தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ ஜனநாயகத் திருவிழாவில் ஜெயிக்கப் போவது யாரு?

ஜனநாயகத் திருவிழாவில் ஜெயிக்கப் போவது யாரு?

ஜனநாயகத் திருவிழாவில் ஜெயிக்கப் போவது யாரு?


PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தல் தேதி கடந்த மாதம், 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. 'நாடு முழுதும் உள்ள, 543 லோக்சபா தொகுதிகளுக்கும், ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகம், புதுச்சேரி உட்பட, 21 மாநிலங்களில் உள்ள, 102 தொகுதிகளில் கடந்த, 19ம் தேதி முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

வரும் ஜூன் 1ம் தேதி வரை அடுத்த ஆறு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஜூன், 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஏற்கனவே இரண்டு முறை மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைக்க நினைக்கிறது. அதனால், பிரதமர் மோடி உட்பட அக்கட்சி யின் மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி கட்சிகள், மோடி மீண்டும் பிரதமராகி விடக்கூடாது என்ற இலக்கோடு பிரசார களத்தில் உள்ளன. அத்துடன், இண்டியா கூட்டணி யில் உள்ள சில மாநில கட்சிகள், மத்தியில் பா.ஜ., அல்லாத அரசு அமைந்தால், அதில் தாங்களும் அங்கம் வகித்து, ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சலாம் எனவும், நினைக்கின்றன.

கடந்த 1999 - 2004ல், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான், வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஐந்தாண்டு ஆட்சியை பூர்த்தி செய்தது. ஆனால், கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அத்துடன், லோக்சபாவில் காங்., உறுப்பினர்களின் எண்ணிக்கையை, இரட்டை இலக்கமாகவும் குறைத்தது.

அதாவது, 2014 தேர்தலில், பா.ஜ., 282 இடங்களிலும், காங்கிரஸ் அதன் வரலாற்றிலேயே இல்லாத வகையில், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 தேர்தலில், பா.ஜ., - எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 303 ஆக அதிகரித்தது. இம்முறை காங்கிரஸ் சற்று முன்னேற்றம் கண்டு, 52 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலில், பா.ஜ.,விற்கு கிடைத்த ஓட்டானது, 37.3 சதவீதமாக எகிறியது.

தற்போதைய லோக்சபா தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பா.ஜ., நினைக்கிறது. தங்கள் கட்சி, 370 இடங்களுக்கு மேல் பிடித்து வெற்றி பெற வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

அதே நேரத்தில், பா.ஜ.,வின் பிரதான எதிரியான காங்கிரஸ், இம்முறை லோக்சபாவில் தங்கள் கட்சி எம்.பி.,க்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதனால், கூட்டணி கட்சிகள் சில நெருக்கடி கொடுத்தாலும், அவற்றை எல்லாம் சமாளித்து, அவற்றுடன் தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்திக்கிறது. சில மாநிலங்களில், தனியாக களம் காணும் சூழ்நிலையும் உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய காங்கிரசுக்கு, இந்தத் தேர்தல் மற்றொரு பரிசோதனை களமாக அமைந்துள்ளது. பா.ஜ., மற்றும் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில், தங்களின் இழந்தை செல்வாக்கை மீண்டும் பெற முற்பட்டுள்ளது.

காங்., தலைமையிலான எதிர்க்கட்சி அணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே, எந்தக் கட்சியின் தலைவர் அந்தப் பதவியை பிடிப்பார் என்பது முடிவாகும். ஆனால், பா.ஜ.,வோ மோடியை முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த தேர்தலில், 49.72 கோடி ஆண்கள், 47.15 கோடி பெண்கள் உட்பட மொத்தம், 96.88 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில் முதல் முறை வாக்காளர்கள், 1.84 கோடி. அத்துடன் ஐந்து வாக்காளர்களில் ஒருவர், 30 வயதிற்கு உட்பட்டவர்; 12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.

இவை உண்மை நிலவரங்கள் மட்டுமின்றி, மாற்றத்திற்கான முக்கியமான அடையாளங்களாகும். அதனால், ஜூன் 4ல் வெளியாகும் முடிவுகள், மத்தியில் புதிய அரசை அமைப்பது யார் என்பதையும், மக்களின் மனதை வென்றவர்கள் யார் என்பதையும் தெளிவுபடுத்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us