/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நேதாஜியை நேசிக்கும்... நேசமிகு மனிதர்
/
நேதாஜியை நேசிக்கும்... நேசமிகு மனிதர்
ADDED : ஜன 05, 2025 05:02 AM

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான எம்.எஸ்.சேகர் 79, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது கொண்ட ஈர்ப்பால் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை தான் பணியாற்றிய காலம் முதலே சேகரித்து வந்துள்ளார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம் பகிர்ந்தவை... சொந்த ஊர் துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம். எஸ்.எஸ்.எல்.சி., படித்து கூட்டுறவு சொசைட்டியில் பணிபுரிந்தேன். ஏதாவது சாதிக்க எண்ணி 1964ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தேன்.
பெங்களூருவில் பணிக்கு சேர்ந்த போது தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. ஆறு மாதங்களில் பல்வேறு மொழிகளை கற்று கொண்டேன். 1965ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் எங்களை சந்தித்து, ''உங்களால் தான் சாத்தியமானது. எனது முதல் நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்'' என்றார். நடிகர் டெல்லி கணேஷ் உடன் விமானப்படையில் பணியாற்றியிருக்கிறேன்.
பின் அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த போது வங்கதேச சுதந்திரப் போரில் பங்கேற்றேன். பின் ஐதராபாத்தில் 3 ஆண்டுகள், ரேபரேலியில் 3 ஆண்டுகள் என 1979 வரை 15 ஆண்டுகள் விமானப்படையில் பணிபுரிந்தேன். பின் ஒன்றரை ஆண்டுகள் சென்னையில் தபால் துறையில் பணிபுரிந்தேன். 1982 முதல் 2005 வரை மதுரையில் வங்கியில் பணிபுரிந்தேன்.
ஐதராபாத்தில் பணிபுரிந்தபோது நேதாஜியின் 'ஆசாத் ஹிந்த்' அரசில் அமைச்சராக இருந்த எஸ்.ஏ.ஐயர் எழுதிய Unto him a Witness புத்தகத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது. நேதாஜி வரலாற்றை அற்புதமாக பதிவு செய்திருந்தார். அதை படித்தபின் 'இப்படி ஒரு மனிதர் வாழ்ந்துள்ளாரா' என வியந்தேன். அவரை மேலும் தெரிந்து கொள்ள கோல்கட்டாவிற்கு செல்ல 5 நாட்கள் விடுப்பு மேலதிகாரி பஹதுாரிடம் வேண்டினேன். 'விடுப்பு எதற்கு... பணி நேரத்திலேயே சென்று வா' என அனுமதி வழங்கினார். 5 நாட்கள் நேதாஜியின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து தகவல்களை சேகரித்தேன்.
1945ல் 2ம் உலகப் போரில் நாம் தோல்வி அடைந்த பின் நேதாஜி படையில் சிப்பாயாக இருந்த தமிழர் நாகசுந்தரம், அவரை பார்க்க அவரது வீட்டிற்கு ஒருமாதமாக சென்றுள்ளார். நேதாஜியின் அண்ணன் அவரை அங்கேயே தங்கிக் கொள்ள கேட்டதன் பேரில் நேதாஜி வீட்டிலேயே வாழ்ந்தார். அவரை 1974ல் சந்தித்து பேசினேன். நிறைய விஷயங்களை பகிர்ந்தார். 'நேதாஜி என்றாவது ஒருநாள் வருவார்' எனும் நம்பிக்கையில் 1998 வரை வாழ்ந்தார்.
நேதாஜி ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரி. தேச நலனுக்காக 1920ல் தன்னுடைய சிவில் சர்வீஸ் பட்டத்தையே துறந்தார். தனக்காக செலவிடப்பட்ட 100 பவுண்டுகளை திரும்ப அளிப்பதாக அன்றைய பிரிட்டிஷ் அரசு கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் செயலாளருக்கு கடிதம் எழுதினார். இப்படி யார் செய்வார்.
மறைந்த எனது அப்பா ஜோதிடர். நேதாஜி பிறந்த நேரத்தை அவரது தந்தை டைரியில் குறிப்பிட்டு இருந்ததை வைத்து 1897 பஞ்சாங்கத்தை தேடி ஜாதகம் கணித்து நேதாஜி எப்படி இறந்திருப்பார் என எழுதி இருந்தார். 2008ல் அதை நான் கோல்கட்டா நேதாஜி ஆராய்ச்சி மையம் சேர்மன் கிருஷ்ணா போஸிடம் ஒப்படைத்தேன். நேதாஜி சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் பல்வேறு பத்திரிகைகள், என்னுடைய சொந்த அனுபவங்கள் மூலம் சேகரித்து வருகிறேன்.
தற்போது 'எல்கின் சாலை முதல் தைவான் வரை' எனும் நேதாஜி பற்றிய புத்தகம் எழுதி வருகிறேன். விரைவில் வெளியிடுவேன். அவருடைய வீட்டிற்கு 7 முறை சென்றுள்ளேன். நான் இறப்பதற்குள் மீண்டும் ஒருமுறை அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார்.
இவரை வாழ்த்த 98943 00626

