தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/பேனா பிடித்த வண்ணப்பூக்கள் மலரும் 22 குட்டி எழுத்தாளர்கள்

பேனா பிடித்த வண்ணப்பூக்கள் மலரும் 22 குட்டி எழுத்தாளர்கள்

பேனா பிடித்த வண்ணப்பூக்கள் மலரும் 22 குட்டி எழுத்தாளர்கள்


ADDED : ஆக 16, 2026 12:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 12:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உலகத்தைவிட வித்தியாசமானது. அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கதையாக மாறும்; கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் புதிய சிந்தனைக்கு வழிவகுக்கும். கற்பனைக்கு எல்லை இல்லாத அந்த பிஞ்சுமனங்களிலிருந்து பிறக்கும் படைப்புகள் எப்போதும் புதுமையும், நேர்மையும், உணர்வும் நிறைந்தவையாக இருக்கும்.

அத்தகைய 22 குட்டி எழுத்தாளர்களின் எண்ணங்கள், கனவுகள், கேள்விகள், கற்பனைகளின் சங்கமமாக 'வண்ணப்பூக்களின் தோட்டம்' என்ற சிறுகதை தொகுப்பு நுால் உருவாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கதைகளை படைத்த குட்டி எழுத்தாளர்கள் தாங்கள் நினைத்ததை, உணர்ந்ததை, கற்பனை செய்ததை இயல்பாக எழுத்தாக மாற்றியுள்ளனர்.அதனால் ஒவ்வொரு கதையிலும் குழந்தை மனதின் தூய்மையும், புதுமையான சிந்தனையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

'ஒரு புத்தகம் பல வாசகர்களை உருவாக்கலாம்; ஆனால், ஒரு குழந்தை எழுதிய புத்தகம் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டது' என வலியுறுத்தும் இந்த நுாலின் தொகுப்பாசிரியர்கள் சுலைகா பானு, நஜீமுதீன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக தங்களின் அனுபவங்களை பகிர்ந்தபோது...

எங்களது 'வண்ணப்பூக்களின் தோட்டம்' சிறுகதை தொகுப்புநுாலில் 11 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 22 குழந்தைகள் எழுதியிருக்கிறார்கள். 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரையிலான இளம் எழுத்தாளர்கள் பட்டாளமே தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்திருக்கிறது.

சமூக அக்கறை, சுற்றுச்சூழல், தண்ணீர் சேமிப்பு, ஐ.ஏ.எஸ்., கனவு, கற்பனைக் கதை, உண்மைச் சம்பவங்களின் தாக்கம் என ஒவ்வொரு கதையும் தனித்துவமானது. இதில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளின் சொந்த சிந்தனைகளாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம்.

நுால் உருவான பயணம்


தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மதுரையில் 'ஸ்டோரி மாரத்தான்' என்ற கதைசொல்லி நிகழ்ச்சியை நடத்தினோம். 100 குழந்தைகள் தொடர்ந்து கதைகள் கூறி கின்னஸ் உலக சாதனை அமைப்பில் இடம்பெற்றனர். கதைகளை சொல்லும்குழந்தைகளால், எழுதவும் முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆர்வமுள்ள குழந்தைகளை தேர்ந்தெடுத்து, புத்தகங்களை வாசிக்கச் செய்தோம். 'ரீல்ஸ்' தலைமுறையான இக்கால குழந்தைகளை எழுத வைப்பது சவாலாகவே இருந்தது. அவர்கள் வாசித்த கதைகளை நாடகமாகவும், வேடமிட்டு நடித்தும் வெளிப்படுத்த ஊக்குவித்தோம். அதன் பிறகுதான், அவர்களுடைய கற்பனையில் புதிய கதைகளை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

'கூகுள் மீட்' வாயிலாக தமிழ்நாடு சிறுவர் எழுத்தாளர் கலைஞர் சங்க மாநிலத் தலைவர் உதயசங்கர் (சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருது பெற்றவர்) குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாடினார். கதையை எப்படி தொடங்க வேண்டும்; கதாபாத்திரங்களை எப்படி உருவாக்க வேண்டும்; முடிவு எப்படி அமைப்பது என்பதை எளிமையாகக் கற்றுக் கொடுத்தார்.

தொகுப்பாசிரியராக இருந்தாலும், கதையின் கருத்தையோ, குழந்தைகளின் கற்பனையையோ எங்கும் மாற்றவில்லை. இலக்கணம், வாக்கிய அமைப்பு போன்றவற்றை மட்டுமே செம்மைப்படுத்தினோம். அது குழந்தைகளின் புத்தகமாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

இந்த 22 இளம் எழுத்தாளர்கள், நாளை தமிழ் இலக்கிய உலகில் புதிய பாதைகளை உருவாக்குவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. கற்பனையை இழக்காமல், சிந்தனையை விரிவுபடுத்தி, சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர்களாக இவர்கள் வளர வேண்டும். ஒரு குழந்தை புத்தகம் எழுதுவது வெற்றி அல்ல; அந்த புத்தகத்தைப் பார்த்து இன்னொரு குழந்தையும் பேனா எடுப்பது மட்டுமே உண்மையான வெற்றி. குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதும் நூல்களையும், இதழ்களையும் தொடர்ந்து வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

இந்த குட்டி எழுத்தாளர்களின் கனவுகள் சிறக்கட்டும்; அவர்களின் எழுத்து இன்னும் பல மனங்களைத் தொட்டு புதிய உலகங்களை உருவாக்கட்டும்.

இவர்களை பாராட்ட 82208 77302

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us