/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சங்க இலக்கிய பாடல்கள் ஹிந்தியில்! மொழிபெயர்ப்பிற்கு ஒரு வீரலட்சுமி
/
சங்க இலக்கிய பாடல்கள் ஹிந்தியில்! மொழிபெயர்ப்பிற்கு ஒரு வீரலட்சுமி
சங்க இலக்கிய பாடல்கள் ஹிந்தியில்! மொழிபெயர்ப்பிற்கு ஒரு வீரலட்சுமி
சங்க இலக்கிய பாடல்கள் ஹிந்தியில்! மொழிபெயர்ப்பிற்கு ஒரு வீரலட்சுமி
ADDED : மார் 30, 2025 03:07 AM

'ஒவ்வொரு மனிதருக்கும் தாய் மொழி ஆடை போன்றது; பிற மொழி நம்மை அழகுபடுத்துவதற்கான அணிகலன்கள் போன்றது' என்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலை மொழிபெயர்ப்பு துறை பேராசிரியை வீரலட்சுமி.
பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், இலக்கிய, நாவல்கள் மொழி பெயர்ப்பாளர் என தமிழ் இலக்கியவாதிகள் வட்டத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில் சங்க இலக்கிய பாடல்களை ஹிந்தியில் மொழி பெயர்த்து தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இவர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம்...
பிறந்தது, படித்தது எல்லாம் மதுரையில் தான். பள்ளி காலங்களிலேயே தமிழ் மீது தீராத ஆசை இருந்தது. மொழி பெயர்ப்பு மீது இருந்த தாகத்தால் ஹிந்தி, ஆங்கிலம், ஜப்பானிஷ் மொழிகளை கற்றுக்கொண்டேன். மலேசியா பல்கலையில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய அனுபவத்தில் தஞ்சை தமிழ் பல்கலையில் 'மொழிபெயர்ப்புத் துறை' பேராசிரியர் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் மொழிபெயர்ப்புக்கு என ஒரு துறை உள்ளது தஞ்சை பல்கலையில் தான்.
சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வுசார் நுண்ணறிவு, படைப்பாக்க நெறியில் மேலை இலக்கிய ஆளுமை, வெள்ளை பறவையின் இலக்கிய வானம் உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளேன். அதையும் தாண்டி மொழி பெயர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயணத்தை பிரதானமாக தற்போது துவங்கியுள்ளேன்.
மொழி பெயர்ப்பு தொல்காப்பிய காலத்திலேயே இருந்துள்ளதை பல ஆய்வுகளில் அறிய முடியும். அதிக எண்ணிக்கையில் அறிவியல் நுால்கள், இலக்கியங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன. இவற்றை தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. தற்போது திறன் வாய்ந்த மொழி பெயர்ப்பாளர்களுக்கு உலக அளவில் தேவை அதிகரித்துள்ளது. பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி., நடத்தும் தேசிய தகுதி தேர்வில் மொழிபெயர்ப்பு பாடம் சேர்க்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என் மொழி பெயர்ப்பு பயணத்தில் ஜப்பானிய, ஜென் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தது, ஓடிடி தளங்களில் சில ஜப்பானிய படங்களுக்கு தமிழ் வசனம் எழுதியதை முக்கியமானதாக குறிப்பிடலாம். சமீபத்தில் சங்க இலக்கியத்தில் 50 பாடல்களை அர்த்தம் மாறாமல் ஹிந்தியில் மொழி பெயர்த்துள்ளது வரவேற்பை தந்தது. அதற்கு இணையான ஹிந்தி வார்த்தைக்கான தேடல் சவாலாக இருந்தது.
குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற 'சான்றோர்' என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் நேரடியான வார்த்தை இல்லை. அதற்கு கொஞ்சம் நிகராக இருந்த 'மகான்', 'மகாத்மா' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினேன். அறிவியல் தொழில்நுட்ப சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழில் தான் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. பிற மொழிகளில் அவற்றின் ஆங்கில சொல்லே பயன்படுத்தப்படுகிறது. மொழியும், இலக்கியமும் மனிதர்களை செம்மைப்படுத்துகின்றன. மொழி வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் என்கிறார் வீரலட்சுமி.