/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
என் பாட்டுத் தவம்: தவ புதல்வி ராஜீவி
/
என் பாட்டுத் தவம்: தவ புதல்வி ராஜீவி
ADDED : செப் 07, 2025 10:44 AM

தியாகராஜ பாகவதர் காலம்தொட்டு பாப், கவர் அப், ராப், இண்டி ஆல்பம் வரை பாடல்கள் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலானோருக்கு மன அமைதிக்கு சிகிச்சை தரும் இன்ஸ்டன்ட் டாக்டராகவும், நினைவுகளை மீட்டெடுக்க தூண்டுகோலாக இருப்பது பாடல்கள் என்பதில் சந்தேகமிருக்காது. அதனால்தான் சினிமாவில் நடிகர், நடிகைகள் தாண்டி பாடகர்கள், பாடலாசிரியர்களுக்கென்று தனித்தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வரிசையில் தனக்கே உரிய வழியில் தடம் பதித்து வருகிறார் பாடகி ராஜீவி. அவரிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
அப்பா கணேஷ் பிரபல கர்நாட்டிக் பஜன் பாடகர். அம்மா தீபா மியூசிக் டீச்சர். எனது இசை பயணத்தில் முதல் குரு அம்மாதான். வீட்டில் பெற்றோர்கள் இருவருமே சங்கீதத்தில் கைதேர்ந்தவர்கள் என்பதால் எந்நேரமும் வீட்டில் பாட்டும், பஜனைகளும் கேட்டுக்கொண்டே இருக்கும். இதனால் பாடகி ஆக வேண்டும் எனும் எண்ணம் சிறுவயதிலே மனதில் பதிந்துவிட்டது.
8 வயது முதல் பஜன் நாம சங்கீர்த்தனம் பாடி வருகிறேன். 12 வயதிலிருந்து போட்டிகளில் பங்கேற்று பாடி தொடங்கினேன். பி.காம்., படித்து முடித்தநேரம், டிவி நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் வெற்றி பெற்றதுதான் பாடகியாக எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.
ஆன்மிகத்தில் பஜன், அபங் பாடியபடியே சினிமா பாடல்களையும் பாட கற்றுக்கொண்டேன். என்னுடைய முதல் சினிமா பாடல் வாய்ப்பு நான் பள்ளி படிக்கும்போது கிடைத்தது. இளையராஜா இசையில் 'ரெட்டை சுழி' படத்திற்காக பாடினேன். தொடர்ந்து ஹிந்தியில் 'பா' என்ற படத்தில் 'புத்தம் புது காலை' பாடலின் ஹிந்தி வெர்சன், இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் 'டிரைவர் ஜமுனா' படத்தில் 'ஆனந்தன் தவம் ஏன்' என்ற பாடலையும் பாடி உள்ளேன்.இதுதவிர டா டா, சிக்கந்தர், கோர்ட் உள்ளிட்ட நிறைய படங்களில் பிளேபேக்கில் பாடியிருக்கிறேன்.
குறிப்பிட்டு சொன்னால் 'பாரதி கண்ணம்மா' சீரியலின் 'டைட்டில் டிராக்' நான் பாடியதுதான். தற்போது 'இந்தியன் கோரல் அன்சாம்' குழுவில் இணைந்து பாடல்கள் பாடி வருகிறேன். எனக்கு கிடைத்த கவுரங்கள், விருதுகளில் 'வார்த்தாளி இசை பேரொளி', 'நந்தா தீபம்' உள்ளிட்டவற்றை பொக்கிஷமாக கருதுகிறேன். MUSIC என்றால் Minute Understanding of Sound in Creation எனது அப்பா அடிக்கடி சொல்வார்.
மியூசிக் பொதுவாக மனதை அமைதிப்படுத்துவதுடன் ஒரு நிலைப்படுத்தவும் செய்யும். நாம் செய்ய நினைக்கும் காரியத்தில் எண்ணத்தை குவியமுற செய்வதில் இசைக்கு மிகப்பெரும் சக்தி உள்ளது. சினிமாத்துறையில் இப்போது புது, புது இசையமைப்பாளர்கள் வந்துவிட்டனர்.
அவர்களின் 'இசை', ஒவ்வொருவரும் யார், யார், அவர்களின் திறமைகள் என்ன என்பதை மக்களுக்கு அடையாளப்படுகிறது. அந்த வகையில் பாடகர்களையும் மக்கள் கொண்டாடுவதற்கு தவறுவதில்லை.மாணவியாக தொடங்கி இன்று பல மாணவர்களுக்கும் பாட்டு வகுப்பெடுக்கும் டீச்சராக வளர்ந்திருப்பதை நினைக்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது.மாணவர்களுக்கு பாட்டு சொல்லி தருவதன் மூலம் சங்கீதத்தை இன்னும் மெருகுற கற்றுக்கொள்கிறேன். இது கீர்த்தனைகள், ராகங்களில் நான் செய்த தவறுகளை திருத்தம் செய்யவும், மாணவர்களை நல்ல குரல் வளத்தில் பாட வைக்கவும் உதவுகிறது.
பெண் பாடகர்களில் சுசீலா, சித்ரா, ஸ்வர்ணலதா, ஸ்ரேயா கோஷல் ஆகியோர் குரல்களில் மெய்மறந்துவிடுவேன். பாட்டு தவிர பரதம், பொழுதுபோக்குக்காக ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு. வெளிநாடுகளில் சிங்கப்பூரில் பாடிய அனுபவம் மறக்கமுடியாதது. தற்போது ' பாட்டு'தான் எல்லாம் என ஆனதால் திருமணம் பற்றி துளியும் சிந்திக்கவில்லை. அப்பா, அம்மாவின் பெயர் காப்பாற்றும்படி சிறந்த பாடகியாக வரவேண்டும் எனும் முயற்சியில் முன்னேறி செல்கிறேன். கடவுள் வரம்தரும் நாள் வரை என் பாட்டு தவம் தொடரும் என்றார் சிரித்தபடி.