ADDED : ஆக 25, 2024 11:30 AM

இன்ஸ்டாகிராமில் ஆடுவது, பாடுவது, அழுவது, சிரிப்பது, நடிப்பது, மிமிக்கிரி செய்வதை ரீல்ஸ்களாக வெளியிடுகின்றனர். இதனால் சிலரின் வாழ்க்கை நினைக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் சிலர் தாங்கள் செய்யும் தொழிலால், இன்ஸ்டாகிராம் மூலம் முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
அப்படிப்பட்டவர் தான் இன்ஸ்டாகிராமில் 'டெய்லர் அக்கா' என அழைக்கப்படும் சென்னை அயனாவரத்தை சேர்ந்த தயாளு. இவர் பெண்களுக்கான விதவிதமான ஆடைகளை வடிவமைப்பது குறித்து பதிவிட்டு தனக்கென ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்ததாவது: டெய்லரான என் அம்மா யுடியூப் சேனலும் நடத்துகிறார். இயற்கை முறையில் சோப்பு, பவுடர், உணவு பொருட்கள், பூஜை பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார். என் வீட்டில் தையல் மிஷின் இருப்பதால் துணிகளை தைக்க சிறுவயதிலிருந்தே ஆசை இருந்தது. 6ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நடந்த போட்டியில் 'பேப்ரிக் பெயின்டிங்' செய்தேன். இதில் ஆர்வம் இருந்ததால் 'பேஷன் டிசைனிங் கார்மென்ட்ஸ் டெக்னாலஜிஸ்' படிப்பை படித்தேன். 'கிளாஸ் பெயின்டிங்' செய்வதோடு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் இருந்தது.
அடுத்து நான் அணியும் துணிகள் மீது ஓவியம் வரைந்தால் எப்படி இருக்கும் என நினைத்து அதில் வரைந்து பார்த்தேன். என் உடையை நானே வடிவமைத்து அணிய ஆரம்பித்தேன். அதை பார்த்து என் தோழிகள் 'எனக்கும் இதேபோல் செய்து தா' என கேட்கும் அளவிற்கு புதிய டிசைன்களால் என் உடை ஒளிர்ந்தது. கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கினேன். அப்போது என்னை நானே உணர ஆரம்பித்தேன். மீண்டும் ஓவியம் வரைதல், கைவினை பொருட்களை கொண்டு நகைகள் செய்வது என ஈடுபட்டேன். நான் முறையாக டெய்லரிங் கற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஒருவரிடம் முறையாக கற்றுக்கொண்டேன்.
அதன்பின் நண்பர்கள்,தெரிந்தவர்களுக்கு மட்டும் ஆடைகளை வடிவமைத்து கொடுத்தேன். இன்ஸ்டாவில் 'தயாளுடிசைன்ஸ்' எனும் பக்கத்தை ஆரம்பித்து அதில் பெண்களுக்கான 'குர்த்தி' உடையை எப்படி சரியாக வடிவமைக்க வேண்டும் என்று விளக்கம் கொடுக்கும் வீடியோ பதிவிட்டேன். அதை 60 லட்சம் பேர் பார்த்ததன் மூலம் இன்ஸ்டாகிராமில் 'வைரலானேன்'. அதிலிருந்து அதிகமானோர் உடைகள் வடிவமைப்பது குறித்த சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தனர். என் விளக்கம் பலருக்கும் பிடித்து போயிற்று.
புது புது டிசைன்களில் பிளவுஸ்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது போன்ற வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டேன். ஆன்லைனில் 'டெய்லரிங்' குறித்து பாடம் நடத்த முடிவு செய்து அறிவித்திருந்தேன். அதை பார்த்து எகிப்து, மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தனர். தற்போது பல பேட்ச்களாக 5 ஆயிரத்திற்கு மேலானோருக்கு ஆன்லைனில் 'டெய்லரிங்' பயிற்சி கொடுக்கிறேன். பங்கேற்கிறவர்களுக்கு தனியாக வீடியோவும் அனுப்புவேன். இதற்காக ஒரு செயலியும் வடிவமைத்துள்ளோம். அதிலும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பேட் கமென்ட்ஸ், குட் கமென்ட்ஸ் எல்லாம் வரத்தான் செய்கிறது. பேட் கமென்ட்ஸ்களை நான் பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை. பணம் கொடுத்து பயிற்சி எடுக்க முடியாதவர்களுக்காக 'யுடியூபில்' இலவசமாக கற்றுகொள்ளும் வகையில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளேன். சில பெண்கள் சோஷியல் மீடியாவிற்குள் வர அச்சப்படுகிறார்கள். எல்லாரும் எல்லாவற்றையும் கடந்து தான் வாழ்வில் சாதனை படைக்க முடியும். ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் 'பேன் பேஜ்' ஆரம்பித்து என் வீடியோவை பதிவேற்றம் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

