/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நமது குழந்தைகளுக்கு நாமே ரோல் மாடல்: வெற்றிப்பெண் ஹஜீனா
/
நமது குழந்தைகளுக்கு நாமே ரோல் மாடல்: வெற்றிப்பெண் ஹஜீனா
நமது குழந்தைகளுக்கு நாமே ரோல் மாடல்: வெற்றிப்பெண் ஹஜீனா
நமது குழந்தைகளுக்கு நாமே ரோல் மாடல்: வெற்றிப்பெண் ஹஜீனா
ADDED : செப் 15, 2024 06:36 AM

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வரிகளுக்கேற்ப, சோதனைகள் பல கண்டாலும் மனம் தளராமல் சாதனை கண்ட பெண்மணிகளில் ஒருவராய் பேக்கிங் தொழிற்பயிற்சி மையம் நடத்தி பலரை தொழில் முனைவோராக மாற்றி வருகிறார் சென்னையை சேர்ந்த ஹஜீனா.
தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை முடித்துள்ள ஹஜீனாவின் வாழ்க்கையும் திருமணம், குழந்தைகள், குடும்பம் என ஒரு வட்டத்திற்குள் இருந்தது.
திருமணம் முடிந்து கணவர், குழந்தைகள் என தனிக் குடும்பம் இருந்தாலும் பெண்ணிற்கு பெற்றோருக்கு நிகராக எவராலும் இருக்க முடியாது தானே. ஹஜீனாவின் தந்தை திடீரென உயிரிழந்துவிட இவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த பேரிழப்பிலிருந்து மீள முடியாமல் இருந்த இவருக்கு கை கொடுத்தது இவரின் பேக்கரி தயாரிப்புகள். வீட்டிலிருந்தே கேக்குகள், இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினார்.
திருமணம் ஆகி விட்டால், பெண் ஏன் வேலைக்கு செல்ல வேண்டுமென்ற கேள்வி இன்றளவிலும் இந்த சமூகம் எழுப்பிக்கொண்டு இருப்பது வருத்தமான விஷயம். ஒரு பெண் சொந்த தொழில் ஆரம்பித்தால் குடும்பத்தினரே வேண்டாம் என்பர்.
அந்த சூழ்நிலையில் தனக்கென வருமானம் வேண்டும் என்ற எண்ணம் இவரை படிப்படியாக நகர்த்தியது. பேக்கிங் தொழில் குறித்த பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கற்றுக் கொண்டு, உழைப்பே மூலதனம் என தொடங்கிய பயணம் இன்று வெற்றிப் பயணமாக மாறியிருக்கிறது.
ஆரம்பத்தில் பெரிய வணிக பின்புலம் இல்லாத நிலையில் தான் கற்ற படிப்பினை கொண்டு இணையதளத்தினை வியாபாரத் தளமாக மாற்றினார். இணையத்தில் தன் பொருட்கள் குறித்த விவரங்களை பதிவேற்றியது பலரை இவரின் வாடிக்கையாளர்களாக மாற்றியிருக்கிறது. கொரோனா காலம் இவரின் வியாபாரத்தை பன்மடங்கு விரிவடைய வைத்தது.
டெசர்ட்ஸ், பிஸ்காப் கேக்ஸ், காட்டன் மிட்டாய் கேக் உட்பட இவரின் பல்வேறு பேக்கிங் தயாரிப்புகளுக்கு தனிமவுசு உண்டு. தான் கற்ற விஷயத்தை பலருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இவரை பேக்கிங் தொழிற்பயிற்சி வகுப்புகளை தொடங்க வைத்துள்ளது. தற்போது ஒரு நிறுவனத்தை உருவாக்கி பலருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் பலருக்கு நேரில் சென்று இலவச பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோராக மாற்றி வருகிறார். இவரிடம் பயிற்சி எடுத்த பலர் தற்போது சொந்தமாக பேக்கிங் பிஸ்னஸ் தொடங்கி உள்ளனர். கணவரை இழந்த பெண்கள், பெற்றோர் இல்லாதவர்களுக்கு சலுகை முறையில் பயிற்சி அளித்து வருகிறார்.
இதன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஹஜீனா கூறியதாவது : குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை சுருங்கினாலும் பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும். தனக்கென வருமானம் இருப்பது கூடுதல் பலம். நமது குழந்தைகளுக்கு நாமே ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும். யாராவது இதை செய்யமுடியாது என்றால் அதனையே செய்யுங்கள். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்றார்.