ADDED : செப் 21, 2025 05:31 AM

கல்லிலே கலை வண்ணம் கண்டான் இருகண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
என கவிஞர் கண்ணதாசன் வார்த்தைக்கு உயிர் தந்து, இருகண்ணிலும் பார்க்கும் வகையில் தத்ரூபமாக மதுரை மீனாட்சி கோயில் சிற்பங்களை வரைந்து அதை 'மதுரை மீனாட்சி கோயில்' என்ற புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார் 53 வயதான ரத்தினபாஸ்கர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த இவர், மக்களுக்கு ஏற்கனவே நகர் 'மேப்' வடிவமைத்தும், போலீசாருக்கு ஸ்டேஷன் எல்லையை வடிவமைத்தும் பரிச்சயமானவர்.
மதுரை புதுமண்டப சிற்பங்களை ஓவியமாக வரைந்து வெளியான இவரது 'உளி ஓவியங்கள்' நுாலை, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவு பரிசாக தந்ததை ரத்தினபாஸ்கர் பெருமையாக கருதுகிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
'பிரதமருக்கு கொடுக்கப்பட்டது எனது நுால்தான் என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் தினமலர் நாளிதழும் ஒரு காரணம். அப்போது சண்டே ஸ்பெஷலில் எனது பேட்டி வெளிவந்தது. உளி ஓவியம் பார்ட் 1,2 வெளியானது. மதுரை மீனாட்சி கோயில் நுால் 3வது புத்தகம். அம்மன் சன்னதிக்கு நுழையும் அஷ்ட சக்தி மண்டபம் முதல் கோயிலின் அனைத்து பகுதிகளிலும் பார்வையில் படும் சிற்பங்களை ஓவியமாக வரைந்துள்ளேன். மொத்தம் 325 சிற்பங்களை ஐபேடில் வரைந்து கணினி தொழில்நுட்பம் மூலம் வரைந்துள்ளேன். ஒரு படம் வரைய 6 மணி நேரமானது. இதற்காக நான் எடுத்துக்கொண்டது 3 ஆண்டுகள். மூலஸ்தானம், சிறு சன்னதி சிற்பங்களை மட்டும் வரையவில்லை.
நுாலில் ஒவ்வொரு சிற்பத்தின் சிறப்புகள் குறித்து குறிப்பும் எழுதியுள்ளேன். இதற்காக கோயில் தொடர்பான புத்தகங்களை படித்து குறிப்பு எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு மண்டபத்தின் அமைப்பையும் ஓவியமாக கொண்டு வந்து, எந்தெந்த இடங்களில் சிற்பங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளேன்.
கோயில் கும்பாபிஷேகத்தின் போது அறநிலையத்துறை சார்பில் நுால் வடிவில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வடமாநில பக்தர்கள் அறியும் வகையில் ஹிந்தியிலும் வெளியிட திட்டம் உள்ளது.
தமிழகத்தின் பல கோயில்களிலும் இதுபோன்ற அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதையும் ஓவியமாக வரைய உள்ளேன். முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில், திருமயம், திருக்கோகர்ணம், குடுமியான் மலை, கொடும்பலுார் கோயில் சிற்பங்களை வரைய முடிவு செய்து, ஆவுடையார் கோயிலில் இருந்து பணியை தொடங்கியுள்ளேன்.
இவ்வாறு கூறியவரிடம், 'மீனாட்சி கோயில் சிற்பங்களை ஓவியமாக வரையும் எண்ணம் எப்படி தோன்றியது' என நாம் கேட்டதற்கு, 'தினமும் கோயிலைச் சுற்றி 'வாக்கிங்' போவேன். அப்போது புதுமண்டபத்தை பார்ப்பேன். எவ்வளவு அழகான சிற்பங்கள் உள்ளன. அதை வரைந்தால் என்ன' என தோன்றியது. அங்குள்ள 124 சிற்பங்களையும் ஓவியமாக வரைந்தேன். ஏன் நுாலாக வெளியிடக்கூடாது என யோசித்தேன். அப்போது 'செதுக்கப்பட்டதுதான்' உளி ஓவியம். நான் வரைந்த மீனாட்சி திருக்கல்யாணம் ஓவியம் கோயிலை அலங்கரித்துகொண்டிருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்' என உருகுகிறார் ஓவியர் ரத்தின பாஸ்கர்.
இவரை வாழ்த்த 98433 14049