தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/சிங்கப்பூரில் சிறப்பாய்... இலக்கியத்தமிழ்

சிங்கப்பூரில் சிறப்பாய்... இலக்கியத்தமிழ்

சிங்கப்பூரில் சிறப்பாய்... இலக்கியத்தமிழ்


ADDED : டிச 15, 2025 10:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 10:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராகவும் கல்லுாரியில் விரிவுரையாளராகவும் சிங்கப்பூர் மாணவர்களிடம் தமிழை வளர்ப்பவர் ரத்தின வெங்கடேசன். மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரும் போதே சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

சிங்கப்பூரில் மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் என 4 அலுவல் மொழிகள் இருந்தாலும் தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம் என்கிறார் ரத்தினவெங்கடேசன்.

அவர் கூறியது...

புதுச்சேரியைச் சேர்ந்தவன் நான். தமிழில் எம்.பில்., முடித்து 1997ல் சிங்கப்பூரில் உள்ள ஓபரா எஸ்டேட் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக சேர்ந்தேன். தொடர்ந்து தஞ்சை தமிழ்ப்பல்கலையில் பி.எச்டி., முடித்தேன். 10 ஆண்டுகள் கழித்து அங்குள்ள கல்வி அமைச்சுப்பணியில் பாடத்திட்ட வரைவு அதிகாரியாக மூன்றாண்டுகள் பணிபுரிந்தேன்.

சிங்கப்பூரில் கல்லுாரிக்கல்வி ஆரம்பித்த போது சிம் பல்கலையில் விரிவுரையாளராக தொடர்ந்தேன். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி என 30 ஆண்டு காலம் மாணவர்களோடு தமிழில் பயணித்த அனுபவம் அலாதியானது.

இந்தியக் கல்வி முறைக்கும் சிங்கப்பூர் கல்வி முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அங்கு அகரத்தில் இருந்து ஆரம்பிக்க மாட்டோம். ஒலிப்பு நிலையிலும் எழுத்து நிலையிலும் எது எளிமையாக இருக்குமோ அதைத் தான் பாடமாக நடத்துவர். தமிழில் 'அ' என்று தொடங்காமல் 'ட, ப, ம, ய...' என துவங்குகிறோம். ஓராண்டுக்குள் தமிழ் நெடுங்கணக்கான உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்துகளைக் கற்றுத் தருகிறோம்.

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அந்தந்த மாணவர்களின் தமிழ்த்திறனுக்கு ஏற்ப வினாத்தாள் தயாரிக்கப்படும். பொது வினாத்தாள் என தனியாக இருக்காது.

தமிழ் சோறு போடும்

சிங்கப்பூரில் வீட்டிலும் வெளியிலும் எல்லா நேரமும் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். தமிழால் என்ன பயன், சோறு போடுமா என மாணவர்களும் கேட்பதுண்டு. பெற்றோர்களின் ஊக்கத்தினால் மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர். தமிழாசிரியர் வேலைக்கு தமிழ்ப்பாடம் படிக்க வேண்டும். நாங்கள் வந்து தமிழ் கற்றுக் கொடுக்கிறோம். தற்போது தமிழ் படித்த நிறைய பேர் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியர்களாக சேர்ந்துள்ளனர்.

தமிழுக்கு சிறப்பு

தென்னிந்திய பெற்றோராக இருந்து மாணவர்களின் தந்தை பேசும் மொழி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எதுவாக இருந்தாலும் இங்கே 2ம் மொழியாக தமிழ் தான் படிக்க வேண்டும். வடஇந்திய பெற்றோர்களின் பிள்ளைகள் இந்தி மொழி படிக்க வேண்டும். சிங்கப்பூரில் தமிழ் பேசுபவர்கள் சந்தித்தால் பொதுவெளியில் இலக்கணத் தமிழாகவே பேசுவர். கொஞ்சம் மலாய் கலந்த தமிழில் பேசுவர். ஒருபோதும் தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசமாட்டார்கள். தமிழகத்தில் தான் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கலந்து பேசுகிறார்கள்.

நான் சிங்கப்பூர் வந்த போது ஏற்கனவே தமிழ் இலக்கியக் களம் இருந்தது. அதற்கு 2005ல் புது வடிவம் கொடுத்தோம். இங்கு எழுத்தாளர் கழகம், கவிமாலை, தமிழ்மொழிப்பண்பாட்டு கழகம், மாதவி இலக்கிய மன்றம் அமைப்புகளும் தமிழை வளர்க்கின்றன.

தமிழில் புதிய இலக்கியத்தை படிக்க இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பாடத்திட்டத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் இருக்காது. இலக்கியங்களை தேடி படிக்கவும் வாய்ப்பில்லை. பழந்தமிழ் இலக்கியங்களின் அற்புத செய்திகளை ௨ம் நிலையில் தமிழ் படிக்கும் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கமாக மாறியது.

பாரதிதாசன் பெயரில் இலக்கியங்களை மையமாக வைத்து ஆண்டுதோறும் சொற்போர், வழக்காடு மன்றம் நடத்துகிறோம். காப்பிய விழாவில் ஐம்பெரும் காப்பியம், சிற்றிலக்கிய வகையில் குற்றாலக்குறவஞ்சி, முக்கூடல் பள்ளு குறித்தும் விழாவில் சேர்த்துள்ளோம். ஆண்டுதோறும் ஏதாவது ஒரு இலக்கியம் குறித்து முழுநாள் சிந்திக்கும் வகையில் விழா நடத்துகிறோம்.

மாதந்தோறும் 3வது சனிக்கிழமை சிறுபஞ்சமூலம், பதிணென் கீழ்க்கணக்கு என ஏதாவது ஒரு இலக்கியம் குறித்து உரை நிகழ்த்துகிறோம். பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ள வாழ்வியல் முறை, பண்பாடு, பழக்கவழக்கங்களை இந்த தலைமுறைக்கு சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us