ADDED : மார் 16, 2025 12:23 PM

கேரள பல்கலையில் எம்.ஏ., மியூசிக்கில் முதல் ரேங்க் பெற்றதுடன் மியூசிக்கில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் ஏ கிரேடு ஆர்டிஸ்ட் ஆன இவர் 2009ல் அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய தேசிய மியூசிக் போட்டியில் முதலிடத்தை வென்றிருக்கிறார். மத்திய அரசின் இளைஞர் நலத்துறை சார்பில் சீனா சென்ற கலைக்குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார்.
வித்யாவாணி விருது, குருவாயூரப்பன் ஞானஞ்சலி சுவர்னா முத்ரா, சத்யசாய் சங்கீத புரஷ்கரம், பண்ணிசை அரசி, யுவ சங்கீத புரஷ்கார், இசை சுடர், சிறந்த பெண் பாடகி, யுவ ஸ்ரீ கலா பாரதி, மதுரைமணி அய்யர் விருது, டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெல்லாஷிப் விருது என வீடு முழுதும் விருதுகள் இவரது கானகுரலுக்கு கவுரவம் தேடி தந்துள்ளன.
நாடு முழுவதுமுள்ள சங்கீத சபாக்களில் இவரது கர்நாடக சங்கீதம் ஒலித்து வருகிறது. திருவனந்தபுரம் ஸ்ரீ சுவாதி திருநாள் அரசு இசைக்கல்லுாரியில் சிறப்பு பேராசிரியையாக பணிபுரிதுள்ளார். தற்போது கொச்சி மகாராஜா கல்லுாரியில் இசைத்துறை உதவி பேராசிரியையாக பணிபுரிகிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
வீட்டில் எப்போதுமே பஜனை சம்பிரதாயங்கள் உண்டு. சுலோகங்கள், விருத்தங்களும் பாடுவதுண்டு. இதனால் சுவாசத்திலேயே இசை கலந்திருக்கிறது.
இந்த ராகத்துக்கு என்ன பெயர் என்பது போன்ற கேள்விகளை அப்பா அடிக்கடி கேட்பார். சரியாக பதிலளித்தால் ரூ.5 கொடுத்து பாராட்டுவார். இப்படி என்னை குடும்பத்தினர் இத்துறையில் ஊக்குவித்தனர். துவக்கப்பள்ளி படிக்கும் போதே மேடை ஏறி விட்டேன். அண்ணன், தாத்தா கச்சேரிகள் மட்டுமின்றி வேறு வித்வான்களின் கச்சேரிகளுக்கும் அடிக்கடி செல்வேன். எப்படி அவர்கள் எப்படி பாடுகிறார்கள். அவர்கள் சாரீரத்தை எப்படி அமைத்து கொண்டுள்ளனர். இந்த ராகத்தை இப்படி பாடலாமா என எனக்குள் கேள்வி கேட்டு விடைகளையும் தெரிந்து கொள்வேன்.
எப்போதுமே சங்கீதம் தொடர்பான சிந்தனை தான். வேறு எதுவும் பெரிய விஷயமாக படவில்லை. சிலருக்கு கார் ஓட்ட பிடிக்கும். சமையல் செய்ய பிடிக்கும். இது எல்லோருமே சாதாரணமாக செய்ய கூடியது தான். ஆனால் பகவான் அதற்கு மேல் ஒரு விஷயத்துக்காக நம்மை தேர்வு செய்திருக்கிறார். அதுதான் இந்த ஜென்மத்துல முக்கியம் என யோசிப்பேன். அதனால் எனக்கு சங்கீதம் தான் பெரிதாகப்பட்டது.
சில கச்சேரிகளில் நான் பாட ஆரம்பிக்கும் போதே அரங்கத்தில் கைத்தட்டல் எழும். பார்வையாளர்கள் அதை தான் கேட்க ஆசைப்பட்டுள்ளனர். அந்த பாடலை தான் நான் பாடப்போகிறேன் என எதிர்பார்த்திருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்த பாடல் எப்படி எனக்கு தெரியும். ஆனால் அதுபோன்று பாடத்துவங்கும் போதே எழும் ஆரவாரம் மூலம் இறைவன் ஆசி வழங்குவதாகவே கருதுகிறேன். இந்த பாராட்டு ஒவ்வொரு கச்சேரியிலும் தொடருகிறது. இதை தான் பெரிய விருதாக கருதுகிறேன். இளைய தலைமுறையினருக்காக 'நாயகி' என்ற பவுண்டேஷனை துவக்கியுள்ளேன். இதன் மூலம் கர்நாடக சங்கீதத்தை கற்று தருவதுடன் ஒவ்வொரு ஆண்டும் எட்டு பேருக்கு தலா இரு கச்சேரிகளுக்கும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறேன். கர்நாடக சங்கீத கச்சேரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருவதுடன் புதியவர்களும் கச்சேரிகளுக்கு வர வேண்டும் என்பது தான் என் ஆசை. இருக்கும் வரை சங்கீதமே மூச்சாக இருக்க வேண்டும் என்றார்.
இவரை வாழ்த்த office.njn@gmail.com