UPDATED : ஜூலை 19, 2026 08:45 AM
ADDED : ஜூலை 18, 2026 05:02 PM

சதுரங்கப் போட்டி துவங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. மற்ற மாணவர்கள் உற்சாகமாக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்துக்குள், ஊன்றுகோல் உதவியுடன் அமைதியாக வந்து அமர்ந்தார் ஒரு மாணவர். பேசுவதற்கும், நடப்பதற்கும் சிரமம் இருந்தாலும், சதுரங்க காய்களை நகர்த்த துவங்கிய அடுத்த நொடியே அனைவரது பார்வையும் அவர் மீது திரும்பியது. அவர்தான் திருப்பூர் கே.செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் முகிலன்.
இயல்பாக பேச முடியாது. மற்றவர்களைப் போல வேகமாக நடக்கவும் முடியாது. ஆனால், அவர் காட்டும் சுறுசுறுப்புக்கு முன், மற்ற எல்லாம் விஷயமும் தோற்று போகிறது. பள்ளி அளவோ, வட்டார அளவோ, சதுரங்கம் மற்றும் கேரம் போட்டி என்றாலே முதலில் பெயர் பதிவு செய்வது முகிலன்தான். போட்டியில் வெல்வதைவிட, அதில் பங்கேற்பதையே அவர் மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கருதுகிறார்.
''வெற்றியோ, தோல்வியோ... போட்டிக்குச் சென்று விளையாட வேண்டும் என்பதுதான் அவருக்கு முக்கியம். போட்டி என்றாலே முதல் ஆளாக கையை உயர்த்தி பெயர் பதிவு செய்யச் சொல்வார்,''என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை தெய்வக்கனி.
முகிலனின் இந்த ஆர்வத்திற்கு அவரது குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தந்தை கமலக்கண்ணனும், இல்லத்தரசியான தாய் இந்துமதியும், ''எங்கு போட்டி இருந்தாலும் எங்களை அழைத்துச் செல்லுங்கள்; நாங்களும் வருகிறோம,'' என்று பள்ளிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.
''முதலில் முகிலனின் செயல்பாடுகள் வித்தியாசமாகத் தோன்றின. ஆனால், இன்று வகுப்பறையிலும், விளையாட்டிலும் மற்ற மாணவர்களைப் போலவே துடிப்புடன் இருக்கிறார்,'' அவரின் திறமைக்கு கட்டியம் கூறுகிறார் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீலதா.
'அகல்விளக்கே ஆயினும் துாண்டுகோல் வேண்டும்' என்பது போல, முகிலனின் வாழ்க்கையில் அந்தத் துாண்டுகோலாக பெற்றோரும், ஆசிரியர்களும் இருக்கின்றனர். அவர்களின் ஊக்கமும், முகிலனின் தளராத மன உறுதியும் தொடர்ந்தால், சதுரங்கம் மற்றும் கேரம் போட்டிகளில் இன்னும் பல உயரங்களை அவர் எட்டுவது உறுதி. சில வெற்றிகள் பதக்கங்களில் அளவிடப்படுவதில்லை; மன உறுதியிலும், விடாமுயற்சியிலும் அளவிடப்படுகின்றன. அந்த வகையில், முகிலன் ஏற்கனவே பலரின் இதயங்களை வென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சில வெற்றிகள் பதக்கங்களில் அளவிடப்படுவதில்லை; மன உறுதியிலும், விடாமுயற்சியிலும் அளவிடப்படுகின்றன. அந்த வகையில், முகிலன் ஏற்கனவே பலரின் இதயங்களை வென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும்
