ADDED : ஜூலை 18, 2026 04:52 PM

‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றும், ‘விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்றும் தமிழ் கூறும் நல்லுலக அறிஞர்களால் போற்றப்படும் கம்பன், தமிழ் இலக்கிய உலகின் ஈடு இணையற்ற பெருங்கவிஞர்.
வால்மீகியின் ராமாயணத்தை தழுவி, தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப அவர் இயற்றிய ‘கம்பராமாயணம்’ 10,500 பாடல்களைக் கொண்ட ஒரு மாபெரும் பக்தி இலக்கிய காவியம். பக்தி, அறம், கவிநயம், மனித உணர்வுகள் ஆகியவற்றைத் தன்னுள் அடக்கிய கம்பனின் கவித்திறன், காலங்களைக் கடந்தும் தமிழ் மொழியின் தனித்த மகுடமாகத் திகழ்கிறது.
தொடர்ந்து, 30 ஆண்டுகளாக கம்பனின் இலக்கியத்துடன் பயணித்து வரும், கோவை கம்பன் கழகச் செயலாளர் முருகேசன், சமீபத்தில், அவிநாசியில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
சம காலத்தில் இவ்வளவு நுணுக்கமான கம்பனை பற்றி, அதுவும் எளிதில் புரியும் வண்ணம் பேசிக்கூடிய பேச்சாளர்களில் முருகேசன் தனித்துவம் பெறுகிறார். அவரின் இலக்கிய பயணம் குறித்து, உரையாடினோம்...
எனது தமிழ் இலக்கியப் பயணத்தை அரசு மற்றும் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லுாரிகளில் துவக்கினேன். கல்லுாரி பருவத்தில் எனது பேராசிரியர்கள் தமிழ் மொழியின் மீதும், பாடல்களின் மீதும் ஏற்படுத்திய ஆழ்ந்த விருப்பமே இன்றைய வெற்றிக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. பள்ளிப் பருவத்திலேயே கம்பராமாயண பாடல்களை மனப்பாடம் செய்யும் வழக்கம் என்னிடம் இருந்தது.
கல்லுாரியில் திருவாசகம், தேவாரம் போன்ற சைவ இலக்கியங்களோடு கம்பனின் பாடல்களையும் பயின்றேன். ஒரு கண்ணில் சைவம், ஒரு கண்ணில் வைணவம் என்ற சமநோக்குடன் கம்பராமாயணத்தை தொடர்ந்து பயின்ற எனக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கோவை கம்பன் கழகத்தில், இளம்பிறையின் பட்டிமன்றத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், கம்பன் கழகத்தின் துணைச் செயலாளராக பொறுப்பேற்று, கல்லூாரிகளுக்கு சென்று கம்பனை கற்பிக்க துவங்கினேன்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ரீல்ஸ், முகநுால், ஏஐ போன்ற தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தால் மாணவர்களிடையே இலக்கிய ஆர்வம் சற்றே குறைந்துள்ளது. கடந்த, 2015 மற்றும் கொரோனா காலகட்டத்துக்கு முன் வரை, கம்பராமாயண போட்டிகளுக்கு கடுமையான போட்டி இருக்கும். ஏராளமான மாணவர்கள் பங்கேற்பார்கள்.
ஆனால், தற்போது மாணவர்களை ‘கம்பராமாயணம் படி’ என்று அழுத்தம் கொடுத்துத் தான் படிக்க வைக்க வேண்டியுள்ளது. எனினும், இலக்கியம் கற்றால் உலகளவில் அடையாளம் கிடைக்கும், தொலைக்காட்சிகளில் பேசலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, பேச வைக்கிறோம். கடந்த, 2005ம் ஆண்டு முதல் கோவை கம்பன் கழகம் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் நேரில் சென்று, போட்டிக்கான தலைப்பையும் பரிசுத்தொகையை வழங்கி போட்டிகளை நடத்துகிறது. கடந்த ஆண்டு தமிழக அளவில் நடத்தப்பட்ட போட்டியில், 71 பேர் பங்கேற்றனர்.
இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக, பொறியியல் மற்றும் சட்டம் படிக்கும் பிற துறை மாணவர்களே முதல் பரிசுகளை வென்றனர். தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமின்றி, பிற துறை சார்ந்தவர்களும் தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. இதுவரை, 15-க்கும் மேற்பட்ட சிறந்த பேச்சாளர்களை வெளிநாடுகளுக்கு செல்லும் அளவுக்கு கோவை கம்பன் கழகம் உருவாக்கியுள்ளது.
‘பத்தாயிரம் கவிதைகளை முத்தாகச் சொல்லிச் சென்ற கம்பனுக்கு ஈடே இல்லை,’ என்று கவியரசு கண்ணதாசன் கூறுகிறார். திரைத்துறையில் கம்பனின் கவித்துவத்தை கொண்டு சேர்த்த பெருமை கண்ணதாசனையே சாரும். கம்பனின் வழியில் ஊறித் திளைத்த கண்ணதாசனை, ‘கம்பனுக்குப் பின் கண்ணதாசன்’ என்று சொல்வது மிகப்பொருத்தமானது.
கம்பனைப் பேசவும், இலக்கியத்தை வளர்க்கவும் ஆள் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வந்துவிடக் கூடாது என்பதில் கோவை கம்பன் கழகம் உறுதியாக உள்ளது. பட்டிதொட்டியெங்கும் கம்பனைப் பரப்புவதன் மூலமே தமிழ்நாட்டின் பண்பாட்டை செப்பனிடவும், காக்கவும் முடியும். இளைஞர்கள் மத்தியில் இந்த விருப்பத்தை மென்மேலும் வளர்த்து, கம்பனின் காவியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியைத் தொடர்ந்து செய்வோம்.
இவ்வாறு கம்பனின் தமிழை சுவாசித்து வாழ்ந்து கொண்டு, பட்டிதொட்டியெங்கும் அவரின் புகழ் பரப்பி வரும் முருசேகனுக்கு, 2019ம் ஆண்டின் தமிழக அரசின் ‘கம்பன் விருது,’ கிடைத்தது, அவரின் இலக்கிய பயணத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
‘பத்தாயிரம் கவிதைகளை முத்தாகச் சொல்லிச் சென்ற கம்பனுக்கு ஈடே இல்லை,’ என்று கவியரசு கண்ணதாசன் கூறுகிறார். திரைத்துறையில் கம்பனின் கவித்துவத்தைக் கொண்டு சேர்த்த பெருமை கண்ணதாசனையே சாரும். கம்பனின் வழியில் ஊறித் திளைத்த கண்ணதாசனை, ‘கம்பனுக்குப் பின் கண்ணதாசன்’ என்று சொல்வது மிகப்பொருத்தமானது
