UPDATED : மே 23, 2026 04:24 PM
ADDED : மே 23, 2026 04:00 PM

அதிர்ந்து பேசக்கூட தெரியாத கண்ணம்மா, சில நாட்களாக யாரை பார்த்தாலும் மூச்சுவிடாமல் பேசுவதும், புலம்புவதுமாக இருந்தாள்.
திடீரென யாரும் அழைக்காமலே ஏதேதோ கேட்பதாக பிதற்றி கொண்டிருந்தாள். அபாயத்தின் அறிகுறியை அறிந்த வீட்டார், டாக்டரிடம் சென்றனர். சிகிச்சைக்குப் பின் இப்போது கண்ணம்மா ஓகே.
இதைப்பற்றி உளவியல் நிபுணர் டாக்டர் எந்துமதியிடம் கேட்டோம்....
இது, செவிவழி மாயத்தோற்றம் என்றழைக்கப்படும் மனசிதைவு நோயாக இருக்கலாம். யாரும் பேசாமலே, தன் காதில் ஏதோ கேட்டுக் கொண்டே இருப்பதாக தோன்றும். இதை கண்டுகொள்ளாமல் விட்டால், தற்கொலை, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற, அபாய நிலைக்கு கொண்டு செல்லும்.
இதற்கு மனநல சிகிச்சை அவசியம். சில மருந்துகள், தெரபி மூலம் பழைய நிலைக்கு மாற்ற முடியும். இதன் ஆரம்பப்புள்ளி, மன அழுத்தத்தில் இருந்துதான் துவங்குகிறது. இது பெரும்பாலும், வயதானவர்களுக்கே ஏற்படுகிறது.
யாரும், எதுவும் கேட்காமலே, சிலர் தாமாக முன்வந்து சொந்தக்கதையை சொல்வர். யாரிடமாவது பேசி, புலம்பி கொண்டே இருப்பதும் ஒருவித மன நோய் தான்.
சிலருக்கு வயதானால், மூளையின் செயல்திறன் குறைந்து மறதிநோய் ஏற்படும். இவர்களுக்கு கடந்தகால நினைவுகள் அப்படியே இருக்கும்.
ஆனால் அன்றோ, முந்தைய நாளோ நடந்தது மறந்துவிடும். சாப்பிட்ட பிறகும் மீண்டும் சாப்பாடு கேட்பது, குளித்த பிறகு மீண்டும் குளிக்க செல்வது என அன்றாட நிகழ்வுகளில் குழப்பம் ஏற்படும். இதற்கு கட்டாயம் சிகிச்சை எடுக்க வேண்டும்.
தனிமை, புறக்கணிப்பு, பொருளாதார தேவைகளுக்கு பிறரை சார்ந்திருக்கும் நிலை, குழந்தைகளிடம் முக்கியத்துவம் குறைதல் போன்ற பல்வேறு காரணிகள் தான், மனநோய்க்கு பிள்ளையார் சுழி போடுகின்றன.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல், மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம். உடல்நலம் போலவே மனநலத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
- ரா.வித்யா
