/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
லட்சம் உணவுகளை ருசித்த அபூர்வ 'ஷெப்' தாமு - சமையல் கலைஞர்களின் சகலகலா வல்லவன்
/
லட்சம் உணவுகளை ருசித்த அபூர்வ 'ஷெப்' தாமு - சமையல் கலைஞர்களின் சகலகலா வல்லவன்
லட்சம் உணவுகளை ருசித்த அபூர்வ 'ஷெப்' தாமு - சமையல் கலைஞர்களின் சகலகலா வல்லவன்
லட்சம் உணவுகளை ருசித்த அபூர்வ 'ஷெப்' தாமு - சமையல் கலைஞர்களின் சகலகலா வல்லவன்
ADDED : மார் 03, 2024 10:35 AM

'உணவே மருந்து' என மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளின் அடையாளத்தை ஒரு சமையல் கலைஞனாக உலகறிய செய்துகொண்டிருக்கும் உன்னத கலைஞர். ஆயிரமாயிரம் குடும்ப பெண்களின் கைப்பக்குவ சமையல் கலை மந்திரத்திற்கு சொந்தக்காரர். 'கிரியேட்டிவ்' உணவுகள் மீது ஆர்வம் கொண்டுள்ள இளம் சமையல் கலைஞர்களின் நவீன நள(ன்)ச்சக்கரவர்த்தியாக வலம் வருபவர் பிரபல ஷெப் தாமு. மதுரையில் தினமலர், ஆசிர்வாத் நடத்திய 'மில்லட் மகாராணி' பட்டம் போட்டியில் நடுவராக வந்தவரிடம் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக சந்தித்தபோது...
* ஆயிரக்கணக்கான சமையல் ஆர்வலர் ரசிகர்களை கொண்டுள்ள உங்களுக்கு முதலில் சமையல் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி
என் அம்மா கோதைநாயகம் தான் முதல் காரணம். அவர் கைப்பக்குவத்தில் தயாரான உணவுகள் தான் என் நாவிற்கு சுவை என்றாலே என்ன என தெரிய வைத்தது. அவர் மீன் குழம்பு, பழைய சாதம், பச்சைப் பட்டாணியுடனான மட்டன் குருமா, சிறுதானிய உணவுகள் என அனைத்திலும் ருசியில் அசத்துவார். என் சின்னம்மா பிரேமாவும் கைப்பக்குவத்தில் கலக்குவார். அப்போதெல்லாம் நவீன அடுப்பு வசதிகள் இல்லை. ஆனால் தற்போது நவீன சமையல் கூடங்கள் வந்து விட்டன. எத்தனை சம்பாதித்தாலும் பணத்தையா சாப்பிட முடியும். பசிக்கும் போது நல்ல ஆரோக்கிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
* அம்மாவின் கைப்பக்குவ உணவுகளில் பிடித்தது
மீன் குழம்பு, மட்டன் குருமா, பருப்பு உருண்டை குழம்பு, கோதுமை தோசை, ராகி அடை ரொம்ப பிடிக்கும். அம்மாவின் சமையல் என்றாலே வேற லெவல்.
* எத்தனை சமையல் போட்டிகளில் நடுவராக இருந்திருப்பீர்கள்
இதுவரை 10 ஆயிரத்தை தாண்டும். 38 நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். அங்கெல்லாம் நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் மகத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளேன். நம் சாப்பாட்டில் தான் மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக மிளகு, சீரகம், வெந்தையம், பூண்டு, மஞ்சள், புதினா, கறிவேப்பிலை என அனைத்தும் இடம் பெறும். '10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிற்கும் பயமின்றி சென்றுவரலாம்' என்பர். அது விஷத்தை முறிக்கும் என்பதால் தான் அப்படி கூறியுள்ளனர். சீரகம், மனிதனின் அகத்தை சீர்செய்வது. இது போன்ற மருத்துவ குணங்கள் தமிழர் சாப்பாட்டு வகைகளில் இருக்கின்றன. 'கோவிட்' பாதிப்பின் போது தமிழர்களின் சமையல் வகைகளை உலகமே வியந்து பார்த்தது. இது தமிழர்களுக்கு பெருமை.
* தற்போது காய்கறிகளில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறதே
உண்மை தான். மருந்தை ஸ்பிரே முறையில் தெளிக்கின்றனர். ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. ஆனால் ஆர்கானிக் காய்கறி வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். விவசாயிகளிடம் நான் கேட்பதெல்லாம், 'மருந்தில்லா காய்கறிகளை விளைவிக்க வேண்டும்' என அவர்கள் உறுதியேற்க வேண்டும்.
* உங்களுக்கு பிடித்த சைவ, அசைவ உணவுகள்
வெண்டைக்காய். இதில் என்ன வகை 'டிஷ்' என்றாலும் பிடிக்கும். கத்தரிக்காய், முருங்கைக்காய், மட்டன் கீமா, இறால் வருவல், கிரேவி பிடிக்கும். என் அம்மா மட்டன் - முள்ளங்கி, இறால் - அவரை என வித்தியாச 'காம்பினேஷனில்' 'டிஷ்' வைப்பாங்க. தற்போது அதெல்லாம் யாரும் செய்வது இல்லை.
* குழந்தைகள் காய்கறி சாப்பிடுவது அரிதாகிறது. அவர்களை சாப்பிட வைக்க அம்மாக்களுக்கான டிப்ஸ்...
சொல்வதற்கு தயக்கமாக உள்ளது. இன்றைய இளம் அம்மாக்களுக்கு சமையல் செய்வதில் ஆர்வம் குறைகிறது. ஓட்டல்களில் ஆர்டர் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்கு 'ஜங்க் புட்' கொடுக்கின்றனர். நம்முடைய காய்கறி சுவை குழந்தைகளுக்கு எடுபடாமல் போகிறது. பாரம்பரிய உணவு வகைகளையும் மறந்து வருகிறோம். பல குழந்தைகளுக்கு கத்தரி, முருங்கை, கம்பு, கேப்பை கூழ் என்றால் தெரிவதில்லை. இளம் பெண்கள் நம் பாரம்பரிய காய்கறிகளை சமைப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காய்கறிகளை வேக வைத்து மசித்து உருண்டையாக செய்து குழந்தைகளுக்கு பிடிக்கும் மசாலாக்கள் கலந்து 'கட்லெட்' 'சீஸ் பால்' போல் செய்து கொடுத்து சாப்பிட பழக வைக்க வேண்டும். காய்கறி சூப் கொடுக்கலாம்.
* சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது
தற்போது மக்கள் ஹெல்த்தி உணவுகளை தான் விரும்புகின்றனர். வரகரிசியை அதிகம் விரும்புகின்றனர். வரகரிசி கிராம கோயில் கலசங்களில் வைப்பார்கள். பஞ்சம் ஏற்படும் போது அவற்றை எடுத்து பயன்படுத்துவர். வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு உணவுகளை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும்.
* சமையலில் தங்களின் கின்னஸ் சாதனை குறித்து...
2010ல் 'குக்கிங் மாரத்தான்' என்ற பெயரில் தனிநபராக 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 நொடிகளில் சமையல் செய்து சாதித்தேன். அதற்காக கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளேன். சமையல் கலையில் (ஓட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜி) பி.எச்டி., முடித்த முதல் நபர் நான்.
* இதுவரை எத்தனை வகை உணவுகளை ருசித்துள்ளீர்கள்
ஆயிரக்கணக்கான சமையல் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளேன். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுகளை சுவைத்திருப்பேன் என நினைக்கிறேன்.
* சமையலின் மகத்துவம் என்ன
குழந்தைகள் ஆரோக்கியம் காக்க பெண்கள் வீடுகளில் சமைக்க வேண்டும். அம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிட்டால் தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அவர்களின் குணநலன்களும் சென்று சேரும். சமையல்காரர் சமைப்பதை சாப்பிட்டால் சமையல்காரர்களின் குணநலன்கள் தான் குழந்தைகளுக்கு வளரும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அம்மாக்கள் சமையல், குழந்தைகளுக்கு அவசியம். குடும்பத் தலைவிகளுக்கு இதுவே என் 'அட்வைஸ்'.

