UPDATED : அக் 11, 2026 01:08 PM
ADDED : அக் 10, 2026 08:36 PM

ம ரைன் இன்ஜினியராக இருந்து, குறும்படங்களில் நடித்து தனது திறமையால் ஜெகமே தந்திரம், இரும்புத்திரை, டிசி ஆகிய படங்களில் நடித்து தனக்கான இடத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் சரத் ரவி நம்முடன் பகிர்ந்தது.
முழுப்பெயர் சரத்குமார். அப்பாவின் பெயரான ரவியை படங்களில் நடிக்க துவங்கியதும் அவருக்கு பெருமை சேர்ப்பதற்காக சரத் ரவி என மாற்றிக்கொண்டேன். பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை.
மரைன் இன்ஜினியரிங் முடித்து வேலை பார்த்து கொண்டிருந்த போது கிடைக்கும் விடுமுறை நாட்களில் குறும்படங்களில் நடித்து வந்தேன். சினிமாவில் நடிப்பதே லட்சியம் என்பதால் இன்ஜினியர் வேலையை விட்டு விட்டு சினிமாவிற்குள் நுழைந்தேன்.
முதல் படம் பர்மா. அதன் பின் 'மாரி'. இப்படத்தில் திறமையை வெளிப்படுத்தியதால் 'இரும்புத்திரை' படத்தில் விஷால் உடன் நடிக்க அடுத்த வாய்ப்பும் கிடைத்தது. கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் கதாபாத்திரமாகவும், சண்டை காட்சிகளுடன் 15 நிமிடங்கள் எனக்கானதாக இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு நேர்காணலுக்கு சென்றேன். அவர் எனக்கு 'ஜெகமே தந்திரம்' படத்தில் நடிகர் தனுஷ் உடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வழங்கினார். படப்பிடிப்பு லண்டனில் என்றனர். மரைன் இன்ஜினியராக இருந்த போது பல நாடுகளுக்கு சென்றுள்ளேன்.
ஆனால் லண்டன் செல்வது அதுவே முதல் பயணம். வீட்டில் இருந்த பாஸ்போர்ட்டை மீண்டும் எடுத்த போது வேலைக்கு செல்ல போகிறாயா என பெற்றோர் கேட்டனர். ஆம், ஷூட்டிங்கிற்காக லண்டன் செல்ல போகிறேன் என படம் குறித்து தெரிவித்து சென்றேன். தனுஷ் உடன் ஏற்கனவே மாரி படத்தில் நடித்திருந்ததால் என்னை பார்த்தவுடன் தெரிந்து கொண்டார்.
அவரை 'பில்டப்' செய்து 'மதுரை ரவுடியை' லண்டனில் 'டான்' ஆக அழைத்து வருவது முதல் படம் முடியும் வரை அவருடன் பயணிக்கும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். இதுவரை 30 படங்கள் வரை நடித்துள்ளேன்.
இயக்குனர் அருண் மாதேஷ் 'டிசி' படத்தில் எனக்கான கதாபாத்திரம் பற்றி சொல்லும் போது என்னை சுற்றியே முழுக் கதையும் இருக்கும் என்றார்.
கதாபாத்திரத்திற்கு தகுந்தாற் போல உடல் எடை அதிகரிக்க வேண்டியிருந்தது.
முதலில் நான் கதாபாத்திரத்திற்கு பொருந்துவேனா என்ற சந்தேகத்தில் அப்பட ஹீரோ லோகேஷ் இருந்தார். ஆனால் ஷூட்டிங் சென்றதும் உங்களின் கதாபாத்திரம் படம் வெளியாகும் போது மக்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்றார்.
அவர் சொன்னதை போலவே தற்போது படத்திற்கும், எனது கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாம் என்னவாக நினைக்கிறோமோ, அதை தொடர்ந்து முழு முயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்.
