/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பெண்களே... நீங்களே ஹீரோயின்! தன்னம்பிக்கை தரும் அமுதா நடராஜன்
/
பெண்களே... நீங்களே ஹீரோயின்! தன்னம்பிக்கை தரும் அமுதா நடராஜன்
பெண்களே... நீங்களே ஹீரோயின்! தன்னம்பிக்கை தரும் அமுதா நடராஜன்
பெண்களே... நீங்களே ஹீரோயின்! தன்னம்பிக்கை தரும் அமுதா நடராஜன்
ADDED : டிச 15, 2025 10:51 AM

சமூக பிரச்னைகள் குறித்து தன் கருத்துக்களை துணிச்சலுடன் பகிரும் எழுத்தாளர், அக்கறை உணர்வுடன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் பேச்சாளர், நாடி வரும் பெண்களின் துன்பங்களை நீக்கும் ஆலோசகர், அரிய ஆன்மிக தகவல்களை வழங்கும் 'யு டியூபர்' என பன்முகங்களை கொண்டவர் மதுரையை சேர்ந்த அமுதா நடராஜன்.
அவர் நம்முடன் தனது அனுபவங்களை பகிர்கிறார்...
சொந்த ஊர் மதுரை. கணினி அறிவியலில் முதுகலை, எம்.பில்., பி.எட்., பயின்றுள்ளேன். ஆறாண்டுகள் கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றினேன். கணவர் நடராஜன் மரைன் முதன்மை பொறியாளர். மகன் பரத், பெங்களூருவில் பயிற்சி டாக்டராக உள்ளார். மகள் சஞ்சனா சென்னையில் சட்டம் பயில்கிறார்.
குடும்பச் சூழலால் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே 'ஹோம் பார் ஹோம் மேக்கர்ஸ்' என்ற நிறுவனத்தை 2010ல் ஆரம்பித்தேன். பெண்களுக்கான பார்லர், ஜிம், யோகா, பாட்டு, டான்ஸ் வகுப்புகள், குழந்தைகளுக்கான டியூஷன், ஸ்போக்கன் ஹிந்தி, இசைக் கருவி பயிற்சி வகுப்புகள் என நடத்தி வந்தேன். இதன்மூலம் சுற்றுவட்டாரத்தில் பெண்கள் பலர் அறிமுகமாகினர்.
'குயின் பீஸ் லேடீஸ் கிளப்' எனும் குரூப் உருவாக்கி அதில் அவர்களை இணைத்து நட்புகளை வளர்த்தேன். நீச்சல், டிரைவிங் என தனிப்பட்ட முறையில் தேவையான பல திறமைகளை, 40 வயதிற்கு மேல் கற்று பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறேன்.
எழுத்தாளராக...
எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தது முதல் நான் 'தினமலர்' வாசகி. 6ம் வகுப்பு படித்தபோது காவிரி ஆறு குறித்து கட்டுரை எழுதினேன். அதில், 'எம்.ஜி.ஆர்., என்னை பெண் கேட்டும் கூட என் தந்தை தரவில்லை. அவ்வளவு அழகானவள் நான்' என்று காவிரி கூறுவது போல் எழுதியிருந்தேன். அதற்கு பாராட்டு குவிந்தது. இப்படி கற்பனைத் திறனுடன், நாட்டு நடப்பையும் சேர்த்து எழுதும் வழக்கம் சிறு வயதிலேயே இருந்தது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு என் பேச்சின் மூலம் ஊக்கமளித்து வருகிறேன். தற்கொலை, கொலை, போதைக்கு அடிமை உள்ளிட்ட செய்திகளை படித்து எனக்குள் ஏற்படும் தாக்கத்தை தினமலர் நாளிதழின் 'என் பார்வை' பகுதியில் எழுதி வந்தேன். சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுகிறேன்.
ஆன்மிக தகவல்கள் கதை வடிவில்
ஒருமுறை, என் கணவரின் உடல்நிலை காரணமாக சில நாட்கள் அவரால் வேலைக்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. இவ்வளவு படித்தும், அவருக்கு பக்கபலமாக 'நான் இருக்கிறேன்' என்று சொல்லும் அளவுக்கு எனக்கான வருமானம் இல்லையே என தோன்றியது. கொரோனாவுக்கு பின் யு டியூப்பில் பெண்கள் பலர் ஆன்லைன் பிசினஸ் செய்து வெற்றி பெற்றது என்னை பிரமிக்கச் செய்தது. அதன் விளைவாக 'யு டியூப்' சேனல் ஆரம்பித்தேன்.
யு டியூப் போன்று பெண்களுக்கு வரப்பிரசாதம் எதுவுமில்லை. சினிமாவில் ஹீரோயின்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். யூ டியூபில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு திறமை மிகுந்த பெண்களும் ஹீரோயின் தான். திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு தேட வேண்டாம். நாமே சானல் துவங்கலாம்.
எனக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம் என்பதால், அது சம்மந்தமான சேனல் 'அமுதா நடராஜன்' என என்னுடைய பெயரிலேயே ஆரம்பித்தேன். அதில் 'ஆதி சொக்கநாதர் கோயில் வரலாறு', 'பிள்ளையாருக்கு ஏன் அருகம்புல் பிடிக்கும்', 'ஐயப்பன் ஏன் மூக்கில் விரல் வைத்துள்ளார்' போன்ற அரிய பல ஆன்மிக தகவல்களை கதை வடிவில் 'ஷார்ட்ஸ்', வீடியோவாக வழங்கி வருகிறேன். பள்ளியில் கதை சொல்லிய அனுபவம் இதில் கைகொடுக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கின்றனர். குறுகிய காலத்திலேயே 2 மில்லியன் பார்வையாளர்கள் எனக்கு கிடைத்துள்ளனர்.
தற்போது 'அவளின் குரல்' எனும் தலைப்பில் பெண்களுக்கான 'பாட் காஸ்ட்', என் சேனலிலேயே ஆரம்பித்துள்ளேன். அதில் பெண்கள் பிரச்னைகளை அலசுவது, கவுன்சிலிங் தருவது உட்பட 104 சாதித்த பெண் மணிகள் பற்றி பேசி வருகிறேன்.
சமூக ஊடகங்களை நன்றாக பயன்படுத்தினால், அதன் வழியே சாதனைகள் நிகழ்த்தலாம்; சம்பாதிக்கவும் செய்யலாம் என்றார்.
மெயில்: r_amudha@yahoo.com

