பிறந்த நாள் பரிசாக மரக்கன்று :குழந்தையின் நல்லெண்ணம் பெரியவர்களுக்கே பாடம்
பிறந்த நாள் பரிசாக மரக்கன்று :குழந்தையின் நல்லெண்ணம் பெரியவர்களுக்கே பாடம்
UPDATED : ஜூலை 18, 2026 05:26 PM
ADDED : ஜூலை 18, 2026 04:52 PM

பொதுவாக, குழந்தைகளின் பிறந்தநாள் என்றாலே புத்தாடை, கேக், மிட்டாய், நண்பர்களுக்கு இனிப்பு வழங்குவது என மகிழ்ச்சி நிரம்பியிருக்கும். ஆனால், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள கல்லாங்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், ஒரு சிறுமியின் பிறந்தநாள் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய பரிசு மிட்டாய் அல்ல... 140 மரக்கன்றுகள்!
மூன்றாம் வகுப்பு மாணவி தன்யாவர்ஷினி, தனது பிறந்தநாளில் பெற்றோரிடம் மரக்கன்றுகள் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். அவற்றை பள்ளிக்குக் கொண்டு வந்து, நண்பர்களுடன் சேர்ந்து நட்டார். இன்று அந்தக் கன்றுகள் வளர்ந்து பசுமையைப் பரப்பத் தொடங்கியுள்ளன.
''வகுப்பில் ஆசிரியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒருநாள், 'சுற்றுச்சூழலைக் காக்க நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு, 'மரக்கன்று நட வேண்டும்,' என்றார். மரங்கள் இருந்தால்தான் நல்ல காற்றும், மழையும் கிடைக்கும் என்ற ஆசிரியரின் வார்த்தை என் மனதில் பதிந்துவிட்டது,'' என்று மழலை மாறாத குரலில் சொல்கிறாள் தன்யாவர்ஷினி.
அந்த ஒரு வார்த்தைதான், ஒரு சிறுமியின் பிறந்தநாளையே பசுமைத் திருநாளாக மாற்றியது. அதோடு நிற்கவில்லை. சமீபத்தில் நடந்த காமராஜர் பிறந்தநாளையொட்டி (கல்வி வளர்ச்சி நாள்) மேலும் 40 மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கியுள்ளார்.
''ஒவ்வொரு அரசு விழாவுக்கும் மரக்கன்றுகள் வழங்கி, என் பள்ளியையும் சுற்றுப்புறத்தையும் பசுமையாக்க வேண்டும்,'' என்று உற்சாகமாகச் சொல்லும் தன்யாவர்ஷினி, தனது நண்பர்களையும் மரம் நட ஊக்குவித்து வருகிறார்.
ஒரு வகுப்பறையில் ஆசிரியர் விதைத்த சிறிய சிந்தனை விதை, இன்று நுாற்றுக்கணக்கான மரங்களாக முளைத்து, ஒரு பள்ளி வளாகத்தையே பசுமைப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. சில நேரங்களில், ஒரு குழந்தையின் நல்ல எண்ணம்... பெரியவர்களுக்கே ஒரு பாடமாக மாறிவிடுகிறது.
