ADDED : நவ 09, 2025 12:20 AM

மழைத்துாறல் விழுந்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுது. விஸ்வேஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் வீதி வழியே சென்று கொண்டிருந்த நாயன்மார்கள் குறித்த பாடல் ஒலிபெருக்கி வழியாக வலம் வந்தது. அதனை கேட்ட மாத்திரத்திலேயே கால்கள், தானாகவே கோவிலுக்குள் நடைபோட்டன. கோவில் கலையரங்க மேடையில், கண்ணை கவரும் வகையில், நடனக்காட்சி அரங்கேறி கொண்டிருந்தது.
திருப்பூர் கவிநயா நாட்டியப்பள்ளி சார்பில், 'அத்யாயனா' என்ற தலைப்பில், அரங்கேறிய பெரியபுராணம் பற்றிய நாட்டிய நாடகம் தான் அது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்தது. ஏறக்குறைய பெரியபுராண பாடல்களுடன் ஒன்றிணைந்து, அபிநயம் பிடித்து நடமானடிய மாணவியருக்கு, பார்வையாளர்கள் அளித்த கரவொலி அடங்க நேரமானது.
இந்நிகழ்ச்சி குறித்து, கவிநயா நாட்டியப்பள்ளி இயக்குனர் மேனகா இப்படி கூறுகிறார்...
நாட்டிய கற்றலை மேம்படுத்த, கடந்த ஒரு ஆண்டாக, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 'அத்யாயனா' என்ற தலைப்பில், நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நம் பாரம்பரிய இதிகாசம், காப்பியங்கள் பற்றி பலருக்கு சரியாக தெரிவதில்லை. தமிழில் உள்ள 12 சைவத்திருமுறைகளில் மிகப்பெரியது, பெரியபுராணம். அதனை மாணவர்களுக்கு விளக்க, வெறும் பாடம் எடுத்தால் மட்டும் போதாது. அதற்காக நாட்டிய நாடகமாக நடத்தி வருகிறோம்.
அதில் பெரியபுராணத்தில் உள்ள 63 நாயன்மார்களையும் தொகுத்து வழங்கப்படுகிறது. சிவதளங்களில் வழங்குவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிவாலயத்தில் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். பதிவு செய்யப்பட்ட பாடல், இசை உபயோகிக்காமல், நாங்களே நேரடியாக பாடி, பேசி, இடையிடையே பாடல், ஜதி, என எல்லாம் சேர்ந்து நாட்டிய நாடகம் உருவாக்கி சமர்ப்பிக்கிறோம்.
வளரும் கலைஞர்கள் தான் எங்களுக்கு சிறப்பு விருந்தினர். பெரிய அளவில் உள்ள கலைஞர்களுக்கு அதிக மேடை வாய்ப்பு இருக்கும். முறைப்படி கற்று, அதிக ஆண்டுகள் அனுபவம் பெற்று சரியான அங்கீகாரம் கிடைக்கப்படாமல் இருக்கும் சிறந்த கலைஞர்களை கண்டறிந்து வாய்ப்பு வழங்கி வருகிறோம். தொழில் நகரமான திருப்பூரில், பாரம்பரிய கலைகள் பிற மாவட்டங்களை விட குறைவாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, வரும் மார்கழி மாதம் 30 நாட்களும், திருப்பூரில் உள்ள கோவில்களில் வீணை, நடனம், நாட்டியம் சார்ந்த நிகழ்ச்சி நடத்துகிறோம்.
என்று சொன்ன மேனகா, 'கிட்டத்தட்ட, இயந்திர வாழ்க்கை நடந்து வரும் திருப்பூரில், இதுபோன்ற ஆன்மிகம் சார்ந்த கலைகள், புத்துணர்வு ஊட்டுகிறது,' என்று கூறி முடித்தார்.

