அதானி மீது அடுத்தடுத்து புகார்: உண்மை கண்டறிவது அவசியம்!
அதானி மீது அடுத்தடுத்து புகார்: உண்மை கண்டறிவது அவசியம்!
PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

நம் நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரரான கவுதம் அதானி, பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், கடந்தாண்டு ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது. இது, தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அத்துடன் பங்குச் சந்தையில், அதானி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
ஆனாலும், ஓராண்டில் அந்த பாதிப்பில் இருந்து அதானி குழுமம் மீண்டது. இந்நிலையில், அதானி மற்றும் அவரது தொழில் குழுமத்தின் நம்பகத்தன்மை, மீண்டும் ஒரு முறை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது, அதானி தன் தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்காக, இந்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க தயாரானதாகவும், அந்தத் தகவலை மறைத்து, அமெரிக்கர்களிடம் கணிசமான முதலீடுகளை திரட்டி உள்ளதாகவும், இது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அதானியை கைது செய்து ஆஜர்படுத்த, அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்தப் பிரச்னையால், மும்பை பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் விலை சரிந்து, முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
'அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது' என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அதானி மற்றும் அம்பானிக்கு பெரிய அளவில் சலுகை காட்டி வருவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வரும் நிலையில், அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு, அந்தக் கட்சிகளுக்கு மத்திய அரசை விமர்சிப்பதற்கான புதிய ஆயுதமாக அமைந்துள்ளது.
அதற்கேற்ற வகையில், அதானி விவகாரம் பற்றி பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை தேவை மற்றும், 'செபி'யின் தலைவரை நீக்க வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் குரல் கொடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக, 'அதானி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் காலகட்டத்தில், குறிப்பிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளே ஆட்சியில் இருந்தன. எனவே, அந்தக் கட்சியினர் தான் லஞ்சம் வாங்கியிருப்பர்' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், 'பங்குச்சந்தை ஒழுங்கு முறை வாரியமான, 'செபி'யின் தலைவர் மாதபி மற்றும் அவரது கணவர் தவல் புரி புச் ஆகியோர், அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், பெரிய அளவிலான பங்குகளை கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே, பங்கு முறைகேடு வழக்கில், அதானி குழுமம் மீது செபி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என்று முன்னர் குற்றம் சாட்டியிருந்தது. அந்தக் குற்றச்சாட்டு சாதாரணமானது என்று சொல்லும் அளவுக்கு, அமெரிக்க அரசின் தற்போதைய குற்றச்சாட்டு அமைந்துள்ளது.
அதானி குழுமமானது, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., கட்சிக்கு மிகவும் வேண்டிய நிறுவனம் என்று கூறப்பட்டாலும், அந்த நிறுவனம் முறைகேடான செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தால், அதை காப்பாற்றும் முயற்சியில் இனியும் ஈடுபடுவது சரியானதல்ல. தற்போதைய குற்றச்சாட்டு விவகாரத்தில், சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். முன்னர் பெரிய அளவில் பேசப்பட்ட போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் போல, தற்போதைய குற்றச்சாட்டும் வெளிநாட்டில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை, மத்திய அரசும் கண்டறிவது அவசியமாகும்.
அதாவது, அமெரிக்க அரசின் குற்றச்சாட்டில், இந்தியாவில் உள்ள சில மாநில அரசுகளின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளதால், அவர்கள் யார் என்பதை, புலனாய்வு அமைப்புகள் வாயிலாக மத்திய அரசு கண்டறிவது அவசியம். தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப் பில் விசாரணை ஒன்றை நடத்தினாலும் நல்லதே.
இதன் வாயிலாக, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பதை உறுதி செய்வதுடன், இந்தியாவின் வர்த்தக நலன்களை சீர்குலைக்க, இது போன்ற புகார்கள் வேண்டுமென்றே கூறப்படுகின்றனவா என்பதையும் கண்டறியலாம்.

