/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஜிம்னாஸ்டிக் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் சாஷ்வந்த்
/
ஜிம்னாஸ்டிக் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் சாஷ்வந்த்
ஜிம்னாஸ்டிக் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் சாஷ்வந்த்
ஜிம்னாஸ்டிக் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் சாஷ்வந்த்
ADDED : டிச 15, 2025 10:55 AM

மற்ற விளையாட்டுகளை விட ஜிம்னாஸ்டிக் கடினம் என்பதை மறுக்க முடியாது. உடலை வளைத்து அந்தரத்தில் பறந்து சாதனை படைப்பது அவ்வளவு எளிதல்ல. கடந்தாண்டு ஐதராபாத்தில் நடந்த தேசிய போட்டிகளில் ஆறு, 2024ல் பெங்களூருவில் நடந்த தேசிய போட்டிகளில் ஆறு தங்கம் வென்றிருக்கிறார் இவர்.
சென்னையில் 2023 முதல் நடப்பாண்டு வரை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்று வருகிறார். இருப்பினும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம் என்கிறார் ஒன்பது வயதான சாஷ்வந்த்ராஜூ.
சென்னை செம்மனஞ்சேரி எச்.எல்.சி., சர்வதேச பள்ளியில் 3வது பயிலும் மாணவரான சாஷ்வந்த் தந்தை மகேஷ் ராஜூ ஐ.டி., நிறுவன பொறியாளர், தாயார் அனுஷா தொழில்முனைவோர்.
இளம் வயதில் இந்தளவு சாதனை எப்படி சாத்தியமாயிற்று என சாஷ்வந்த்ராஜூ தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
ஆந்திர மாநிலம் புத்துார் அருகே குக்கிராமம் தான் சொந்த ஊர். அப்பா வேலை விஷயமாக சென்னையில் பல ஆண்டுகளாக இருக்கின்றார். சென்னையில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு அப்பா ஒரு முறை அழைத்து சென்றார். அங்கு விளையாடிய அண்ணன்களை பார்த்து நானும் அதுபோல செய்ய முற்பட்டேன். அதை கவனித்த பயிற்சியாளர் சஞ்சய், என் ஆர்வத்தை கண்டு அப்பாவிடம் பேசினார். தன்னிடம் பயிற்சி பெற வேண்டுகோள் விடுத்தார். அவரது ஸ்டூடியோவில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற அப்பா ஏற்பாடு செய்தார்.
அங்கு பயிற்சியாளர் சஞ்சய், செல்லா பயிற்சியளித்தனர். பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் ஸ்டூடியோவில் நேரம் செலவிடுவேன். பயிற்சியாளர்கள் ஊக்கத்தால் ஐதராபாத், பெங்களூருவில் தேசிய போட்டிகளில் தங்கம் வெல்ல முடிந்தது. ஜிம்னாஸ்டிக்கில் 8 லெவல்கள் உள்ளன. தற்போது நான் 6வது லெவல் வரை வந்து விட்டேன். 17 வயதினர் தான் ஆறு லெவல் வரை செல்வர். இந்த வயதில் இந்தளவுக்கு வந்தது சாதனை தான். கால்பந்தும் நன்றாக விளையாடுவேன். மாவட்ட, மாநிலகால்பந்து போட்டிகளிலும் பங்கேற்று வருகிறேன்.
ஜிம்னாஸ்டிக்கிற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறேன். ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது ஆசை. தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன். பல்வேறு நிறுவனங்களும் ஸ்பான்ஸர் செய்ய முன்வருவது சந்தோஷமாக உள்ளது.
விளையாட்டு மட்டுமின்றி படிப்பிலும் 80 சதவீத மதிப்பெண் பெற்று விடுவேன். காரணம் பெற்றோர் தான். டிவி, அலைபேசி பார்க்க அவர்கள் விடுவதில்லை. விளையாட்டு தொடர்பான செய்திகளுக்காக சிறிது நேரம் மட்டும் அலைபேசி பார்க்க அனுமதிப்பர். மற்றபடி சினிமா, அலைபேசிக்கும் எனக்கும் ரொம்ப துாரம்.
விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமா ஒன்றில் ஜிம்னாஸ்டிக் வீரராக நடிக்க அழைத்தனர். சினிமாவில் இறங்கினால் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர் விரும்பவில்லை.
ஜிம்னாஸ்டிக் தான் என் உலகம். அதில் சாதனை படைக்க வேண்டும் என்பது என் ஆசை என்றார் மழலை மொழியில்.
இவரை வாழ்த்த 96000 15143

