/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பேசுவது எப்படி சொல்லித்தருகிறார் சண்முக திருக்குமரன்
/
பேசுவது எப்படி சொல்லித்தருகிறார் சண்முக திருக்குமரன்
பேசுவது எப்படி சொல்லித்தருகிறார் சண்முக திருக்குமரன்
பேசுவது எப்படி சொல்லித்தருகிறார் சண்முக திருக்குமரன்
ADDED : ஏப் 27, 2025 04:45 AM

மாணவர்களின் பேச்சுக்கலையை வளர்க்கும் வகையில் மதுரையில் இலக்கியப் பேரவை அமைத்து தொடர்ந்து 150 வாரங்களாக ஞாயிறுதோறும் பேச்சுத்திறனை ஊக்கப்படுத்தி வருகிறார் மதுரை முனிச்சாலை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சண்முக திருக்குமரன்.
சிரிப்பு இனிப்பு, இலக்கியக் கருவூலம், பேசும் கலை பேச்சுக்கலை உட்பட எட்டு நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார். பட்டிமன்ற பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், சித்திரைத் திருவிழா வர்ணனையாளர், வழக்காடு மன்றத் தலைவராக தமிழ் மணக்க வலம் வரும் சண்முக திருக்குமரன், நான் படித்த தமிழுக்கு செய்யும் பெருமையாக தமிழில் திறம்பட பேசும் மாணவர்களை உருவாக்கி வருகிறேன் என்கிறார்.
மதுரை செவன்த்டே பள்ளி தமிழாசிரியராக, விகாசா பள்ளி தமிழ்த்துறைத் தலைவராக, உதவி தலைமையாசிரியராக இருந்தேன். அரசு வேலை கிடைத்த பின் 2010ல் மதுரை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானேன். தமிழார்வம் என் தந்தை சண்முகத்திடம் இருந்து வந்தது. தமிழராசிரியரான தந்தை பதவி உயர்வுக்காக எம்.ஏ., தமிழ் எழுத ஆசைப்பட்டார். என்னிடம் புத்தகங்களில் குறிப்பெடுக்க சொன்னார். நான் எழுதி கொடுத்ததை படித்து தேர்வெழுதி எம்.ஏ., தேர்ச்சி பெற்றார். நீயும் எம்.ஏ., தமிழ் எழுது என ஊக்கப்படுத்தினார். எம்.ஏ., சைவ சித்தாந்தம் படித்தேன்.  பி.எட்., முடித்து பிஎச்.டி தேர்ந்தெடுத்தேன். மதுரை ரயில்வே காலனி செல்வவிநாயகர் கோயிலில் தொடர்ந்து 13 ஆண்டுகள் திருமந்திர சொற்பொழிவு நிகழ்த்தினேன். திருமந்திர மொழி அமைப்பும் கருத்து புலப்பாட்ட திறனும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் முடித்தேன்.
திருமந்திரத்தை தேர்ந்தெடுத்து படித்தது வாழ்நாள் சாதனையாக நினைக்கிறேன். மனித குலத்திற்கு திருமூலரின் திருமந்திரம் சொல்லிச் சென்றவை ஏராளம். அதிலுள்ள அறிவியல் கருத்துகள் எந்த காலத்திற்கும் ஏற்றதாக உள்ளது.
'உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே... உள்ளம் பெருங்கோயில் ... ஊன் உடம்பு ஆலயம்' என்ற திருமூலரின் வார்த்தைகள் என்னை ஆன்மிக பாதையில் மாற்றியது. இன்றைக்கு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகமானதற்கு சொல்லப்படும் விஷயங்களை அன்றே திருமூலர் திருமந்திரத்தில் தெரிவித்துள்ளார். கருத்தரிப்பின் போது கணவன், மனைவி மனநிலை எப்படி இருக்க வேண்டும், கருவின் பாலினம் நிர்ணயிக்கப்படுவது தந்தையால் தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். திருமண பந்தம் கேள்விக்குறியான இக்காலத்தில் திருமந்திரம் படித்தால் மண முறிவு சிந்தனை வராது. திருமந்திர 3000 பாடல்களை தொகுத்து 'திருமந்திர முத்துகள் 300' என்ற நுாலில் எழுதியுள்ளேன்.
அறிவியல் ஆசிரியராக எளிய செய்முறை பயிற்சியுடன் அறிவியல் கற்றுத் தந்ததால் மாநில அரசின் நல்லாசிரியர் விருதும் கிடைத்தது. மதுரை எஸ்.எஸ்.காலனி திருவள்ளுவர் மன்றத்தில் தொடர்ந்து 150 வாரங்களாக ஞாயிறு தோறும் 'பேசுவது எப்படி' என கற்றுத் தருகிறோம். வாரந்தோறும் ஒரு தலைப்பு கொடுத்து பேசுவதற்கு பயிற்சி அளிக்கிறோம். பேசத் தெரிந்தவர்கள் பேச்சாளர்கள் அல்ல... பேச்சின் நுணுக்கம் தெரிந்தவர்கள் தான் பேச்சாளர்கள். இதை உணர வைப்பது தான் மதுரை இலக்கியப் பேரவை. தமிழையும் திருமந்திரத்தையும் இளம் தலைமுறையினரிடம் சேர்ப்பதே தமிழுக்கு நான் செய்யும் சேவை என்றார்.
இவரிடம் பேச: 90803 24807.

