/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கராத்தே கலையில் 'அரசி'யாவதே லட்சியம்!
/
கராத்தே கலையில் 'அரசி'யாவதே லட்சியம்!
ADDED : நவ 08, 2025 11:53 PM

இ ளம் வயதிலேயே மாவட்ட, மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளி குவிப்பதுடன், தேசிய நடுவர் என்ற அந்தஸ்தையும் எட்டிப்பிடித்திருக்கிறார், திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் வசிக்கும் கலையரசி, 30.
தனது திறமையின் காரணமாக, தமிழ்நாடு குமுத்தே டீம் பிரிவின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். திருப்பூர் கராத்தே சங்கத்தின் பெண்கள் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பள்ளி மாணவ, மாணவியருக்கு கராத்தே பயிற்சி வழங்கி வரும் அவர், வறுமையிலும், திறமையில் பளிச்சிடும் குழந்தைகளுக்கு இலவசமாகவே கற்றுக் தருகிறார்.
இவரது திறமை, சேவை, உதவும் குணத்தை மையாக வைத்து, 'சில்வெஸ்டா அக்னி சிறகுகள்' விருது வழங்கி கவுரவித்திருக்கிறது, புனித ஜோசப் மகளிர் கல்லுாரி நிர்வாகம். கராத்தே கலையில், 'செகண்ட் டான் பிளாக் பெல்ட்' பெற்றுள்ள இவர், 'வாழ்க்கையில், விரக்தியின் விளிம்பை எட்டிய போது, நம்பிக்கையை வளர்த்தெடுத்து, இந்த கராத்தே க லைதான்' என்கிறார் கலையரசி.
அவர் மேலும் கூறியதாவது:
இளம் வயதிலேயே தாயை இழந்தேன். தாயின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு கிடைக்க வேண்டிய வயதில் இழந்ததால், தனிமையாய் உணர்ந்தேன். அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவு, தடுமாற்றம் என்னை நிலைகுலைய செய்த போதிலும், நான் சிறுவயதில் கற்ற கராத்தே கலை தான் எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது; மீளாத் துயரில் இருந்து நான் மீண்டு வரச்செய்தது.
என் ஆசான் திருப்பூர் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க பொது செயலர் சக்திவேல், வழங்கிய பயிற்சியும், வழிகாட்டுதலாலும், மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளை அள்ளிக்குவிக்க துவங்கினேன். முழு நேரமும் கராத்தே தான் என் வாழ்க்கையாகிவிட்டது. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க பொது செயலர் அல்தாப் ஆலம், என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
இலக்கை நோக்கி... சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தர வேண்டும்; ஆசிய மற்றும் உலக கோப்பை கராத்தே போட்டியில் நடுவராக தேர்ச்சி பெற வேண்டும். ஏராளமான சாதனை மாணவ, மாணவியரை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம். டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்த போட்டிகளில் பங்கெடுத்துள்ளேன். வெளிநாடுகளில் நடக் கும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும், செலவுக்காக பணத்தேவை பூர்த்தியாகாததால், கடல் கடந்து சாதிக்கும் கனவு கை கூடவில்லை. இருப்பினும், அடுத்தாண்டு, மலேஷியாவில் நடக்கும் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது; அதற்கான செலவின நிதியை திரட்டுவது தான், கடினமானதாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

