ADDED : ஜன 11, 2026 07:06 AM

எ ப்பவோ பள்ளியில் மனப்பாடம் செய்த ஓரிரு திருக்குறள் மட்டுமே நினைவில் உள்ள பலருக்கும், 4ம் வகுப்பு படிக்கும் மாணவி, 1,330 குறள்களையும் தங்கு தடையின்றி ஒப்பிப்பது கண்டிப்பாக ஆச்சரியம் அளிக்கும்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தளவாய்ப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ, 1,330 திருக்குறளையும் சொல்லும் திறமையுடையவர்.
சிறுமியின் அசாத்திய திறமை குறித்து, அவரது தந்தை கூறியதாவது:
தனுஸ்ரீயின் பெரியம்மாவின் மகள் இலக்கியா ஐந்தாவது படிக்கும்போதே, 1,330 குறள் ஒப்பித்தார். அதற்கு அவரது அப்பாவும் அம்மாவும் ஊக்கப்படுத்தினர். சரி, நாமும் நம் குழந்தையிடம் சொல்லி பார்க்கலாம் என்று சாதாரணமாக ஆரம்பித்தோம். தனுஸ்ரீக்கு, 3 வயது இருக்கும். பள்ளியில் சேர்த்திருக்க வேண்டும், ஆனால் கொரோனாவால் முடியவில்லை.
எழுத்து என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் திருக்குறளை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம். முதல் நாளிலேயே, 10 திருக்குறள் ஒப்பித்தார், எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒன்றாம் வகுப்பு சேரும்போதே, 100 குறள் படித்தாள். அனைவரும் பாராட்டினர், நாங்கள் ஊக்கம் கொடுத்து தினமும் குறள் படிக்க சொன்னோம். அவளும் சரி என்று தினமும் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் குறள் படித்தாள். இரண்டாம் வகுப்பு இறுதியில், 400 குறள் பயின்றாள்.
பல மேடைகளில் திறமையை வெளிப்படுத்தினாள். விடுமுறை நாட்களில் அதிகம் விளையாட மாட்டாள். காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் படிப்பாள். தினமும், 30 குறள் போல படித்தாள். மூன்றாம் வகுப்பு இறுதியில் ஆயிரம் குறள் வரை பயின்றாள். கோடை விடுமுறை முடியும் போது, அனைத்து திருக்குறளும் பயின்றாள். இதுவரை எந்த இடத்திலும் திருக்குறள் சொல்லும் போது திக்கி நின்றதே கிடையாது. திருப்பூர், திருச்சி, கரூர் என பல இடங்களில் திருக்குறள் முற்றோதலில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
திருக்குறள் மட்டுமல்லாமல் பள்ளி பாடத்திலும் நன்றாக படிப்பாள். எதையும் 'டக் டக்' என்று படித்து விடுவாள். நாங்கள் படிபடி என்று சொல்ல மாட்டோம், தானாகவே படித்து விடுவாள். ஒரு மணி நேரம் 10 நிமிடத்தில் 1330 குறளையும் கூறும் ஆற்றல் கொண்டுள்ள தனுஸ்ரீயை மிக உயர்ந்த படிப்பை படிக்க வைப்போம்.
இவ்வாறு மகள் குறித்து பெருமை பொங் மாரிமுத்து கூறியதை கேட்ட போது, 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்,' எனும் வள்ளுவப் பெருந்தகையின் குறள் நினைவில் வந்து போனது.

