/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'கொன்னது நீ தானா' அபார்ட்மென்ட் பெண்களின் அழகியல் நாடகம்
/
'கொன்னது நீ தானா' அபார்ட்மென்ட் பெண்களின் அழகியல் நாடகம்
'கொன்னது நீ தானா' அபார்ட்மென்ட் பெண்களின் அழகியல் நாடகம்
'கொன்னது நீ தானா' அபார்ட்மென்ட் பெண்களின் அழகியல் நாடகம்
ADDED : ஆக 24, 2025 04:18 AM

' வே லை பார்க்கும் பெண்களுக்கு விடுமுறை என்றால் எப்போதும் கொண்டாட்டம் தான். ஆனால் கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் நாடகத்திற்காக ஒத்திகை பார்ப்பதே எங்களின் மன அழுத்தத்திற்கு கிடைக்கும் வடிகால்,' என்கிறார் சென்னையைச் சேர்ந்த நாடக இயக்குநரும் பத்திரிகையாளருமான விஜயலட்சுமி.
திருமணமாகி சென்னையில் 'செட்டில்' ஆனாலும் மதுரையில் படித்த போது கல்லுாரி நாட்களில் நாடகங்களில் பங்கேற்ற அனுபவம் ஆழமாய் மனதில் பதிந்திருந்தது. அவ்வப்போது அசைபோட்டு பார்த்த மனது, கொரோனா தொற்றின் போது பீறிட்டு செயல் வடிவத்தை தந்தது என்று நாடக அனுபவத்தை விஜயலட்சுமி விவரித்தார்.
என் மனதுக்கு நெருக்கமானது நாடகங்கள் தான். சென்னையில் நாடகம் நடக்கும் இடங்களுக்கு தவறாமல் செல்வேன். நாடகங்களை விமர்சிக்கும் போது என்னை நானே புதுப்பித்துக் கொள்வதைப் போலிருந்தது. அபார்ட்மென்டில் குடியிருந்தபோதும் கொரோனா தொற்றின் போது தனிமையை உணர்ந்தேன். அப்போது வெளியில் செல்ல முடியவில்லை. எனவே நாடகம் எழுதி இயக்க திட்டமிட்டேன்.
தோழிகள் மாலதி, பவித்ரா, ஐஸ்வர்யா நாடக கதாபாத்திரத்திற்கு தயார் என்று கைகொடுத்தனர். 2021 ல் சர்வம் நாடகப்ரியாஸ் என எங்கள் அபார்ட்மென்ட் பெயரிலேயே நாடகக்குழுவை ஆரம்பித்தேன். எல்லோருமே வெவ்வேறு வேலைகளுக்குச் செல்பவர்கள். எனவே நாடகத்திற்கான ஒத்திகை என்பது விடுமுறை நாளில் மட்டுமே சாத்தியமானது. சில நேரங்களில் இரவு 10:00 மணிக்கு மேல் ஒன்று கூடி கதாபாத்திரங்களுக்கு வசன ஒத்திகை செய்த அனுபவமும் உண்டு.
பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தியே நாடகம் எழுதினேன். ஆண் கதாபாத்திரங்களில் நாங்களே வேஷமிட்டு நடித்தோம். அதில் நகைச்சுவை கலந்து முதன்முதலாக எங்கள் அபார்ட்மென்டில் நாடகம் நடத்திய போது அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றோம். அந்த உற்சாகம் 2வது நாடகத்தை எழுத வைத்தது. இதுவரை 8 நாடகங்களை அரங்கேற்றியுள்ளோம். முதலில் அபார்ட்மென்ட், அதன் பின் கல்லுாரிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் என 20க்கும் மேற்பட்ட முறை நாடகம் அரங்கேற்றியுள்ளோம். எல்லாமே அரைமணி நேர நாடகங்கள் தான்.
நாடகத்திற்கு வசனங்களைத் தாண்டி பெரிய தேவை இல்லை என்பதோடு எனக்கு வீணை வாசிக்கத் தெரியும் என்பதால் சிறு அளவில் நானே இசையமைத்தேன்.
எங்களை ஒரே நீரோட்டத்தில் இணைத்ததும் நாடகங்கள் தான். செட்டிங்ஸ் போடாமல் நாடக பின்னணி (பேக்ரவுண்ட்) வேலையை நாங்களே செய்து விடுவோம். கோயில் என்றால் அதற்கேற்ப மாலை, பூ வடிவமைப்பில் எளிமையாக செட் அமைப்போம். நாடகத்தில் நடிக்கும் போது திடீரென யாராவது சொதப்பினால் மற்றவர்கள் அந்த டயலாக்கை பேசி சமாளித்து விடுவோம். வசனம் மனப்பாடம் ஆனபிறகு உச்சரிப்பில் கவனம் செலுத்துகிறோம். பதட்டமின்றி நிதானமாக பேசுவோம். மைக் முன் நின்று கொண்டே பேசினால் நன்றாக இருக்காது என்பதால் நடந்து கொண்டே மைக்கில் பேசி நடிப்போம். நாரதர் நாடகத்தில் உட்கார்ந்தபடி மைக்கில் பேசி அசத்தி கைத்தட்டல் பெற்றோம்.
நாங்களே மியூசிக் அமைத்தோம்.
ஒன்பதாவது நாடகத்தை 'த்ரில்லர்', நகைச்சுவை கலந்து 'கொன்னது நீ தானா' என்ற டைட்டிலில் உருவாக்கியுள்ளோம். கேசவன் ராகவன் எழுதியுள்ள முழுநீள நாடகமாக ஒன்றரை மணி நேரம் நடத்த உள்ளோம். தக் ஷின் இசையமைத்துள்ளார். இருவரும் 'எக்ஸ்சேஞ்ச் ஆபர்' என்ற தலைப்பில் எட்டாவது நாடகத்திற்கும் ஸ்கிரிப்ட், இசையில் உதவியுள்ளனர். இதற்காக ஒன்றரை மாதங்களாக தினமும் நேரிலும் அலைபேசியிலும் குழுவாக ஒன்றரை மணி நேரம் ஒத்திகை பார்க்கிறோம். ஆக. 27 விநாயகர் சதுர்த்தியன்று நாடகத்தை சென்னையில் எங்கள் அபார்ட்மென்டில் நடத்துகிறோம். அதன்பின் வெளியிடங்களுக்கு செல்வோம். எங்கள் குழுவில் மாலதி, ஐஸ்வர்யா, பூர்ணிமா, பிரேமலதா, தீபா, சமந்தா பெரும்பாலான நாடகங்களில் நடித்துள்ளனர்.
நாடகம் எங்களது கிரியேட்டிவிட்டியை தினந்தோறும் அதிகப்படுத்துகிறது. தன்னம்பிக்கை தருகிறது. மேடையேறும் போது பயமின்றி பேச முடிகிறது. இதில் வருமானம் என்று பார்க்க முடியாது. கல்லுாரி மாணவர்கள் இதுபோன்ற நாடகங்களை பார்த்ததில்லை என்கின்றனர். அதற்காகவே நாடகக்கலையை மீட்டெடுக்க நினைக்கிறோம். நாடகம் முடிந்தபின் குறைகளைப்பற்றி நாங்களே விமர்சனம் செய்கிறோம் என்றார்.