PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM

மதுபான கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியில் வந்த அவரை பார்க்கச் சென்ற, அவரது கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யும், டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால், இம்மாதம், 13ம் தேதி தாக்கப்பட்டார். அவரை தாக்கியவர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்வாதி மாலிவாலும், பிபவ் குமாரும், டில்லி போலீசில் மாறி மாறி புகார் கொடுத்துள்ளனர். லோக்சபா தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில், ஸ்வாதி மாலிவால் தாக்குதல் சம்பவம் நடந்ததால், அரசியல் ரீதியாக, அது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்த போது, நேற்று முன்தினம் பிபவ் குமார், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டில்லி பெண்கள் கமிஷன் தலைவராக இருந்த போது, அதன் நியமனங்களில் மோசடி செய்ததாக, ஸ்வாதி மாலிவால் மீது வழக்கு உள்ளது. அதிலிருந்து தப்பிக்க, மத்திய பா.ஜ., அரசு அவரை, பிளாக் மெயில் செய்து, ஆம் ஆத்மிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்படி மிரட்டியுள்ளதாக, அக்கட்சியின் தலைவர்கள் புகார் கூறுகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தில், முதல்வர் கெஜ்ரிவால் வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மற்றும் அவர்களுக்கு நீதி வழங்குவதில், ஆம் ஆத்மி கட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டின் மீது கேள்வி எழுப்புவதாகவே உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் காரணம். கெஜ்ரிவால், தன் கட்சியின் பெண் எம்.பி., மீதான தாக்குதல் குறித்து, ஒரு வார்த்தை கூட பேசாதது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவதுடன், மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும் தெரிவித்து உள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்கள் என்று வரும் போது, எந்த ஒரு அரசியல் கட்சியும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை, இந்த வழக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது கூறப்பட்டுள்ள பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள், இதை உறுதி செய்கின்றன.
அதற்கு முன், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பா.ஜ., - எம்.பி., யுமான பிரிஜ் பூஷண் சரண்சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். இந்த புகார்கள் எல்லாம், சமூகத்தில் நிலவும் ஆபத்தான போக்கையும், ஆணாதிக்க மனப்பான்மை ஆழமாக வேரூன்றி உள்ளதையுமே காட்டுகின்றன.
ஸ்வாதி மாலிவால் பிரச்னையில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. இருப்பினும், இந்தப் பிரச்னையில், டில்லி காவல் துறையினர், எந்த விதமான அரசியல் நிர்பந்தங்களுக்கும் ஆட்படாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. அதேநேரத்தில், ஸ்வாதி மாலிவால் தாக்குதல் பிரச்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, முதல்வர் கெஜ்ரிவால் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடுஞ் செயல்கள், குடும்பங்களில் நிகழ்வது சகஜமானவை என்றாலும், அரசியல் ரீதியாக செல்வாக்குள்ள, ஒரு பெண் எம்.பி.,யே தாக்கப்படுகிறார் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விஷயத்தில், நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அச்சமோ, தயவு தாட்சண்யமோ இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.

