PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுடன், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், தன் வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், அங்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ராகுலின் சகோதரியும், ராஜிவ் - சோனியா தம்பதியின் மகளுமான பிரியங்கா, 4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதனால், பிரியங்காவின் அரசியல் வாழ்க்கையில், இந்த வெற்றியானது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், காங்கிரஸ் கட்சிக்கும் உத்வேகம் தருவதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே பிரியங்காவின் தாய் சோனியாவும், சகோதரர் ராகுலும் எம்.பி.,க்களாக உள்ள நிலையில், மூன்றாவதாக பிரியங்காவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் வாயிலாக, அரசியலில் சோனியா குடும்பத்தின் ஆதிக்கமும், காங்., கட்சியின் வாரிசு அரசியலும் அதிகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின், எட்டு ஆண்டுகள் கழித்து, 1999ல், உ.பி., மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், அவரின் மனைவியான, காங்., கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா, முதல்முறையாக போட்டியிட்டார். அப்போது, அவருக்காக தீவிர பிரசாரம் செய்தார் பிரியங்கா.
இதன்பின், 2004ல், ரேபரேலி லோக்சபா தொகுதியில் சோனியா களமிறங்கிய போதும், அவரின் பிரசார மேலாளராக செயல்பட்டார். 2004 முதல், 2014 வரை, மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி வகித்த போதும், பிரியங்கா தீவிர அரசியலுக்கு வரவில்லை; ஒதுங்கியே இருந்தார்.
பிரியங்காவின் முறையான அரசியல் பிரவேசம், 2019ன் பிற்பகுதியில், அதாவது, கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட பிறகே துவங்கியது; 2020ல், நாட்டிலேயே பெரிய மாநிலமான உ.பி.,யில் கட்சி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பொறுப்பிலிருந்து, 2023ல் விலகினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கணிசமான இடங்களை பெற்ற பிறகே, பார்லிமென்டிற்கு பிரியங்கா செல்வதற்கான நேரம் வந்து விட்டது என, காங்கிரஸ் மேலிடம் கருதி, வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தியது. காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்த்தபடி, அவர் வெற்றியும் பெற்று பார்லிமென்டிற்கு சென்று வருகிறார்.
முன்னர் காங்., தலைவராகவும், தற்போது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வரும் ராகுல், ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கடும் விமர்சனங்களை, அவ்வப்போது எதிர்கொண்டு வருகிறார்.
அப்படிப்பட்ட தருணத்தில், எம்.பி.,யாகி உள்ள பிரியங்காவின் மக்களை கவரும் தோற்றமும், அவரின் பேச்சுத் திறமையும், காங்., கட்சிக்கு மதிப்புமிக்க சொத்தாக அமையும் என, தொண்டர்களால் நம்பப்படுகிறது.
மேலும், வாக்காளர்களின் உணர்வுகளை, குறிப்பாக பெண்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து, தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா பேசியதால் தான், அவரால் வயநாட்டில் பெரிய அளவிலான வெற்றியையும் பெற முடிந்தது. எனவே, கட்சியில் பிரியங்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது, தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் புத்துணர்ச்சியை தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நேரத்தில், பிரியங்கா எம்.பி.,யாகி உள்ளதால், அவரால் கட்சி இழந்துள்ள செல்வாக்கை மீட்டெடுக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதற்கு அவர், வாரிசு அரசியலின் தொடர்ச்சியாக பெயரளவுக்கு செயல்படாமல், கட்சியில் மாற்றங்களை, சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் தலைவராக உருவெடுக்க வேண்டும்.
அப்போது தான், பலமான கட்டமைப்புடன் உள்ள பா.ஜ., கட்சிக்கு சரியான போட்டியாக காங்கிரஸ் உருவெடுக்கும். இதற்கு பல சவால்களை பிரியங்கா எதிர்கொள்ள நேரிடும். சவால்களை சந்தித்து பாட்டி இந்திரா போல அரசியலில் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.