/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சமூகத்திற்கு செய்தி சொல்ல வேண்டும்: எழுத்தாளர் நா.பா.மீரா
/
சமூகத்திற்கு செய்தி சொல்ல வேண்டும்: எழுத்தாளர் நா.பா.மீரா
சமூகத்திற்கு செய்தி சொல்ல வேண்டும்: எழுத்தாளர் நா.பா.மீரா
சமூகத்திற்கு செய்தி சொல்ல வேண்டும்: எழுத்தாளர் நா.பா.மீரா
ADDED : ஜூன் 23, 2024 08:59 AM

'அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரைதான் தன்னைப் பற்றியோ, மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை. தலைவனாக உயர்ந்த பின் தான் இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கிவிடுவோமோ என்ற பயமும், இதற்கும் மேலே போக வேண்டுமே என்ற சுயநலமும் வருகின்றன'-இதுபோன்ற பொன்மொழிகளை எழுத்தில் விதைத்தவர் மறைந்த எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி.
சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 'தீபம்' இலக்கிய இதழை நடத்தியதால் 'தீபம்' பார்த்தசாரதி என அழைக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நதிக்குடியை சேர்ந்தவர். அவரது மகள் நா.பா.மீரா. வேதியியல்துறையில் முனைவர் பட்டம் முடித்தவர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
'தீபம் நா.பா.,வின் பொன்மொழிப் புதையல்' புத்தகத்தை தமிழில், ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: பொருளாதார நெருக்கடியான சூழலிலும், தமிழ் மீதான ஆர்வத்தை விட்டுக் கொடுக்காமல் 23 ஆண்டுகளாக தீபம் இதழை தந்தை நடத்தினார். அவரது மறைவிற்கு பின்,'உங்கள் குடும்பத்திலிருந்து யாரும் எழுத்துத்துறைக்கு வரவில்லையா,' என பலர் கேட்டனர். இத்துறையில் எப்படி நுழைவது என அப்போது தெரியவில்லை.
தமிழ் நுால்கள் படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அமுதசுரபி இதழில் கட்டுரைகள் எழுதினேன். அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் நிறைய எழுத வேண்டும் என ஊக்குவித்தார்.
சிறு வயதில் வாய்ப்பை தவறவிட்டதாக தற்போது உணர்கிறேன்.
எனது தந்தை எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அவற்றிலுள்ள பொன்மொழிகளை புத்தகமாக எழுத மதுரைக் கல்லுாரி தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் கமலம் சங்கர் உதவி புரிந்தார். ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு திறமையான பெண், பணக்கார வீட்டில் வேலைக்கு சென்று எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கும் சூழலை பேசும் 'பெண்ணே நீயும் பெண்ணா', மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் 'விழியோடு உறவாடு' என்ற நாவல்கள் எழுதினேன்.
தற்போது எழுதுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிறைய எழுதுகிறேன். கிடைக்க வேண்டிய நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்திற்கு ஒரு செய்தியை கொண்டு செல்ல வேண்டும்.
அதை எழுத்தில் எந்த காலகட்டத்தில் எப்படி கொண்டுவர வேண்டுமோ அதை எழுத வேண்டும் என்பதே நோக்கம். நான் எழுதிய 'ஐம்பதிலும் ஆசை வரும்' சிறுகதை தினமலர் வாரமலரில் வெளியாகி பாராட்டை பெற்றது என்றார்.