/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சாமக்கோடங்கிகளின் வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் 'இரவோடி'
/
சாமக்கோடங்கிகளின் வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் 'இரவோடி'
சாமக்கோடங்கிகளின் வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் 'இரவோடி'
சாமக்கோடங்கிகளின் வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் 'இரவோடி'
ADDED : ஜன 04, 2026 05:32 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம், எழுத்தாளர் என்.ஸ்ரீராம் எழுதிய 'இரவோடி' என்ற- நாவல் குறித்து எழுத்தாளர் நிர்மால்யா தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். நான் மலையாளம் மற்றும் தமிழ் நாவல்களை தொடர்ந்து வசித்து வருபவன். மலையாளத்தில் இருந்து சிறந்த நாவல்களை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறேன். சமீபத்தில் என்.ஸ்ரீராம் எழுதிய, 'இரவோடி' என்ற- நாவல் வாசித்தேன்.
கடந்த, 10 ஆண்டுகளில் வெளிவந்த பிற இந்திய மொழி நாவல்களுடன், குறிப்பாக மலையாள நாவல்களுடன் ஒப்பிடும் போது, தமிழ் நாவல் களம் சிறப்பாக வளர்ந்துள்ளது என்பதற்கு, என்.ஸ்ரீராம் எழுதிய, 'இரவோடி' -நாவலை உதாரணமாக சொல்லலாம்.
சாமக்கோடங்கிகளின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு, உன்னதமான ஒரு நாவலை உருவாக்கி இருக்கிறார். சிவபெருமானின் சாபத்தால் சாமக்கோடங்கிகளாக மாறியவர்களின் தொன்மக்கதையை, ஒரு மானுடவியல் ஆய்வாளரின் கோணத்தில் ஆய்வு செய்து, இந்த நாவலைப் படைத்திருக்கிறார்.
தமிழ் நாவல் வரலாற்றில் யாரும் தொட்டுப் பார்க்காத நாவல் களம் மட்டுமல்ல, குடுகுடுப்பைக்கார சமூகத்தினர் மீது படிந்துள்ள மாசுகளை, இந்த நாவல் வழியாக களைந்திருக்கிறார்.
முத்துச்சாமி வாத்தியாரின் உதவியால், வீரன் என்கிற சாமக்கோடங்கி சிறுவன், கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகிறான். அவனைத் தேடிப் புறப்படும் முத்துசாமி வாத்தியாரின் பேரன் அகிலின் பயணத்திலிருந்து, நாவல் பின்னோக்கி விரிகிறது. வாத்தியார் மரணப்படுக்கையில் இருக்கும் போது தொடங்கும் நாவல், அவரது மரணத்தில் நிறைவு பெறுகிறது.
இதற்கிடையே கொங்கு மண்ணின் வாழ்வியல் கூறுகள், பண்பாடு, தொன்மம், கலை, நிலக்காட்சிகள் என, விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.
முத்துச்சாமி வாத்தியரின் பெருமித வாழ்வும், விளிம்புநிலை மக்களான சாமக் கோடங்கிகள் மீது அவர் காட்டும் அளப்பறிய பரிவும், நாவலின் உயிரோட்டமாக உள்ளது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும், கொங்கு மண்ணின் நிலக்காட்சி வர்ணனைகள் கண்ணெதிரில் திரை ஓவியங்களாக விரிகின்றன. வாசகன் அக்காட்சிகளில் ஒன்றி விடுகிறான்.
சரளமான கொங்கு வட்டார மொழியும், முன்னோடி படைப்பாளர்களின் பாதிப்புக்கு உள்ளாகாத எழுத்து நடையும், நாவல் முழுவதும் உணரமுடிகிறது.
சுருட்டுப்பிடிக்கும் மச்சு வீட்டுக்காரர், இந்துராணி அம்மா, பானுமதி, வெள்ளைத் தாடிக்காரர் போன்ற கதாபாத்திரங்கள், நாவலுக்கு அழகு சேர்க்கின்றனர்.
புதிரும், வியப்பும், பரபரப்பும், திருப்பங்களும் நிறைந்துள்ள இந்த நாவல், இதுவரை வெளிவந்துள்ள கொங்கு வட்டார நாவல்களிலிருந்து தனித்துவமிக்க நாவலாகவும், கொங்கு மண்ணின் ஈரவாசனை வீசும் படைப்பாகவும் வெளிவந்துள்ளது.
சாமக்கோடங்கிகளின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு, உன்னதமான ஒரு நாவலை உருவாக்கி இருக்கிறார். சிவபெருமானின் சாபத்தால் சாமக்கோடங்கிகளாக மாறியவர்களின் தொன்மக்கதையை, ஒரு மானுடவியல் ஆய்வாளரின் கோணத்தில் ஆய்வு செய்து, இந்த நாவலைப் படைத்திருக்கிறார்.

