ADDED : செப் 28, 2025 03:57 AM

' கா யாத கானகத்தே... நின்றுலாவும் காயாத கானகத்தே...' என நரம்பு புடைக்க, புஜங்கள் துடிக்க கிராமத்து கோயில் திருவிழாக்களில் பாடும்போது அதை விசிலடித்து ரசிக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறது. அதனால்தான் புராண நாடகங்கள் இன்றும் அவர்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 'ஒருபுறம் ரசிக்க வைக்க ஆபாசமாக சிலர் பேசினாலும், அதை எனது 35 ஆண்டு நாடக அனுபவத்தில் பேசியதே கிடையாது. மக்களை விழிப்படைய செய்யும் கருத்துகளை சொல்வதைதான் வைராக்கியமாக கொண்டுள்ளேன்' என்கிறார் 51 வயதான கவிராஜ்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலத்தைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளாக நாரதர் வேடத்தில் விழிப்புணர்வு கருத்துகளை சொல்லி வருகிறார். கணீர் குரலில் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்.
''எனக்கு பெற்றோர் வைத்த பெயர் கருப்பையா. இயற்கையிலேயே கவி ஆர்வம் இருந்ததால் கவிராஜ் ஆனேன். எட்டாம் வகுப்பு வரைதான் படித்தேன். சிறு வயதிலேயே பாடுவேன் என்பதால், மேடை நாடகங்களில் கலைஞர்கள் பாடல் பாடி பேசி நடிப்பதை பார்த்து எனக்குள் ஆர்வம் வந்தது. அதிலும் நாரதர் வேடம் மீது ரொம்பவே ஈர்ப்பு ஏற்பட்டது.
மதுரை மேலுார் கற்பூரம்பட்டி டேபி ஆனந்தன் என்பவர் நாரதர் வேடமிட்டு பேசுவதையும், பாடுவதையும் பார்த்தபோது 'மேடை ஏறினா நாரதராகத் தான் ஏற வேண்டும்' என முடிவு செய்தேன். 19 வயதில் மேடை நாடக நடிகர் முத்தப்பாவின் அறிமுகம் கிடைத்தது.
பின்னர் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கம் ஜி.என். ராஜப்பா தலைமையிலான குழுவில் சேர்ந்தேன். நாரதர் வேடம்தான் வேண்டும் எனக்கேட்டேன். ஆறு மாதம் 'ஸ்கிரிப்ட்' கொடுத்ததை படித்து மனப்பாடம் செய்து பேச ஆரம்பித்தேன். 35 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளை பார்த்துவிட்டேன். ஆண்டுதோறும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு 200 நாடகங்கள் தமிழகம் முழுவதும் போட்டு வருகிறோம்.
ஒரே மாதிரியாக பேசிக்கொண்டிருந்தால் மக்களுக்கு பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்பதால்தான் சில மேடைகளில் ஆபாசம் தலைகாட்டுகிறது. இதனால் எதிர்காலத்தில் மேடை நாடகங்களுக்கு ஆபத்து வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் எனக்கு மேடையை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும் எனக்கருதி, சமூக விழிப்புணர்வு கருத்துகளை சொல்ல ஆரம்பித்தேன். ஏனெனில் நானே பாதிக்கப்பட்டிருந்தேன். அதன் வெளிபாடுதான் 10 ஆண்டுகளாக, தற்போது 'டிரண்டிங்கில்' உள்ள நாட்டு நடப்பு கள நிலவரங்களை சொல்லி வருகிறேன். இதற்காகவே தினமும் படிக்க வீட்டில் நுாலகம் வைத்துள்ளேன். தவிர நண்பர்கள் எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதையெல்லாம் படித்துவிட்டுத்தான் மேடையில் சொல்லி வருகிறேன்.
அடிப்படையில் நான் முருகபக்தர். கிருபானந்த வாரியார் சுவாமிகளை என் மானசீக குருவாக ஏற்று அவரது கருத்துகளையும் சொல்லி வருகிறேன். நாரதர் மட்டுமின்றி முருகன் வேடத்தையும் சில ஆண்டுகளாக போட்டு வருகிறேன். இன்றைய காலத்தில் எங்களுக்கு பிறகு இக்கலையை கொண்டு செல்ல ஆட்கள் இல்லை. எனக்கு 3 மகன்கள், ஒரு மகள். அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. என் சிஷ்யராக யாரையாவது கொண்டு வரலாம் என்றால் அதற்கும் யாரும் ஆர்வமாக வரவில்லை'' என கலங்குகிறார் கவிராஜ்.
இவரை வாழ்த்த 98438 00496