தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...

தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...

தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...


ADDED : பிப் 01, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொந்த ஊர் கோவை. நான்காம் வகுப்பு படிக்கும் போதே நடன வகுப்பில் பெற்றோர் சேர்த்தனர். பக்கத்து அறையில் பாட்டு வகுப்பு நடக்கும். நடனம் ஆடிக்கொண்டே பாட்டில் லயித்து அங்கு சென்று விடுவேன். இதைப் பார்த்த டான்ஸ் மாஸ்டர், உனக்கு பாட்டுப்பாடுவதில் விருப்பம் என்றால் அங்கே சேர்ந்து கொள் என்று அனுமதி தந்தார். பெற்றோர் பாட்டு வகுப்பில் சேர்த்து விட்டனர். என் முதல் குரு இந்து, இரண்டாண்டுகள் அவர்களிடம் கற்றுக் கொண்டிருந்தபோதே, இடம் மாறிச் சென்றார். அடுத்ததாக நான்கு ஆசிரியர்களிடம் மாறி மாறி கற்றுக் கொண்டேன்.

அதன் பின் பிளஸ் 2, கல்லுாரிப் பருவத்தில் பாட்டுக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது. இன்ஜினியரிங் முடித்து இரண்டாண்டுகள் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தேன். திருமணமான போது கொரோனா தொற்று காலம் என்பதால் வேலையைத் தொடரவில்லை. வீட்டுக்கு அருகிலுள்ள பார்லரில் பியூட்டீஷியன் படிப்பு கற்றுக் கொண்டேன். சென்னை மேக்கப் ஆர்டிஸ்ட் அஸ்மிதாவிடம் கூடுதலாக பிரைடல் மேக்கப் கற்றுக் கொண்டேன்.

கோவையில் இருந்து கணவர் கணேஷ்ராஜாவுக்கு இடமாறுதல் கிடைத்ததால் மதுரைக்கு குடிபெயர்ந்தோம். அவரது துணையுடன் பாட்டு, மேக்கப், வீடு, குழந்தை என்று எளிதாக கையாள முடிகிறது.

இசையின் வழியே பயணம் மதுரை வந்தவுடன் மீனாட்சியம்மன் கோயிலில் கர்நாடக பாட்டு கச்சேரியில் மூன்று பேருடன் சேர்ந்து பாடினேன். அதைப் பார்த்த யாம் இசைக் குழுவினர் அவர்களது கச்சேரியில் என்னை நிரந்தர பாடகியாக சேர்த்துக் கொண்டனர். இசைக்குழு மூலம் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு சென்று பாடுவது என இலவச சேவையை தொடர்ந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கும் இலவசமாக பாட்டு கற்றுக் கொடுத்தேன்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 2 மணி நேர இசைக்கச்சேரி நடத்தினேன். கோயிலில் பாடும் போது முழுமையாக கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு நானும் பாடகி விஜயலட்சுமியும் சேர்ந்து பாடுகிறோம். கோயில்களில் தேவாரம், திருப்புகழ், ஸ்வரங்களுடன் கூடிய கீர்த்தனைகள், பஜனை, பக்திப்பாடல், கர்நாடக இசை தான் முக்கியமாக இடம்பெறும்.

ஜானகியின் குரல் எனக்குப் பிடித்தது ஜானகி, சித்ராவின் பாடல்கள் தான். நான் பாடும் போது ஜானகியின் குரல் பொருத்தமாக இருப்பதாக மற்றவர்கள் சொல்கின்றனர். அதனால் ஜானகியின் பாடல்களை அதிகமாக பாடுகிறேன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கர்நாடக இசைப்பாடல்களையும் விரும்பிப் பாடுகிறேன். குறையொன்றும் இல்லை...' விருப்பமான பாடல்.

வெளியில் செய்யும் கச்சேரிகள் முற்றிலும் மாறுபட்டது. ஆதரவற்ற, முதியோர் இல்லங்களில் மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள் பாடுவோம். வீட்டில் வாய்ப்பாட்டு வகுப்பு எடுக்கிறேன். ஆன்லைனில் பாட்டு கற்றுத் தருகிறேன்.

கற்றுக் கொண்ட மேக்கப் தொழிலையும் கைவிடவில்லை. மணப்பெண் அலங்காரத்திற்கு, திருமணத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே அவர்களின் முக அழகுக்கு முக்கியத்துவம் தந்து டிப்ஸ் தருகிறேன்.

ஒப்பனையும், பாடலும் பணம் தருவதோடு சந்தோஷத்தையும் தருகின்றன. இசை என்பது கவலைகளை மறந்து சந்தோஷமாக பாடி ஆடுவது. அதன் சிறப்பு தனிதான் என்கிறார் தர்ஷனா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us