UPDATED : செப் 20, 2026 08:28 AM
ADDED : செப் 19, 2026 03:41 PM

பேராசிரியர் ஞானசுந்தரம் எழுதிய, 'மொழி அழிவு, மொழி இழப்பு, மொழி மீட்பு' என்ற நுால் குறித்து, தமிழ்நாடு அரசு பழங்குடி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மகேஸ்வரன் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மத்திய அரசின் இந்திய மொழியியல் நிறுவனத்தில் துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பேராசிரியர் ஞானசுந்தரம்.
இவர் எழுதிய 'மொழி இழப்பு, மொழி அழிவு, மொழி மீட்பு' என்ற இந்த நுால், இந்திய பழக்குடி மக்களின் மொழிகள் குறித்த முக்கிய ஆவணமாக உள்ளது.
இவர் தனது ஆய்வுப்பணிக் காலத்தில் கோவை மாவட்டம், திருமூர்த்திமலைப் பகுதியில் வாழ்ந்து வரும் 'எரவள்ளான்' என்கிற பழங்குடியினர் மொழியைக் கண்டுபிடித்து, அதை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதுடன், அதற்கான இலக்கண நுாலும் எழுதி வெளியிட்டு உள்ளார்.
உலகம் முழுவதும் இருந்த, 10 ஆயிரம் மொழிகளில், 3000 மொழிகள் அழிந்து இப்போது, வெறும் 7000 மொழிகள் மட்டுமே உள்ளன என்பதை, இவரது ஆய்வு நுால் கூறுகிறது.
இந்தியாவில் பேசப்பட்ட, 325 மொழிகளில், இப்போது 196 மொழிகள் அழியும் நிலையில் உள்ளத்தைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா என, மூன்று மாநிலங்களிலும், பரவி வாழும் 'பெட்டக் குறுமப் பழங்குடியினர்' மொழி அழியும் நிலையில் இருப்பதை ஒப்பிட்டு, பதிவு செய்து இருக்கிறார்.
அழிந்து வரும் மொழிகளை மீட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வழிமுறையும் இந்த நுாலில் உள்ளது.
