ADDED : ஏப் 28, 2024 10:55 AM

ஒன்றல்ல... இரண்டல்ல... ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக்கலைகள் நம் பராம்பரியம், பண்பாட்டை பறைசாற்றுவதாக இருந்தன. அவற்றில் பல இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில் தோல் பாவைக்கூத்து கலையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
ராமாயணம், மகாபாரதம், நல்லதங்காள் என புராண சரித்திரங்களை கிராமங்களில் கலைஞர்கள் சிறிய திரையில் நடத்தி காட்டுவதை நம்மில் பலர் சிறிய வயதில் பார்த்து ரசித்திருக்க கூடும். தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமூக சிந்தனையை துாண்டுவதாக தோல்பாவைக்கூத்து கலையை மாற்றி இக்கலைஞர்கள் நடத்தி வருகின்றனர்.
ஆறாவது தலைமுறையாக இந்த தோல்பாவைக்கூத்து நடத்தி வரும் பெருமை முத்துச்சந்திரனுக்கு உண்டு. ஒன்பது வயதிலிருந்து நாற்பதாண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியை நடத்தி வருபவர் கலைமாமணி, கலை சுடர்மணி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகிலுள்ள திருமலைபுரத்தை சேர்ந்த முத்துச்சந்திரனுடன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
சரபோஜி மன்னர் பொழுது போக்குக்காக இந்த தோல்பாவை கூத்து கலையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர். என் முன்னோர் 15 தலைமுறைக்கு முன்னர் மராட்டியத்திலிருந்து தமிழகம் வந்து இக்கலையை நடத்தி வந்தனர்.
என் முன்னோர் கிராமங்களுக்கு சென்று ஒரு மாதத்துக்கும் மேலாக முகாமிட்டு தினமும் இரவு பாவைக்கூத்து நடத்துவர். மக்கள் கேட்டு கொள்வதற்கு இணங்க விடிய விடிய நடத்தியதாகவும் கேள்விபட்டுள்ளேன். சாமிராவ், கிருஷ்ணராவ், கோபால்ராவ், சுப்பாராவ், பாலகிருஷ்ணராவ், தற்போது நான், என் மகன் என வாழையடி வாழையாக இக்கலையை நடத்தி வருகிறோம்.
ராமாயணம் போன்ற இதிகாசங்களை நடத்திய நாங்கள் தற்போது தேர்தல், கொரோனா, எய்ம்ஸ், சிறுவர் திருமணம் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். சமீபத்தில் கலிபோர்னியா தமிழர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அங்கு பாவைக்கூத்து நடத்தி வந்தேன்.
என் கலைச்சேவையை பாராட்டி கலைசுடர், கலைவளர்மணி, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை அரசு, தனியார் அமைப்புகள் வழங்கி கவுரவித்துள்ளன. ஆனால் அதை விட கிராமங்களில் பாவைக்கூத்து நடத்தும் போது ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்ப குரலை மாற்றி மாற்றி இருபது விதமாக நான் பேசுவதை கேட்டு எழும் ஆரவாரத்தை பெரிய விருதாக கருதுகிறேன். எனக்கு பிறகும் இந்த கலை இன்னும் நுாற்றாண்டுக்கு மேல் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.
இவரை வாழ்த்த 98426 70869

