/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பட்டு... பாட்டு... பாரம்பரியம்... ரேவதி கிருஷ்ணா பளீச்
/
பட்டு... பாட்டு... பாரம்பரியம்... ரேவதி கிருஷ்ணா பளீச்
பட்டு... பாட்டு... பாரம்பரியம்... ரேவதி கிருஷ்ணா பளீச்
பட்டு... பாட்டு... பாரம்பரியம்... ரேவதி கிருஷ்ணா பளீச்
ADDED : ஆக 25, 2024 11:32 AM

நம் நாட்டில் வீணை ஒரு இசைக்கருவியாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. கல்விக்கு அதிபதியான கலைவாணியின் கையிலுள்ள வீணை பூஜைக்குரிய தெய்வீக கருவியாக கருதப்படுகிறது. ''வீணை வாத்தியம் வாசிப்பவர்களை மட்டுமின்றி கேட்பவர்களையும் மோட்சத்துக்கு கூட்டி போகும் மகத்துவம் வாய்ந்தது,'' என காஞ்சி மஹா பெரியவர் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட வீணை இசையை மேடைகளில் வாசிப்பதுடன் மட்டுமின்றி அடிதட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் வீணை இசைக் கலைஞர் ரேவதிகிருஷ்ணா.
ஐந்தாவது தலைமுறை இசை பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இவர் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மதுரையில் தமிழ் இசை சங்க விழாவில் கச்சேரி நடத்த வந்தவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது...
சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் தில்லைதானம். தியாகபிரம்மத்தின் சீடரான ராமஅய்யங்காரின் கொள்ளுபேத்தி என்ற பெருமையும் எனக்கு உண்டு. தியாகபிரம்மம் இயற்றிய கீர்த்தனைகளை என் கொள்ளு தாத்தா ஓலைச்சுவடிகளில் எழுதியதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.
தாத்தா சீனிவாசராகவன் டாக்டராக இருந்தாலும் கர்நாடகா சங்கீதம் இசைப்பவர். அப்பா செல்வக்குமாரும் டாக்டர். மதுரை, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரிகளில் டீன் ஆக பணிபுரிந்தவர். அவரும் புளூட் நன்றாக வாசிப்பார். அம்மா லட்சுமி வயலின் கலைஞர். இதனால் சிறு வயதிலேயே இசைஞானம் எனக்கு உண்டு. முன்பு வீடுகளில் சிறிய அளவிலான வீணையை வைத்திருப்பர். ஐந்து வயதாக இருக்கும் போது வீட்டில் பூஜை அறையில் இருக்கும் வீணையை எடுத்து வாசிப்பேன். அந்தளவுக்கு வீணை மீது அப்படியொரு ஈர்ப்பு. என் ஆர்வத்தை புரிந்து கொண்டு வீணையை முறையாக இலக்கணம் பிறழாமல் வாசிக்க வேண்டும் எனக் கருதி பெற்றோர் மதுரை சங்கீத சமாஜ இசை பேராசிரியர் சுந்தரம்அய்யரிடம் சேர்த்து விட்டனர். அவரிடம் தான் வீணை இசைக்க கற்றேன்.
அப்பா மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் பணிபுரிந்ததால் அப்போது மதுரையில் வசித்தோம். இங்கு தான் பள்ளி, கல்லுாரி படிப்பையும் முடித்தேன். பள்ளிக்கல்வியுடன் வீணை இசையையும் முறையாக கற்றேன். 1971 காலகட்டத்தில் மதுரை திருநகரில் நடந்த ராமநவமி உற்ஸவத்தில் 16 வயதில் என் வீணை இசை அரங்கேற்றம் நடந்தது. அன்று துவங்கிய இசைப் பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
இடையில் காஞ்சிபுரம் கிருஷ்ணனுடன் திருமணம் நடந்தது. பட்டுப்புடவை உற்பத்தி, விற்பனையில் ஐந்தாவது தலைமுறையாக ஈடுபட்டுள்ள என் கணவர் குடும்பமும் பட்டு பாரம்பரியத்தை போற்றி பாதுகாத்து வருகின்றனர். இதனால் பட்டு, பாட்டு, பாரம்பரியம் என் வாழ்வுடன் இணைந்த ஒன்றாகி விட்டது.
கூட்டுக்குடும்பத்தில் முதல் மருமகள் என்பதால் சில காலம் வீணை இசைப்பது தடைபட்டது. காஞ்சியில் மஹா பெரியவா உற்ஸவத்தில் வீணை வாசித்தேன். அதனை கவனித்த சென்னை கிருஷ்ண கான சபா செயலாளர் யக்ஞராமன் வீணை இசை வீட்டுடன் முடங்கக்கூடாது என எனக்கு உற்சாகமூட்டி பல சபாக்களில் இசை கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்தார். அன்று முதல் இன்று வரை இசை, கோயில், திருமண விழா என இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் என் வீணை இசை ஒலித்து கொண்டுள்ளது.
கச்சேரிகளுக்கு அனைத்து தரப்பினரும் வருவர். அவர்கள் மட்டுமின்றி அடித்தட்டு மக்களையும் வீணை இசை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகா சங்கீதத்துடன் தெய்வீக, சினிமா பாடல்களையும் வீணையில் வாசித்து வருகிறேன். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைக்கிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து வீணை இசை குறித்து ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறேன்.
ஒரு முறை சிதம்பரம் கோயில் விழாவில் கச்சேரி நடத்தி கொண்டிருந்தேன். சிவன் தலம் என்பதால் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... தில்லை அம்பல நடராஜா... போன்ற பாடல்களை வீணை இசையாக தந்து கொண்டிருந்தேன். அப்போது மேடை ஏறிய ஏழ்மையான தோற்றத்தில் இருந்த முதியவர் என்னை பாராட்டி ஆசி வழங்கி ஒரு பேப்பரையும் திணித்து விட்டு இறங்கி சென்றார்.
வீட்டிற்கு சென்று பேப்பரை திறந்த போது அதில் 50 ரூபாய் இருந்தது. சிதம்பரம் நடராஜரே முதியவர் தோற்றத்தில் வந்து ஆசிர்வசித்து வழங்கியதாக நெகிழ்ச்சியுற்றேன். இன்றும் என் பூஜை அறையில் அந்த ரூபாயை பாதுகாத்து பூஜித்து வருகிறேன்.
ஜப்பானில் சில ஆண்டுகளுக்கு முன் 'ஏசியன் பசிபிக் கல்சுரல் பெஸ்ட்வெல்' நடந்தது. திறந்தவெளி அரங்கில் பலத்த மழைக்கு மத்தியில் விழா நடந்தது. என் இசையை குடை பிடித்தபடி அங்குள்ள இந்தியர்கள் மட்டுமின்றி ஜப்பானியர்களும் கேட்டு ரசித்ததை மறக்க முடியாது.
எல்லா தரப்பினரும் புரிந்து ரசிக்கும் வகையில் நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியமிக்க இக்கலையை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.
இவரது வீணை இசை கேட்க 93810 41789
அடித்தட்டு மக்களையும் வீணை இசை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகா சங்கீதத்துடன் தெய்வீக, சினிமா பாடல்களையும் வீணையில் வாசித்து வருகிறேன்.
இளம் கலைஞர்கள் முறையாக கற்று ஆபாசமில்லாமல் ஆடி நாட்டுப்புறக் கலையை வளர்க்க வேண்டும் என்பதே என் ஆசை