/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'ஏ.ஐ.,' உதவியோடு முருகன் தாலாட்டு கலக்கும் பாடகி ஷோபிகா முருகேசன்
/
'ஏ.ஐ.,' உதவியோடு முருகன் தாலாட்டு கலக்கும் பாடகி ஷோபிகா முருகேசன்
'ஏ.ஐ.,' உதவியோடு முருகன் தாலாட்டு கலக்கும் பாடகி ஷோபிகா முருகேசன்
'ஏ.ஐ.,' உதவியோடு முருகன் தாலாட்டு கலக்கும் பாடகி ஷோபிகா முருகேசன்
ADDED : மே 03, 2025 10:39 PM

'கந்தன் ஆரிரோ' முருகன் தாலாட்டு பாடலில் செயற்கை நுண்ணறிவு காட்சிகள் வரவேற்பை பெற்றுள்ளன. முதன் முதலாக ஏ.ஐ., உதவியோடு உருவான முருகன் தாலாட்டு பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதை பாடியவர் ஷோபிகா முருகேசன். இவர் நடிகை அமலா பாலுக்கு டப்பிங் செய்துள்ளார். 10க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பாடியுள்ளார்.
இவர் கூறியதாவது: சொந்த ஊர் கோவை சின்ன வேடம்பட்டி.என் அம்மா லதா மகேஸ்வரிக்கு என்னை பாடகர் ஆக்க ஆசை. 4 வயது முதலே இசை பயில துவங்கினேன். கர்நாடக இசையில் எம்.ஏ., படித்துள்ளேன். வெஸ்டர்ன் இசை டிரினிட்டி காலேஜ் லண்டனில் 8வது கிரேடு முடித்துள்ளேன்.
2022ல் சிவராத்திரியை முன்னிட்டு பெஹாக் ராகத்தில் புத்தம் புதிய மெட்டு இசை என சிவபுராணத்தை பாடினேன். தொடர்ந்து சீரடி நாதா என்ற பாடலும் பாடினேன். இரு பாடல்களும் வரவேற்பு பெற்றன. சென்னையில் வீட்டிலேயே ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்து இந்த 'கந்தன் ஆரிரோ' ஆல்பம் பாடல்கள், சினிமா பாடல்கள், விளம்பரங்களுக்கு குரல் கொடுப்பது போன்றவை செய்து வருகிறேன். நானே ரெக்கார்டிங் செய்து பல நாடுகளில் இசை அமைப்பாளர் உடன் இணைந்து பணியாற்றுகிறேன். என் அம்மா தமிழாசிரியர் என்பதால் எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம். கவிதை போட்டி, மேடை பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 5 ஆல்பம் பாடல்கள் எழுதி, இசை அமைத்து பாடியும் உள்ளேன். 'துாவல்' திரைப்படத்தில் பாடகர் வேல்முருகன் உடன் இணைந்து 'கரிசகாட்டுல' என்ற டூயட் பாடல் பாடியுள்ளேன். விரைவில் வெளியாக உள்ளது. Sing Easy என்ற யுடியூப் சேனலில் சினிமா பாடல்கள் பாட, இசை பயிற்சி தருகிறேன்.
'கந்தன் ஆரிரோ' எனும் இந்த முருகன் தாலாட்டு பாடலுக்கு கார்த்திக் கோடகண்ட்லா இசை அமைத்தார். ஐதராபாத் ஏ.ஐ., குழு காட்சிகளை உருவாக்கியது. மனம் வருடும் இந்த தாலாட்டு பாடல் முதன் முறையாக ஏ.ஐ., வடிவில் வந்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தைகளை உறங்க வைக்கவும், அவர்கள் முருகப்பெருமான் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது. பாடலை தயாரித்தவர் லக்ஷமன் கபர்த்தி. இவருக்கு சினிமா பின்னணி இல்லை, அமெரிக்காவில் ஐ.டி., பணி. மறந்து வரும் தாலாட்டு கலாசாரத்தை திருப்பி கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்பில் கர்நாடக சங்கீதம் பயிற்றுவிக்கிறேன். இசை கற்று கொள்ளும் போது மன அழுத்தம் குறைகிறது. அமெரிக்க வாழ் இந்திய சிறுவர்கள் கற்று கொள்ளும் போது தமிழையும் கற்றுக் கொள்கின்றனர். ஒரு சிறுமி கிருஷ்ணர் பாடலை கற்க வந்து தமிழ் தெரிந்து கொண்டு, தனது தாத்தா, பாட்டியிடம் தமிழில் பேசி அசத்தினார். அவர்கள் என்னிடம் கூறி மகிழ்ந்தது நெகிழ்ச்சியாக இருந்தது என்றார்.