/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நாட்டு மாடு இனங்களை காக்கும் நல்லதொரு தம்பதி
/
நாட்டு மாடு இனங்களை காக்கும் நல்லதொரு தம்பதி
ADDED : செப் 29, 2024 06:40 AM

சென்னை பள்ளிக்கரணையில் கோசாலை அமைத்து நாட்டு மாடு இனங்களை சேர்ந்த 120 பசு, காளை, கன்று குட்டிகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் சாணம், கோமியம் மூலம் பஞ்சகவ்யம், திருநீறு, சாம்பிராணி பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றனர் சாப்ட்வேர் இன்ஜினியரான மணிகண்டனும் அவர் மனைவி பிரீத்தாவும்.
பிரீத்தா கூறுகிறார்...
கணவர் கரூரை சேர்ந்தவர். சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்தார். நான் சென்னைவாசி. எம்.பி.ஏ., முடித்து சாப்ட்வேர் கம்பெனியில் மேலாண்மை பிரிவில் பணிபுரிகிறேன்.
கணவர் 2017ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக நாட்டு மாடு இனத்தை காக்கும் நோக்கில், சாப்ட்வேர் பணியை விட்டுவிட்டு, நாட்டு மாடுகள் 20 இனங்களை சேர்ந்த பசு, காளை, கன்றுகுட்டிகள் என 120 மாடுகளை கோசாலை மூலம் பராமரித்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக நானும் ஆதம்பாக்கத்தில் மகளிர் குழுக்களை அமைத்து 13 மகளிருடன் சாணம், கோமியத்தை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைக்கு கொண்டு செல்ல விரும்பினேன்.
சாணம், கோமியத்தில் இருந்து இயற்கை உரம், பஞ்சகவ்யம் தயாரித்து மாடி தோட்டம், நர்சரி கார்டன்களுக்கு அறிமுகம் செய்தோம். இன்றைக்கு பெரும்பாலான நர்சரி கார்டன், மாடி தோட்டங்களில் இயற்கை உரம், பஞ்ச கவ்யம் உரமாகி, பூ, காய்கறிகளை விளைவித்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
யாகசாலையில் பயன்படுத்த சாணத்தில் இருந்து வரட்டி எடுத்தும், சாம்பல் மூலம் விபூதி, அதனை பக்குவப்படுத்தி சாம்பிராணி, பஞ்சகவ்ய விளக்கு தயாரித்தும் சந்தைப்படுத்தி வருகிறோம். சாண பவுடர் மூலம் பற்பொடி, குளியல் சோப், இயற்கை கிரீம், உதட்டு சாயமும் தயாரிக்கிறோம். சாண சாம்பலில் பாத்திரம் கழுவும் பவுடர், 'புளோர் கிளினிங்', சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கொசுவர்த்தி சுருள் தயாரிக்கிறோம்.
விநாயகர் சதுர்த்திக்கு வீடு, அலுவலகங்களில் வழிபாடு செய்ய சாணம், மஞ்சள் பொடி கலந்து 3 இன்ஞ் முதல் 1 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம். இது போன்று 50 வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம், நாட்டு மாட்டு இனங்களை பாதுகாத்த திருப்தி கிடைக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, மண், தண்ணீரில் மாசு ஏற்பாடாமல் பாதுகாத்து வருகிறோம் என்ற பெருமை கிடைக்கிறது. கோசாலை மூலம் நாட்டு மாடுகளை வளர்ப்பதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இது போன்ற பணிகளை லாப நோக்கமின்றி இயற்கையை காக்கும் நோக்கில் ஆத்மார்த்தமாக செய்கிறோம் என்றார்.