/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
19 ஆண்டுகளில் 2000 மேடை கச்சேரிகள் அஸ்வினியின் அற்புத 'தாள பயணம்'
/
19 ஆண்டுகளில் 2000 மேடை கச்சேரிகள் அஸ்வினியின் அற்புத 'தாள பயணம்'
19 ஆண்டுகளில் 2000 மேடை கச்சேரிகள் அஸ்வினியின் அற்புத 'தாள பயணம்'
19 ஆண்டுகளில் 2000 மேடை கச்சேரிகள் அஸ்வினியின் அற்புத 'தாள பயணம்'
ADDED : பிப் 16, 2025 11:19 AM

ஏழுவயதில் அச்சமின்றி மேடையில் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்து 19 ஆண்டு பயணத்தில் 2000 கச்சேரிகளை கடந்து சாதித்துள்ளார் சென்னை ஆலந்துாரைச் சேர்ந்த இளம் மிருதங்க வாசிப்பாளர் அஸ்வினி சீனிவாசன்.
மதுரையில் இசைக்கச்சேரியில் பங்கேற்க வந்த அஸ்வினி தாளத்தின் பாதையில் பயணமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்...
அம்மா ரமா கர்நாடக சங்கீதம் கற்றவர். வீட்டிலேயே வாய்ப்பாட்டு கற்று கொடுக்கிறார். அம்மா பாடும் போது சமையலறைடப்பாவை எடுத்து வந்து தாளம் போட ஆரம்பித்தேன். கீதம், வர்ணம், கீர்த்தனை எல்லாவற்றுக்கும் தாளம் போடுவதை அப்பா சீனிவாசன் ஊக்கப்படுத்தினார்.
பாட்டுக்கு மிகச்சரியாக டப்பாவில் 'ரிதம்' வாசித்ததும் தெருவில் விற்கும் 'டோலக்' வாங்கி தந்த அம்மா 'முதலில் இதைப் பழகு அடுத்து மிருதங்கம் வாங்கித் தருகிறேன்' என்றார். ஆறு வயதில் வீட்டில் பஜன் பாடும் போது டோலக்கில் தாளம் வாசித்தேன்.
அதன் பின்பே மிருதங்க வகுப்பில் சேர்த்தனர். எனது குரு டாக்டர் டி.கே.மூர்த்தி. அவருக்கு இப்போது நுாறு வயது. கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு 60 ஆண்டுகள் மிருதங்கம் வாசித்த வித்வான். 2005ல் கற்க ஆரம்பித்தேன். 5 மாதத்திலேயே நிபுணத்துவம் பெற்று கச்சேரியில் வாசிக்க ஆரம்பித்தேன். அக்கா அஞ்சனி வீணை வாசிப்பாள், அவளுடன் 7 வயதிலிருந்தே கச்சேரியில் வாசித்தேன். படிப்பிலும் சோடை போகவில்லை. மேடை கூச்சம் இல்லை என்பது அதிசயம்.
19 ஆண்டுகளாக 2000 கச்சேரிகளில் வாசித்துள்ளேன். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியாவிலும் மிருதங்கம் வாசித்த அனுபவம் உள்ளது. மிருதங்கம் பக்கவாத்திய இசை என்பதால் எந்த குழுவினருடனும் என்னால் பயணிக்க முடிகிறது. பாட்டுக்கும் வாசிக்கலாம், வீணை, வயலின், புல்லாங்குழல் என இசைக்கருவிகளுக்கும் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசிக்கலாம். கர்நாடக இசையில் மட்டுமின்றி திரையிசைக்கேற்ப 'பியூசன்' மிருதங்க வாசிப்பையும் தொடர்கிறேன்.
கர்நாடக இசைக்கச்சேரியில் இருந்து பிற இசைவடிவங்களுக்கு வாசிக்கும் போது என்னால் எளிமையாக 'ரிதத்தை' மாற்ற முடிகிறது. கஹான் எனும் டிரம்ஸ், தர்பூகா, ஜெம்பே, ரிதம் பேட்ஜ், டோலக் என மிருதங்க அடிப்படையிலான கருவிகளையும் இசைக்கிறேன்.
அக்காவும் நானும் சேர்ந்தும் தனித்தனியாகவும் கச்சேரி வாசிக்கிறோம். வீட்டில் 2 பேரும் போட்டி போட்டு வாசிக்கும் போது பெற்றோர் ரசிப்பர்.
டி.எம். கிருஷ்ணாவுக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளேன். ஒரே மேடையில் சுதா ரகுநாதனுக்கு கர்நாடக பாரம்பரியத்துடனும் உஷா உதுப்புக்கு 'வெஸ்டர்ன்' இசையுடனும் ஆந்திர பாடகி மங்லியின் தெலுங்கு கிராமியப் பாடல்களுக்கு மிருதங்கம் வாசித்த அனுபவமும் வாழ்நாளில் மறக்க முடியாதது.
யோகிபாபுவின் 'காக்டெயில்' படத்தில் வாசித்த அனுபவம் உள்ளது. ஜி.வி. பிரகாஷ் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'சர்வம் தாளமயம்' படத்தில் போட்டி கச்சேரியில் வாசிப்பது போல நடித்துள்ளேன். தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். மிருதங்கத்தை தாளவாத்திய கருவிகளின் அரசனாக சொல்லலாம். மிருதங்கம் நடுவிலும் சுற்றிலும் கடம், கஞ்சிரா, ட்ரம்ஸ் என தாள வாத்திய கருவிகளுடன் தனிக்கச்சேரியும் செய்துள்ளேன். நிறைய பெண்கள் மிருதங்கம் கற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது வாய்ப்பும் பெண்களுக்கு அதிகம் கிடைக்கும்.
'ரிதம்' அடிப்படையிலான மிருதங்கத்தை கற்றுக் கொண்டால் எப்போதும் மனசுக்குள் 'பீட்ஸ்' தான் ஒலிக்கும் என்றார்.