/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
வயதானவர்களுக்கு மட்டும் சத்தமில்லாமல் சாதிக்கும் இளம் டாக்டர்
/
வயதானவர்களுக்கு மட்டும் சத்தமில்லாமல் சாதிக்கும் இளம் டாக்டர்
வயதானவர்களுக்கு மட்டும் சத்தமில்லாமல் சாதிக்கும் இளம் டாக்டர்
வயதானவர்களுக்கு மட்டும் சத்தமில்லாமல் சாதிக்கும் இளம் டாக்டர்
UPDATED : மே 19, 2025 07:58 AM
ADDED : மே 18, 2025 06:27 AM

'அறுபது வயதை கடந்தாலே 2வது குழந்தை பருவமாகதான் பார்க்க வேண்டும். இன்று வயதானவர்கள் சொல்வதை கேட்கவும், பேசவும் ஆள் தேட வேண்டியிருக்கிறது. அவர்களுக்காகவே 2022 முதல் மனரீதியாக, மருத்துவ ரீதியாக பல சேவைகளை செய்து வருகிறோம். மதுரை வைகையாற்றில் இறங்க வந்த கள்ளழகர், இந்தாண்டு முதன்முறையாக முதியவர்களை தேடி வந்து தரிசனம் கொடுத்தார்' என உற்சாகமாக பேசுகிறார் 34 வயதான டாக்டர் விஷ்ரூத். மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள டி.வி.எஸ்., குழுமத்தின் லட்சுமி மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியாக இருக்கிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
''டி.வி.எஸ்., குழுமத்தின் ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை மூலம் 3 ஆண்டுகளுக்கு முன் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். ஆதரவற்றோர் இல்லங்களில் முதியவர்களை சந்தித்தபோது, பேச ஆளில்லாமல் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்ததை உணர்ந்தோம். எங்களது டிரஸ்ட் தலைவர் ஷோபனா ராமச்சந்திரன், அறக்கட்டளை தலைமை செயல்பாட்டாளர் ஜான்டேவிட் டிரஸ்ட் நிர்வாகிகள் ஊக்குவிப்பால் 2022ல் 'சிரிக்கும் சுருக்கங்கள்' திட்டத்தை ஆரம்பித்து 1750 முதியவர்களை சந்தித்து அவர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுத்து, தேவையானதை செய்து கொடுத்தோம்.
'மனை தேடி மருத்துவமனை' என்ற பெயரில் வீடு தேடிச்சென்று மருத்துவம் பார்த்தோம். 'மனம்' திட்டத்தின்கீழ் அவர்களுடன் தினமும் உறவுகளாக போனில் பேசி உற்சாகமூட்டினோம். தீபாவளி சமயத்தில் முறுக்கு, இனிப்பு பலகாரங்களை அவர்களே தயாரித்து தர ஏற்பாடு செய்தோம். பொங்கல் பண்டிகையின்போது கோலப் போட்டி, கடிதம் எழுதுதல், ஓவியப் போட்டி நடத்தினோம். வயதானால் சிலருக்கு நினைவுத் திறன் குறையும். மூளையையும், உடல் உறுப்புகளையும் 'ஆக்டிவ்' ஆக வைத்திருக்க இப்போட்டி நடத்தினோம். அதை போட்டோ எடுத்து பொங்கல் விழா என்று மேடையில் பேனராக வைத்து பாட்டு, நடனத்தில் அவர்களை பங்கேற்க செய்தோம். உற்சாகமாகி விட்டனர்.
இந்நிகழ்ச்சிக்காக பஸ்சில் அழைத்து சென்றபோது 'ரொம்ப மாசம் கழிச்சு இப்பதாம்ப்பா வெளி உலகை பார்க்கிறோம்' என்று சொன்னதை கேட்டு கலங்கிவிட்டேன். 'ரயிலில் போக ஆசையா' என கேட்டேன். உற்சாகமாக தலையை ஆட்ட, 'டிராவல் தெரபி' என்ற பெயரில் மதுரை - போடி ரயிலில் 4 பெட்டி முன்பதிவு செய்து வைகை அணைக்கு அழைத்துசென்றோம். ரயிலிலும், அணையிலும் ஆட்டம், பாட்டம் என குழந்தைகளாகவே மாறிவிட்டனர்.
வயதானவர்களுக்கு ஆன்மிகம் உணர்வோடு கலந்தது என்பதால் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தோம். கள்ளழகரை தரிசிக்க ஏற்பாடு செய்தால் என்ன என்று தோன்றியது. இதற்காக முறைப்படி அனுமதி பெற்று, இந்தாண்டு முதன்முறையாக எங்கள் மருத்துவமனையில் கள்ளழகர் எழுந்தருளி முதியவர்களுக்கு தரிசனம் அளித்தார்.
சரஸ்வதி பூஜை கொலு அலங்கார போட்டி முதியவர்களுக்காக நடத்த உள்ளோம். புற்றுநோயால் இறக்கும் தருவாயில் உள்ளவர்களை பராமரித்து விருப்பத்தை நிறைவேற்றுகிறோம். சமீபத்தில் மீனாட்சி அம்மனை கடைசியாக தரிசிக்க வேண்டும் என ஒருவர் கேட்டார். அவரை வீல்சேரில் அழைத்து சென்று சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்தோம்.
இந்த டி.வி.எஸ்., லட்சுமி மருத்துவமனை டி.வி.எஸ்., ஊழியர்களுக்காக 1963ல் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்டது. 2014 முதல் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். முதன்முறையாக அரவிந்த் கண் மருத்துவமனை தனது கிளையை இங்கு ஆரம்பித்துள்ளது எங்களுக்கு பெருமை.
வீட்டில் வயதானவர்களை தனியாக விட்டுவிட்டு வெளியூர் செல்வது சிரமம். இதற்காகவே 'கேர் சென்டரும்' நடத்தி வருகிறோம். குறிப்பிட்ட நாட்களுக்கு இங்கு விட்டுச்சென்றால் உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். கேன்சர் சென்டர் அமைக்க அடையாறு கேன்சர் சென்டர், மும்பை டாடா கேன்சர் சென்டர் மையத்துடன் பேசி வருகிறோம்'' என்கிறார் வயதானவர்களின் சிரிப்பில் இறைவனை காணும் இந்த இளம் டாக்டர் விஷ்ரூத்.
தொடர்புக்கு: 0452 - 254 5800