ADDED : மார் 10, 2024 12:08 PM

காண்போரைக் கவர்ந்து உள்ளங்களை தன் வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியம். அந்த ஓவியக்கலையில் மரத்தால் சிற்பங்களை செதுக்கி பலரது மனங்களை கொள்ளை கொண்டுள்ளார் இயற்கை மர சிற்ப ஓவியர் பால்ராஜ்.
சிவகங்கையைச் சேர்ந்த இவர் வீட்டோடு சேர்ந்து கலைக்கூடமும் வைத்துள்ளார்.
இவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் உண்டு. பள்ளி படிப்பை முடித்த பின்பு புட்ராஜ் என்ற ஓவிய ஆசிரியரிடம் 6 ஆண்டுகளாக மர உட்பதிப்பு ஓவியக்கலையை கற்றேன். ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனி நிறங்கள் உண்டு. இம்மரங்களை பட்டைகளாக செதுக்கி அதில் கிடைக்கும் நிறக் கலவையைக் கொண்டு ஓவியம் உருவாக்கும் கலைக்குப் பெயர்தான் மர உட்பதிப்பு. மஞ்சள் கடம்பு, பூவரசு, வேங்கை, அழிஞ்சி, வெப்பாலை, நாவல், மா, பலா, மஞ்சனத்தி, நெல்லி போன்ற மரங்களை துண்டுகளாக்கி தகடு போலாக்கி அதில் பல்வேறு உருவங்களை செதுக்கி பின் ஒன்றோடு ஒன்றாக ஒட்டி மர சிற்பங்களை செய்கிறேன்.
நான் 5 வகை நிலங்களையும் மரச் சிற்பங்களில் ஓவியமாக உருவாக்கியுள்ளேன். இந்த சிற்பங்களுக்கு வரவேற்பு உள்ளது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை கலைச்சுடர் மணி விருது, பூம்புகார் கைத்திறன் விருது, தமிழ்நாடு அரசு பூம்புகார் மாநில விருது, தற்போது கலை செம்மல் விருது உள்ளிட்ட விருதுகள் கிடைத்துள்ளன. தேசிய விருது பெறுவதை நோக்கி பயணிக்கிறேன். இந்தக் கலையை எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கற்றுக் கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ள எவருக்கும் கற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளேன் என்றார்.
தொடர்புக்கு: 94423 79809

