என்றாலும், சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அது ஏற்கப்படவில்லை.
எஸ்.சி.,க்கள் ஒரே மாதிரியான வகுப்பினர் அல்ல என்பதை, உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து உள்ளது. எனவே, எஸ்.சி., பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற முடியாது. இடஒதுக்கீடு முறையானது, பல ஆண்டுகளாக அமலில் இருந்தாலும், ஒரு பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து பிரிவினரும் சமமான வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மற்ற சமுதாயத்தினரை விட முன்னேற்றம் கண்டுள்ளனர். நலிந்த பிரிவினர் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியிருக்கும் நிலையிலும், முன்னேறிய பிரிவை சேர்ந்தவர்களே, பல தலைமுறைகளாக இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றனர்; இது சரியானதல்ல என்பதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனி ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்க விரும்பினால், அதை ஒரு விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையிலும், முறையான அளவீட்டின் அடிப்படையிலும் தான் வழங்க வேண்டும். தேர்தல் நோக்கிலோ, அரசியல் காரணங்களுக்காகவோ வழங்க முற்பட்டால், பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கும், முன்னேறிய சமூகத்தினருக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது கடினமான பணியாக இருக்கும்.
அத்துடன், உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவோரின் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். அதேநேரத்தில், தேவைப்படும் பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது, அவர்கள் முன்னேற்றம் அடைய உதவும்.
இதுபோன்ற விஷயங்களில், மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்த்து, உள்ஒதுக்கீடுகள் வாயிலாக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.