PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில் அதிகாலையில், 'ஏசி' ஆம்னி பஸ் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம் செய்தவர்கள் உட்பட, 20 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மற்றவர்கள் லேப்டாப், மொபைல் போன், செருப்பு உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களால், பஸ்சின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதேபோல கடந்த, 14ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஆம்னி பஸ், ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 பேர் இறந்தனர்.
இப்படி ஆம்னி பஸ்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்னுால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில், ஆம்னி பஸ்சின் டிரைவர்கள் இருவரும், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரே அன்றி, பயணியரை காப்பாற்ற சிறிதும் முயற்சிக்கவில்லை.
பஸ்சின் கதவை திறக்க அவர்கள் உதவியிருந்தால், இன்னும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். விபத்திற்குள்ளான ஆம்னி பஸ், யூனியன் பிரதேசம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டு பின், ஒடிஷா மாநில பதிவெண்ணுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆந்திரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆம்னி பஸ்களை பதிவு செய்வதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், இப்படி வடகிழக்கு மாநிலங்களிலோ அல்லது யூனியன் பிரதேசங்களிலோ பதிவு செய்யப்பட்டு மற்ற மாநிலங்களில் இயக்கப்படுகின்றன. அத்துடன், இந்த ஆம்னி பஸ்கள் எல்லாம், சுற்றுலா வாகனங்களாக இயக்குவதற்கு தான் அனுமதி பெறப்படுகின்றன.
பின், தனிப்பட்ட நபர்களுக்கு டிக்கெட் வழங்கி, குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே இயங்கும் பஸ்களாக மாற்றப்படுகின்றன. இன்சூரன்ஸ் நிறுவனங்களும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு துணை போவதுடன், இப்பஸ்கள் விபத்தில் சிக்கினால், உயிரிழப்போர் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்குகின்றன.
பண்டிகை காலங்களில் இந்த ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிக்கும் போது நடவடிக்கை எடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போக்குவரத்து துறையினரும், இந்த பஸ் உரிமையாளர்களின் விதிமீறல்களை கண்டு கொள்ளவோ, பஸ்களை முறைப்படுத்தவோ, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், விதிமீறல்களும், விபத்துகளும் தொடர்கின்றன.
மேலும், ஆம்னி பஸ்களை இயக்கும் உரிமையாளர்கள், பயணியர் வசதி என்ற பெயரில், பஸ்களில் பல மாற்றங்களை செய்கின்றனர். அத்துடன் முறையான பயிற்சி இல்லாத டிரைவர்களையும் வேலைக்கு அமர்த்துகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகள் எல்லாம், போக்குவரத்து துறை அதிகாரிகள் துணையுடனே பெருமளவு மீறப்படுகின்றன. அதுவும், ஒரு விபத்து நடந்தவுடன் அது பற்றி பெரிதாக பேசுவதும், மற்றொரு சம்பவம் நடந்ததும் பழயதை மறந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது.
ஆந்திர மாநில விபத்திற்கு பிறகாவது, அனைத்து மாநில அரசுகளும் ஆம்னி பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும், அவற்றின் பதிவை அந்தந்த மாநிலங்களில் நியாயமான கட்டணத்தில் மேற்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். நன்கு பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்கிய நபர்கள் மட்டுமே, இதுபோன்ற பஸ்களை இயக்குவதையும் கட்டாயமாக்க வேண்டும்.
ஒவ்வொரு பஸ்சும், சரியான பாதுகாப்பு விதிமுறைகளின்படி இயக்கப்படுவதை உறுதி செய்ய, போக்குவரத்து துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். முறையான பரிசோதனைகள் எதுவும் இல்லாமல், பஸ்கள் இயக்கத்திற்கான சான்றிதழ்கள் தருவதையும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, ஆம்னி பஸ்களின் இயக்கம் தொடர்பாக ஒரு குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை பெற்று, அவற்றை மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும். சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஆம்னி பஸ்களில் சிறப்பான, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும். இனியாவது அரசுகள் விழித்துக் கொண்டால் சரி!

