ADDED : மே 26, 2024 11:19 AM

பொது இடங்கள் பல அசிங்கமாக, அருவருப்பாக இருக்கும். அந்த இடங்களில் அழகிய ஓவியங்களை வரைந்தால் யாரும் அசிங்கப்படுத்தமாட்டார்கள். அந்த வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்க்கும். நல்ல எண்ணம், சிந்தனைகளை துாண்டும்.
இதற்காக தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள பாலத்தின் துாண்கள், பொதுச்சுவர்களில் கலைநயத்துடன் ஓவியங்களை வரைந்து அசத்துகின்றனர் 'கலைகள் நாம்' என்ற குழுவினர்.
இக்குழுவை ஒருங்கிணைக்கும் சென்னையை சேர்ந்த எனிமாள் கூறுகையில், 'எங்கள் குழுவில் சென்னை, ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பலர் முழுநேர ஓவியர்கள். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், முதியோர் என வயது வித்தியாசம் இன்றி பல தரப்பினர் உள்ளோம். பொது இடங்களில் அழகான ஓவியங்களை வரைந்து அதனை பிறர் ரசித்து மகிழும் போது அதை பார்த்து நாங்கள் சந்தோஷம் அடைகிறோம்.
ஒரு இடத்தில் ஓவியம் வரைவதற்கு முன் அந்த இடத்தில் என்ன தலைப்பில் ஓவியம் வரையலாம் என குழுவில் உள்ளவர்கள் முடிவு செய்வோம். இந்த நாளில் ஓவியம் வரைவோம் என்றால் இன்ஸ்டாகிராம் மூலம் குழுவில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிப்போம். அதனை பின்பற்றி குறிப்பிட்ட இடத்தில் நேரம் தவறாமல் அனைவரும் ஒன்றிணைவோம்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலர் மன அழுத்தத்தை போக்குவதற்காக எங்கள் குழுவுடன் சேர்ந்து ஓவியம் தீட்டுகின்றனர். அரசுப்பள்ளிகளில் தனியார் உதவியுடன் ஓவியங்கள் வரைந்து தருகிறோம். சில பள்ளிகளில் பெயின்ட் ஸ்பான்சர் செய்வார்கள். அவர்களுக்கு குறைந்த செலவில் ஓவியம் வரைந்து கொடுக்கிறோம். குழுவினர் இணைந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி வழங்குகிறோம். மாணவர்களுக்கு ஓவியத்தின் அடிப்படையை கற்று கொடுப்போம், அவர்கள் வரையும் ஓவியத்தில் தவறுகள் செய்தால் திருத்தி ஊக்குவிப்போம்.
எங்கள் குழுவினர் கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பாலத்தின் துாண்களில் வரைந்தோம். தற்போது மாநிலம் முழுவதும் அதிக இடங்களில் சுவர் ஓவியம் தீட்ட ஆர்வமாக அழைக்கின்றனர் என்றார்.