ADDED : செப் 28, 2025 03:57 AM

ம னிதனை இயல்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுவது விளையாட்டு. பள்ளி கல்லுாரிகளில் தொடங்கி முதிர் பருவத்தினர் வரை விளையாட்டை தொடர்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். விளையாட்டின் மீதான காதல், ஆர்வம் காரணமாக அதற்கே அர்ப்பணிப்பாய் உழைப்பவர்கள் இந்நாட்டின் முகங்களாக தேசிய, சர்வதேச போட்டிகளில் மிளிர்கிறார்கள். அந்தவகையில் தொடர்பயிற்சி, முழு ஈடுபாட்டாலும் களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் தன் தடத்தை பதியவைக்கிறார் திண்டுக்கல்லை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஸ்டிக்கா ஜாஸ்மின்.
இவரிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
திண்டுக்கல்லில் கல்லுாரியில் 2ம் ஆண்டு எம்.பி.ஏ., படிக்கிறேன். சொந்த ஊர் திண்டுக்கல் அருகே ந.பஞ்சம்பட்டி. அப்பா பெஞ்சமின் பிராங்கிளின் பெயின்டர். அம்மா ஆன்டோ ஜெனினா ஜானிபாய். ஒரே பிள்ளை என்பதால் சிறுவயதிலிருந்தே எனது விருப்பத்திலேயே எல்லாம் நடக்கும். ஷீக்கா மாளவியா என்பவர் சிறந்த பெண் எழுத்தாளர். பிரிட்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் பெயரின் மருவலாக எனக்கு 'ஸ்டிக்கா' என முன்பெயரிட்டனர்.அடிப்படையில் நான் இறகு பந்தாட்ட வீராங்கனை. அப்பா, சித்தப்பா என என் வீட்டில் எல்லோரும் ஹாக்கி விளையாட்டு வீரர்கள். ஆகவே விளையாட்டு ஆர்வம் ரத்தத்தில் இருந்தது.
அப்பாவுக்கு ஹாக்கி தவிர குத்துச்சண்டை மீதும் தீராத பிரியம் உண்டு. வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் டி.வி.,யில் குத்துச்சண்டை பார்ப்பார். சிறுவயதிலிருந்தே அவரோடு சேர்ந்து குத்துச்சண்டைகளை பார்த்ததால் எனக்கும் ஆர்வம் இருந்தது. என்னால் இறகு பந்தாட்டத்தில் முழு கவனமும் செலுத்த முடியவில்லை. என்னை நானே காட்டாயத்தின் பேரில் இறகுபந்தில் திணித்திருப்பது போல் உணர்ந்தேன். அந்த தவறை திருத்த முடிவு செய்தேன். குத்துச்சண்டை பயிற்சி பெற்றேன்.
ஆரம்பக்காலத்தில் நிறைய அடி வாங்கினேன். இறகுபந்து விளையாட்டு வீரர் என்றிருந்து திடீரென குத்துச்சண்டைக்கு மாறும்போது ஏற்பட்ட தடுமாற்றம், போட்டி நுணுக்கங்களை கற்பதில் அனுபவமின்மையால் முதல் வெற்றிக்கு சில காலம் ஆனது. அடுத்த சில மாதங்களில் சென்னையில் மாநில குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றேன். ஒரு விளையாட்டு வீரருக்கு கிடைக்கக்கூடிய மனதிருப்தியையும் வெற்றி களிப்பையும் அந்த தருணத்தில் உணர்ந்தேன். அந்த நிமிடத்தில் இருந்து குத்துச்சண்டை தான் எனக்கான பாதை என தீர்க்கமாக முடிவு செய்தேன்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த 3 தேசிய போட்டிகளில் பரிசு பெற்றேன். சமீபத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் தென்மண்டல அளவில் தங்கம் வென்றேன். 6 ஆண்டு குத்துச்சண்டை பயணத்தில் மாநில போட்டிகளில் 5 தங்கம், 2 வெள்ளி, தேசிய போட்டிகளிலும் பதக்கங்கள் பெற்றுள்ளேன்.
போட்டிகளில் சாதிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவருக்கு, வி.ஜி.விளையாட்டு அகாடமி, கலை சங்கமம் வழங்கும் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் விருது பெற்றுள்ளேன்.
பயிற்சி எடுப்பதற்கு இங்கு வசதி குறைவு. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் என்பதால் எனக்கு தேவையான உபகரணங்கள், செலவுகளை முடிந்தவரை குடும்பத்தினர் கவனித்துக் கொள்கிறார்கள். அதை மீறிய செலவு, பயிற்சிக்கு பணம் இல்லாததுதான் குறை. செலவை குறைக்க வீட்டிலே தேவையான உபகரணங்களை வாங்கி வைத்து என்னை நானே பயிற்சிக்கு உட்படுத்திக்கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை உலகறிய செய்ய மேரிகோமிற்கு வாய்ப்பு கிடைத்தது போல் எனக்கும் காலம் கனியும் என்றார்.