ADDED : ஜன 25, 2026 11:03 AM

பின்னணிப்பாடகி சித்ராவின் ஸ்வர வரிசையும், ஸ்ரேயா கோஷலின் 'ஹம்மிங்' இரண்டுமே என்னை இசை உலகில் பயணிக்கச் செய்து பாடகியாக்கியது என்கிறார் மதுரை ஆனையூரைச் சேர்ந்த ஸ்ருதி.
பாட்டோடு முதுநிலை படிப்பையும் தொடரும் ஸ்ருதி, ஆறாம் வகுப்பிலிருந்தே மேடைக்கச்சேரிகளில் பாடி வரும் அனுபவத்தை விவரித்தார்.
பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போது முதல் மேடையில் பாடிய முதல் பாடலுக்கு பரிசு கிடைத்தது. அப்பா முரளிதரன் கேள்வி ஞானத்திலேயே எஸ்.பி.பி., குரலில் நன்றாக பாடுவார். ஸ்ருதிலயா என மியூசிக் ட்ரூப் வைத்துள்ளார்.
அப்பாவின் இசையார்வம் எனக்குள்ளும் பரவியதால் கர்நாடக இசை படிக்க ஆரம்பித்தேன். அவருடன் இணைந்து ஆறாம் வகுப்பு முதல், மேடைகளில் பாடி வருகிறேன். சென்னையில் கல்லுாரியில் படித்தபோது அங்கும் வாய்ப்பாட்டை தொடர்ந்தேன். மீண்டும் மதுரை வந்து கச்சேரிகளில் பாடிக் கொண்டிருக்கிறேன்.
எஸ்.பி.பி., மாதிரியே அப்பா மெலடி பாடல்கள் பாடுவார். சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... என்ற பாடலைப்பாடும் போது பிரமிப்பாக இருக்கும். மேடைகளில் அப்பா எனக்காக பாடும் பாடல் என்றால்... 'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல வந்த மகளே....' தான். அப்பாவுடன் சேர்ந்து மேடைகளில் டூயட் பாடல்கள் பாடுகிறேன். 'உன்னை விட இந்த உலகத்தில் உயர்ந்தது ஒன்றுமில்லை' என்ற பாடல் எங்களுக்கு ரொம்பவும் ஸ்பெஷல்.
எனக்குப் பிடித்த பாடலை முதலில் அம்மா ஹேமலதாவிடம் பாடிக் காட்டுவேன். அவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னபின்பே அப்பாவிடம் பாடிக் காட்டுவேன். அந்த பாட்டை கச்சேரிகளில் பாடுவேன். டிரெண்டிற்கு ஏற்றாற் போல புதிய பாடல்கள் பாடுவேன். புதிய பாடல்களில் சங்கதிகள் எடுப்பது எளிது. பழைய பாடல்கள் பாடுவது தான் சவாலாக இருக்கும்.
இசைப்பயணம் இனிதாக அப்பா ட்ரூப்பைத் தாண்டி தனியார் கச்சேரிகளிலும் பாடுகிறேன். ஓகே கண்மணி படத்தில் சித்ரா பாடிய 'மலர்கள் கேட்டேன்.... வனமே தந்தனை...' பாடலின் ஸ்வரங்கள் என் மேடைக்கச்சேரிக்கு ஊற்றாய் துணை நின்றது. சித்ராவின் ஸ்வர வரிகளைக் கேட்டபின் கர்நாடக இசையின் மீது கூடுதல் காதல் வந்தது. ஸ்வரம் வைத்து பாட ஆரம்பித்தேன்.
அதைப்போல இசை அமைப்பாளர் வித்யாசாகர் இசையில் 'தேன்... தேன்.... உன்னை தேடியலைந்தேன்' பாடலில் உதித் நாராயணன் உடன் ஸ்ரேயா கோஷல் பாடும் ஹம்மிங்.... மெர்சலாக இருக்கும். அந்த 'ஹம்மிங்' தான் என்னை இன்னும் பாடத்துாண்டியது.
உயிர்ப்பிக்கும் மெலடி எனக்கு மெலடி பாடல்கள், குறிப்பாக இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் வெளிவந்த 1990- 2000 காலக்கட்ட பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. தனிமையில் விரும்புவது மெலடி பாடல்களே, அதிலும் எனது 'பிளே லிஸ்ட்' வித்யாசாகருக்கு மட்டும் தான். அவரது மலையாளப்பாடல்களும் கேட்பது சுகமாக இருக்கும்.
கச்சேரிக்குத் தயாராகும் போது சாய் அபயங்கர், அனிருத் இசையில் வெளிவந்த பாடல்களைப் பாடுகிறேன். இளையோர் கூட்டம் 'டிரெண்டிங்' பாடல்களை பொதுவெளியில் விரும்பினாலும் மெலடி பாடல்களுக்கும் மதிப்பளிக்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை படிப்பும் முக்கியம், பாட்டும் முக்கியம். ஒருசிலருக்கு பாட்டுப் பாடுவதே தொழிலாக, பேஷனாக இருக்கும்.
தொழில், விருப்பம் இரண்டுமே எனக்கு வெவ்வேறு பாதைகள், ஆனால் இரண்டையும் ஒருசேர ரசிக்கிறேன். தொடர்ந்து அப்படியே பயணிக்க விரும்புகிறேன் என்றார்.

