/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
வீட்டிற்குள் உதித்த சிந்தனையால் நாடு கடந்து வெற்றி :'ஸ்டார்ட் அப்'பில் சாதிக்கும் மதுரை கிருத்திகா
/
வீட்டிற்குள் உதித்த சிந்தனையால் நாடு கடந்து வெற்றி :'ஸ்டார்ட் அப்'பில் சாதிக்கும் மதுரை கிருத்திகா
வீட்டிற்குள் உதித்த சிந்தனையால் நாடு கடந்து வெற்றி :'ஸ்டார்ட் அப்'பில் சாதிக்கும் மதுரை கிருத்திகா
வீட்டிற்குள் உதித்த சிந்தனையால் நாடு கடந்து வெற்றி :'ஸ்டார்ட் அப்'பில் சாதிக்கும் மதுரை கிருத்திகா
ADDED : மார் 02, 2025 04:07 PM

ஏதாவது ஒரு நொடியில் உதிக்கும் சிந்தனை பெரிய வெற்றிக்கு காரணமாக அமையும். அந்த வகையில் வீட்டிற்குள் குழந்தையை பராமரிக்கும் போது தோன்றிய சிந்தனையால் இயற்கை அழகு பொருட்கள் தயாரிப்பு தொடர்பான 'ஸ்டார்ட் அப்' தொழிலில் நாடு கடந்து சாதிக்கும் பெண்ணாக அடையாளம் காணப்படுகிறார், மதுரை கிருத்திகா.
சாதனை பயணம் குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம் அவர்...
பிறந்தது சென்னை என்றாலும் புகுந்த வீடு மதுரை தான். பி.இ., இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், எம்.பி.ஏ., இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட்டர் படித்து 15 ஆண்டுகளாக துபாயில் ஐ.டி., கம்பெனியில் பணியாற்றினேன். கணவர் கார்த்திக், ஆடிட்டர். 7 மாதங்களுக்கு முன் தான் மதுரை திரும்பினோம்.
துபாயில் இருக்கும் போது 7 ஆண்டுகளுக்குமுன் பிறந்த எனது 2 வது பெண் குழந்தைக்கு ஸ்கின் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. அவள் நலன் கருதி வேலையை விட்டு வீட்டில் இருந்தேன். அப்போது என் மகளுக்கு வந்த ஸ்கின் தொடர்பான பிரச்னைக்கு கூகுளில் இயற்கையான வைத்திய முறை குறித்து தேடினேன். பல சுவராஸ்யங்கள் எனக்கு கிடைத்தன.
பாட்டி வைத்திய சிந்தனையுடன் இயற்கை பொருட்களை கொண்டு நானே தயாரித்த ஒரு 'பாட்டி மருந்து' (கிரீம் வகை) வகையால் மகளின் பிரச்னை தீர்ந்தது. இதனால் இயற்கை அழகு பொருட்கள் தயாரிப்பு மீது கூடுதல் ஆர்வம் ஏற்பட்டது.
இதற்காக யு.கே.,யில் உள்ள பல்கலையில் 'அட்வான்ஸ் நேச்சுரல் ஸ்கின் கேர் பார்முலேஷன்' உள்ளிட்ட படிப்புகளை தேடிச் சென்று படித்தேன். 7 ஆண்டுகள் படிப்பு, அனுபவத்தை தொடர்ந்து தொழில் ரீதியாக இயற்கை அழகு பொருட்கள் தயாரிக்கும் முழு தகுதியை பெற்றேன். கோவிட் காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகம் இருந்ததால், அப்போது நிறுவனம் துவங்கியிருந்த எங்களுக்கும் ஏற்ற சூழல் கிடைத்து, வெற்றி பெற எளிதாகியது.
தற்போது பேஸ், கேர், லிப்ஸ், பாடி ஸ்கின் என நான்கு வகையில் 35 க்கும் மேற்பட்ட இயற்கை அழகுப் பொருட்கள் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்கிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் என பல உலக நாடுகளில் வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளேன். எனது பொருட்கள் அமேசான், பிளீப்கார்ட்டிலும் கிடைக்கின்றன.
இதுதவிர நேச்சுரல் ஸ்கின் கேர் பொருட்களை மட்டும் அங்கீகரிக்கும் உலகில் உள்ள 'டாப் 7' ஆன்லைன் விற்பனை தளங்களில் எங்கள் பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
மதுரைக்கு பெருமை சேர்க்கும் முற்றிலும் இயற்கை குணங்களுடன் தயாரிக்கப்பட்ட தாழம்பூ குங்குமம் 'அமேசான் இந்தியா'வில் ஆல் இந்தியா அளவில் 6வது 'ரேங்க்'கில் உள்ளது. கம்பெனி அளவில் 41வது ரேங்க் பெற்றுள்ளோம். இது மதுரைக்கு பெருமையே.
வாடிக்கையாளர்களின் பிரச்னை குறித்து ஆன்லைனில் நாங்கள் கேட்கும் 8 கேள்விகளுக்கு, அவர்கள் அளிக்கும் பதில் மூலம் அவர்களின் ஸ்கின் தன்மை அறிந்து அதற்கான அழகுப் பொருட்களை கூரியரில் அனுப்புகிறோம். உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இயற்கை பொருட்களை அதிகம் தேடத் துவங்கியுள்ளனர். தற்போது ஆண்டிற்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் வருவாய் கிடைக்கிறது.
என் தொழிலுக்கு கணவர், அவரது சகோதரி சசிகலா ஆகியோர் உறுதுணையாக உள்ளனர். வருவாய் கோடிகளை தாண்டி பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக உயர்த்தும் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன் என்கிறார் நம்பிக்கை நாயகி கிருத்திகா.