sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

தலையங்கம்

/

மருத்துவ பணியாளர் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் அவசியம் தேவை!

/

மருத்துவ பணியாளர் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் அவசியம் தேவை!

மருத்துவ பணியாளர் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் அவசியம் தேவை!

மருத்துவ பணியாளர் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் அவசியம் தேவை!


PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு வங்க தலைநகரான கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில், இம்மாதம், 8ம் தேதி இரவு, பணியில் இருந்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த அந்த பெண் டாக்டருக்கு நேர்ந்த பயங்கரம், நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திஉள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மாநில போலீசார், சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கொலையான பெண்ணின் பெற்றோர் மற்றும் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்; அத்துடன் டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரி, நாடு முழுதும் உள்ள டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கக் கோரி, தற்போது மட்டுமின்றி, இதற்கு முன்னரும் பல முறை டாக்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது, இந்தப் பிரச்னை தொடர்பாக அவர்களின் போராட்டம் நடக்கிறது.

'டாக்டர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம், அத்துடன் அபராதம் மற்றும் தண்டனையும் உண்டு' என, பல மாநில அரசுகள் சட்ட விதிகளை உருவாக்கி இருந்தாலும், அதன்படி வன்முறையில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட்டதாக தகவல் இல்லை. அதுவும், டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர காரணம்.

கோல்கட்டா மருத்துவமனையில் நடந்த கொடூரம், 2012ல் டில்லியில் ஒரு கும்பலால் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணான, 'நிர்பயா' வழக்கை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. நிர்பயா பலாத்கார வழக்கானது, அந்த நேரத்தில், நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கியதுடன், கற்பழிப்பு குற்றங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது.

அதுபோலவே, தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டிருந்ததால், கருத்தரங்கு கூடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்ற பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளது, மருத்துவ பணியில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது சரியானதே.

கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற டாக்டர்கள், நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்ததால் தான், லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இருந்தும், மருத்துவ சமுதாயத்தினரை அங்கீரிக்காத நிலையும், அவர்களுக்கு பணியில் பாதுகாப்பு இல்லாத சூழலும் தொடர்கிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்தாலும், அவர்கள் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால் உறவினர்களால் தாங்கள் தாக்கப்படுவோம் என்ற அச்சம், டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மத்தியில் தொடர்ந்தால், அவர்களால் தங்களின் கடமையை சரிவர செய்ய முடியாது. அதுமட்டுமின்றி, சுகாதார துறையினர் மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான சட்டத்தையும், மத்திய அரசு இயற்ற வேண்டியது கட்டாயமாகும்.

கடந்த, 1973ல் மும்பை மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் அருணா ஷான்பாக், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால் கோமா நிலைக்கு சென்று, 40 ஆண்டுகள் அதே நிலையில் இருந்து உயிரை விட்டார். அதுபோன்றே தற்போதைய கோல்கட்டா பாலியல் பலாத்காரமும் நிகழ்ந்துள்ளது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, சட்டங்களில் சீர்திருத்தங்கள் அவசியம்.






      Dinamalar
      Follow us