UPDATED : செப் 20, 2026 08:10 AM
ADDED : செப் 19, 2026 04:11 PM

இடைவிடாத இயந்திரங்களின் சத்தத்திற்கும், வாகனங்கள் கக்கும் புகைப்படலத்திற்கும் நடுவே, 'பிஸி'யான தொழில் நகரான திருப்பூரில், சூழலியல் விழிப்புணர்வு, சமீபகாலமாக மேலோங்கி வருகிறது.
உயரே செல்லும் மின்கம்பிகளில், வரிசையாக அமர்ந்து 'கீச்... கீச்...' என சங்கீதம் மீட்டும் பச்சை கிளிகளின் கூட்டம், காமிராவின் கண்களில் சிக்கியது. அடர்ந்த காடுகளின் செல்லப் பிள்ளைகளான கிளிகள், இப்போது கான்கிரீட் நகரங்களை நோக்கி படையெடுக்கின்றன. அறிவுக் கூர்மை, கவனிக்கும் திறன் கொண்டவை கிளிகள். அதன் தடிமனான வளைந்த அலகு வெறும் அழகு மட்டுமல்ல; கடினமான கொட்டை, விதைகளை எளிதில் கொறித்து உடைக்க உதவும் இயற்கையின் வடிவமைப்பு.
அவை பழங்கள் மற்றும் கொட்டைகளை உண்ணும்போது, விதைகளைச் சேதப்படுத்தாமல் வெகுதொலைவு எடுத்துச் சென்று சிந்துகின்றன. இதனால், புதிய மரங்கள் உருவாகி, தாவரப் பல்லுயிர்ப் பெருக்கம், அங்கு சாத்தியமாகிறது.
'தொழிற்சாலை கான்கிரீட் கட்டடங்கள் நிறைந்த திருப்பூர் போன்ற தொழில் கிளிகளின் வருகை அவசியம்; அது சிறந்த சமிக்ஞையும் கூட. ஒரு நகர்ப்புற சூழலில் கிளிகள் வாழ்கின்றன என்றால், அங்கு நுண் சூழலியலும் மரங்களின் அமைப்பும் இன்னும் அழியாமல் இருக்கின்றன என்பதன் அறிகுறி தான் அது. கிளிகளால் பரப்பப்படும் விதைகளிலிருந்து உருவாகும் தாவரங்கள், தொழில் நகரங்களின் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தி காற்றுத் தூய்மைக்கு மறைமுகமாக உதவுகின்றன.
எந்நேரமும் இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் நகரவாசிகளுக்கு, சிறகடிக்கும் கிளிகளின் அழகும், குரலும், மன அழுத்தத்தை போக்கும் மருந்து என்றும் சொல்லலாம்.நகர்ப்புறங்களில் கிளிகளின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்விடச் சூழல் குறித்து முறையான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்,' என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
வாழ்வியல் போராட்டம்
'மரங்களில், மரங்கொத்திகள் உண்டாக்கும் பொந்துகளையே கிளிகள், அணில்கள் மற்றும் மைனாக்கள் தங்களுக்கான வீடாகப் பயன்படுத்துகின்றன. இதனால் அவற்றுக்கிடையே இருப்பிடத்திற்கான சண்டைகளும் ஏற்படுகின்றன. கிளிகள் கூடு கட்ட, பட்டுப்போன தென்னை, பனை மரங்கள் தேவைப்படுகின்றன. 'விவசாய நிலங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை வெட்டாமல் வைத்திருந்தால் மட்டுமே இத்தகைய பறவைகள் தொடர்ந்து வாழ முடியும்,' என்கின்றனர், சூழலியல் ஆர்வலர்கள்.
