/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கீர்த்தனைகள் பாடுவதில் மாணவியின் கீர்த்தி
/
கீர்த்தனைகள் பாடுவதில் மாணவியின் கீர்த்தி
UPDATED : ஆக 03, 2025 07:56 AM
ADDED : ஆக 02, 2025 11:33 PM

''ஒ ரு விஷயத்தை செய்து காட்டுங்கள் என்று சொல்வதை விட, நாமே அதை செய்து காட்டுவது தான், சிறந்தது. அந்த எண்ணத்தில் தான், கீர்த்தனைகளை பாடுவதில் சாதனை படைக்க துவங்கியிருக்கிறேன்'' என்கிறார், திருப்பூர் பாண்டியன் நகரில் வசிக்கும் கல்லுாரி மாணவி தேவதர்ஷினி.
கோவை, பேரூர் கலை அறிவியல் மற்றும் தமிழ்க்கல்லுாரியில், பி.ஏ., தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கீர்த்தனைகள், திருவாசகம், பன்னிரு திருமுறை, முருகவேள் பன்னிரு திருமுறையில் உள்ள பாடல்களை பாடுவதில், புலமை பெற்று வருகிறார்.
சமீபத்தில், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை போற்றி பாடக்கூடிய அருட்பாடல்களாக விளங்கும் முருகவேள் பன்னிரு திருமுறை, 5,414 பாடல்களை, 77 மணி நேரம் 30 நிமிடம், 15 வினாடிகளில் பாடி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதற்கு முன்னதாக, 2023ல், பன்னிரு திருமுறை, 18,327 பாடல்களை, 183 மணி நேரம், 43 நிமிடம், 33 வினாடிகளில் பாடி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கடந்த, 2022ல், பன்னிரு திருமுறைகளில், 8ம் திருமுறை, திருவாசகம், 658 பாடல்களை, 3 மணி நேரம், 11 நிமிடங்களில் ஓதி, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்.
தேவதர்ஷினி கூறியதாவது:
சாதனை புத்தகத்தில் அடுத்தடுத்து இடம் பெற வேண்டும் என்ற என் முயற்சிக்கு கல்லுாரி நிர்வாகத்தினர் பெரும் உதவி, ஊக்குவிப்பாக உள்ளனர்.அடுத்த சாதனையாக, பேரூர் புராணம், 2,220 பாடல்களை முற்றோதல் செய்ய பயிற்சி பெற்று வருகிறேன்.
தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தான் இந்த எண்ணம் வந்தது. ஆர்வமுள்ள பலரும் இத்தகைய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியை தொடர்கிறேன். தமிழ் பயில்வதால் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர்ந்து கொண்டேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தேவதர்ஷினியின் தந்தை சண்முகம். பனியன் நிறுவனம் வைத்துள்ளார். தாய் ஷியாமளா தேவி; இல்லத்தரசி. சகோதரர் தன்வந்த் ஆகியோர் இவரின் முயற்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு தருகின்றனர்.
ஆர்வம் வந்தது எப்படி?
ஐந்து வயதில் இருந்தே, கர்நாடக இசை, பரதம் பயின்று வருகிறேன். 5 ஆண்டுக்கு முன் தான், கர்நாடக சங்கீதத்தில் கீர்த்தனைகள் படிக்க துவங்கினேன். ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போதும், ஒரு கீர்த்தனையாவது பாட வேண்டும் என்பது என் ஆசை. மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பாடிய போது, அங்கிருந்த குருக்கள், குரல் வளம் நன்றாக இருப்பதால் திருவாசகம், தேவாராம் பாடும்படி கூறினார். அதன்பின்னரே, திருவாசகம் படிக்க துவங்கினேன்.
தொடர்ந்து திருமுறைகள் மீது ஆர்வம் வர, கோவை ஓதுவார் கமலக்கண்ணனிடம் முறைப்படி கற்றுக்கொண்டேன். பின், முற்றோதல் செய்ய துவங்கினேன். சிவபெருமானுக்கு உள்ளது போன்று, முருகப்பெருமானுக்கும், 12 திருமுறைகள் இருப்பதையும், பெரிய புராணம் போலவே முருகப் பெருமானுக்கு சேய் தொண்டர்கள் புராணம் இருப்பதும் தெரிய வர அவற்றை படிக்க துவங்கினேன்.
- தேவதர்ஷினி, கல்லுாரி மாணவி.