/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'ரீல்ஸ்' இந்திரஜித் எம்.பி.பி.எஸ்.,
/
'ரீல்ஸ்' இந்திரஜித் எம்.பி.பி.எஸ்.,
ADDED : நவ 24, 2024 12:59 PM

டாக்டரா... நடிகரா... என பார்ப்பவர்கள் குழம்பும் வகையில் அசத்தலாக, காமெடியாக நடித்து அசத்தி வருகிறார் இந்த 24 வயது இளைஞர், உண்மையிலேயே மருத்துவ மாணவர். கொரோனா காலத்தில் விளையாட்டாக 'ரீல்ஸ்' வெளியிட ஆரம்பித்தது இன்று அதுவே அவருக்கு அடையாளமாகிவிட்டது. ஒரு பக்கம் மருத்துவம், ஒரு பக்கம் திரைக்கதை, வசனம், நடிப்பு என 'பிஸி'யாக இருக்கும் இந்திரஜித்திடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.
''நான் ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்தவன். அப்பா மகேஸ்வரன், அம்மா வனிதா. வீட்டிற்கு ஒரே பிள்ளை. டாக்டராகணும் ஆசைப்பட்டாங்க. நீட் தேர்வில் 615 மார்க் பெற்று சென்னை மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்தேன். இப்போது 'ஹவுஸ் சர்ஜன்' மாணவராக உள்ளேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. நான் இருக்கும் இடத்தில் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். கல்லுாரியில் சேர்ந்த பிறகு முதல் வருஷம் வரை படிப்பில் கவனமாக இருந்தேன்.
2019ல் கொரோனா ஊரடங்கு வந்தது. அப்போதுதான் 'ரீல்ஸ்' வெளியிடலாம் என ஐடியா உருவானது. விளையாட்டாக ஆரம்பித்தேன். இன்று பல ஆயிரம் பேருக்கு தெரிந்தவனாக இருக்கிறேன். பெரும்பாலும் 'ரீல்ஸ்' வீடியோக்கள் கணவன், மனைவி இடையே தகராறு, நண்பர்கள் சார்ந்துதான் இருக்கிறது. அதில் இருந்து நான் தனியாக தெரிய வேண்டும் என முடிவு செய்து, டாக்டர்களின் அன்றாட பணிகளில் நடக்கும் விஷயங்களை காமெடியாக நடித்து 'ரீல்ஸ்' வெளியிட ஆரம்பித்தேன்.
என்னென்ன பண்ணலாம் என அவ்வப்போது அப்பாவிடம் பேசுவேன். அவர் கொடுக்கிற ஐடியாபடி திரைக்கதை எழுதி நடிக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்றும் அப்பாவிடமும்தான் 'ரீல்ஸ்'க்கான கரு கேட்டு எழுதி வருகிறேன். கடந்தாண்டு முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ரீல்ஸ்' வெளியிட்டு வருகிறேன். உதாரணமாக ஆபரேஷனை தள்ளிப்போடுவதால் ஏற்படும் பாதிப்பு, கவனக்குறைவாக மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னை என ஒவ்வொன்றையும் காமெடியாக கொடுத்தபோது மக்களிடையே நல்லா 'ரீச்' ஆனது.
இப்போது எனக்கு பக்கபலமாக சக மாணவர்கள் சீனியர், ஜூனியர் என வித்தியாசமின்றி இருந்து நடித்து கொடுக்கிறார்கள். திங்கள் முதல் சனி வரை படிப்பு, பயிற்சி இருக்கும். அந்நாட்களில் நடக்கும் விஷயங்களை குறிப்பெடுத்துக்கொண்டு ஞாயிறு விடுமுறை நாளில் திரைக்கதை எழுதுவேன். பொதுவாக 8 மணி நேரம் துாங்க வேண்டும் என டாக்டர்கள் கூறுவார்கள். ஆனால் மருத்துவ மாணவரான நான் 'ரீல்ஸ்' எடுக்க வேண்டும் என மெனக்கெடலுக்காக 4 மணி நேரம்தான் துாங்குகிறேன்.
எனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த டாக்டர், டான் படத்தின் தலைப்பையே எனது இன்ஸ்டா பக்க 'ஐடி'யாக 'டாக்டர் டான்' என வைத்தேன். என் 'ரீல்ஸ்'சை பார்த்து பிரசவ காலத்திற்கு பிறகு ஏற்படும் மனஅழுத்தம் குறைந்ததாக ஒரு பெண் எனக்கு தெரிவித்தபோது ரொம்பவே சந்தோஷபட்டேன். இப்போது 'ஹவுஸ் சர்ஜன்' என்பதால் 'ரீல்ஸ்' வெளியிடுவது சிரமம் என்றாலும், 'புலி வாலை பிடித்ததை போல்' விடமுடியாமல் அதையும் செய்து வருகிறேன். என்னை பொறுத்தவரை மகிழ்ச்சி தரும் மருத்துவராக இருக்க வேண்டும். அதைதான் 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டு வருகிறேன். இனி மருத்துவ குறிப்புகள் குறித்து காமெடியாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்றார்.