/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
அம்மாவும் நானும்... கொஞ்சம் பாடல்களும்!
/
அம்மாவும் நானும்... கொஞ்சம் பாடல்களும்!
ADDED : மே 12, 2024 04:28 AM

குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பெற்றோர் முயல்வது இயல்பு. ஆனால் இங்கே, அம்மாவின் இசைத் திறமையை பிரபலமாக்கி அவரை 'செலிபிரிட்டியாக்கி' இருக்கிறார் மகன் சனாதன் ஸ்ரீ கிருஷ்ணன்.
அவரே கூறுகிறார்... சொந்த ஊர் சென்னை. தந்தை சங்கர் ராமன் இந்திய கப்பல் படையில் பணியாற்றினார். என்னுடைய 4 வயதில் இறந்து விட்டார். அம்மா வசந்தா இசையில் பிஎச்.டி., பெற்றுள்ளார். அம்மாவும், பெரியம்மாவும் இணைந்து 'சிலோன் சிஸ்டர்ஸ்' என அவரின் 5 வயது முதல் கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி உள்ளனர். அவர் அகில இந்திய வானொலியில் 'ஏ' கிரேடு இசைக்கலைஞராக இருந்து வருகிறார். குடும்பத்தினர் இசைக் கலைஞர்களாக இருந்தும் எனக்கு சிறு வயதில் இசை நாட்டம் ஏற்படவில்லை.
ஆனால் 9ம் வகுப்பு முதல் இசை ஆர்வத்தால் பியானோ துவங்கி டிஜிட்டல் சாப்ட்வேர் வரை கற்றுக்கொண்டேன். பிளஸ் 2 முடித்த பிறகு அமெரிக்காவின் பெர்கிஸ் பல்கலையில் சவுண்ட் இன்ஜினியரிங் படிப்பை ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டேன்.
சுயமாக இசை அமைத்து பாடல்களை யுடியூப் சேனலில் பதிவிட துவங்கினேன். மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே குறும்படங்களுக்கு இசை அமைத்திருந்த அனுபவம் கைக்கொடுத்ததாலும், சவுண்ட் இன்ஜினியரிங்கில் கற்றுக்கொண்டதை வைத்தும் இசை பயணத்தை துவங்கினேன்.
எல்லோரையும் போல் இல்லாமல் தனித்துவமாக செயல்பட அம்மாவிடம் பேசிய போது, இருவரும் இணைந்து பாடினால் நன்றாக இருக்கும் என அவர் கூறியது நல்ல யோசனையாக இருந்தது. அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என அவரிடம் தெரிவித்த போது தயங்கினார்.
பல கச்சேரிகளை நிகழ்த்தியவருக்கு சமூக வலைதளம் புதிது. இது குறித்து அம்மாவிற்கு இருந்த சந்தேகங்களை தீர்த்தேன். அப்படி உருவானது தான் 'அம்மாவும் நானும்' என்ற 'ஓல்டு வெர்சஸ் நியூ' கலவை. முதன் முதலாக இருவரும் இணைந்து பாடிய பாடலை இன்ஸ்டாவில் வெளியிட்டபோது, வரவேற்பு கிடைத்தது. இந்த மாதிரி பாடுவது புதுமையாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது என பாராட்டு குவிந்தது.
அதன் பின் அனைத்து மொழி பாடல்களையும் கர்நாடக இசையில் அம்மாவும், அதற்கு இணையான தமிழ் பாடலை நானும் இணைந்து பாடி பதிவிட்டோம். இதனால் எங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
2022 ல் துவங்கிய 'அம்மாவும் நானும்' பயணம் இரண்டே ஆண்டுகளில் அம்மாவை 'செலிபிரிட்டியாக' மாற்றிவிட்டது. தற்போது அவர் எங்கே சென்றாலும் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு அவருக்கு அளவில்லா ஆனந்தத்தை தருகிறது.
இசையமைப்பாளராகும் கனவு உள்ளது. அப்போது அம்மாவுடன் இணைந்து பாடி திரைப்படத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். இருவரும் இணைந்து நேரடியாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.
அம்மாவின் திறமையை உலகத்திற்கு வெளிப்படுத்தி சாதித்த, சனாதன் ஸ்ரீ கிருஷ்ணன் நிஜமான சாதனையாளர் தான்!