'பக்தி இலக்கியமாகிறது இலக்கியம் பிரார்த்தனையாகிறது '
'பக்தி இலக்கியமாகிறது இலக்கியம் பிரார்த்தனையாகிறது '
UPDATED : ஆக 30, 2026 08:06 AM
ADDED : ஆக 29, 2026 07:41 PM

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய, 'சத்குரு - மாறும் யுகத்தின் முகம்' என்ற நுால் குறித்து எழுத்தாளர் கனகதுாரிகா, தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து, 'சத்குரு - மாறும் யுகத்தின் முகம்' என்ற தலைப்பில் ஒர் அற்புதமான நுாலை வெண்பா வடிவத்தில் எழுதி இருக்கிறார் மரபின்மைந்தன்.
நுாறு வெண்பாக்கள் கொண்ட இந்த நுாலில், ஆன்மிக தேடலில் சத்குருவின் எல்லையற்ற பயணத்தையும், இயற்கையின் மீதான பேரன்பையும், பல்லுயிர்களிடம் அவர் கொண்டிருக்கும் கருணையையும் கவித்துவ அழகுடன் எழுதி இருக்கிறார்.
சத்குருவை ஆன்மிகக் குருவாக மட்டுமில்லாமல், மாற்றத்தை முன்னெடுக்கும் மனிதராகவும், இளைஞர்களைத் துாண்டும் ஆளுமையாகவும், பதிவு செய்திருக்கிறார் நுாலாசிரியர்.
சில இடங்களில் ஒரு சொல் நம்மை நிறுத்துகிறது. சில இடங்களில் ஒரு உருவகம் நம்மை பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது. இன்னும் சில இடங்களில், “இதை இப்படியும் பொருள் கொள்ளலாமா?” என்று நமக்குள் ஒரு தேடலைத் உருவாக்குகிறது.
சொல்லாட்சி, அந்தத் திருக்கோலத்தைப் பற்றிய ஒரு புதிய தேடலை உருவாக்குகிறது. இறைவன் அழிப்பவனாக மட்டுமல்ல; அரவணைப்பவனாகவும் இருக்கிறான். அவன் பேராற்றல் கொண்டவனாக மட்டுமல்ல; பக்தனின் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்கும் அளவுக்கு மென்மையானவனாகவும் இருக்கிறான்.
இந்த நுாலின் சிறப்பு பக்தியையும், இலக்கியத்தையும் இருவேறாக பிரிக்காமல், இரண்டையும் ஒன்றாக்கி செல்கிறது. பக்தி மட்டும் இருந்தால் அது பிரார்த்தனையாகிவிடும். இலக்கிய நயம் மட்டும் இருந்தால் அது கவிதையாக நின்றுவிடும். ஆனால் இங்கே பக்தி இலக்கியமாகிறது; இலக்கியம் பிரார்த்தனையாகிறது.
ஒரு கவிதை வாசிக்கப்படுவது மட்டுமல்ல; அது ஒரு நாள் நமது பிரார்த்தனையில் இடம்பெறத் தொடங்கும்போது, அந்தக் கவிதை நம்முடையதாகி விடுகிறது.
நாம் பல நுால்களைப் படிக்கிறோம். ஆனால் சில நுால்கள் மட்டுமே நம்மை சிந்திக்க வைக்கின்றன. அந்த நுால்களில் இந்த நுாலும் ஒன்று.
